கடவுள் யார்
கடவுள் யார்?
இங்க பாருங்க சும்மா சாமியார பார்க்கறது, அவரு கடவுளை காட்டறேன்னு சொல்றது, இல்லையின்னா நானே கடவுளுன்னு சொல்றது, அதுவுமில்லையின்னா ஆர்ப்பாட்டமா நான் அந்த கோயிலுக்கு போனேன், இந்த கோயிலுக்கு போனேன்னு பெருமையா சொல்றது எல்லாம் பக்தியாயிடாது
உங்களுக்குன்னு ஒரு நம்பிக்கை, அதை மனசுல வச்சு மத்தவங்களுக்கு உங்களால முடிஞ்ச உதவிய செய்யறது, இல்லையின்னா யாருக்கும் துரோகம், தொல்லை பண்ணாம இருந்தாலே போதும்.
சூடான விவாதமாக நடந்து கொண்டிருந்தது அலுவலக காண்டீனில். சுபத்ரா சற்று ஓய்வு தேவைப்படுவதால் அப்படியே கப் காபி ஆர்டர் செய்து விட்டு உட்கார்ந்தவளுக்கு அடுத்த பகுதியில் இருந்து இந்த விவாதம் கேட்டு கொண்டிருந்தது.
யார் பேசுகிறது? குரலை பார்த்தால் ராமசேஷன் போல் தோன்றுகிறது. அக்கவுண்ட்சில் இருப்பவர். பக்திமான், நெற்றியில் நாமத்துடன் இருப்பவர். எதிர் குரல் வழக்கம் போல சிவசாமியின் குரல்தான். இவன் தான் அடிக்கடி இம்மாதிரி விவாதங்களில் ஈடுபடுவான். நல்ல புத்திசாலி, இருபத்தி எட்டுக்குள் அரசு தேர்வு எழுதி இங்கு பதவிக்கு வந்து விட்டவன்.
அவனது இளமையும், எல்லோரிடமும் சகஜமாய் இருப்பவனுமாக இருந்ததால் இன்று எப்படியோ ராமசேஷன் மாட்டிக்கொண்டார் போலிருக்கிறது அவரிடம். உணர்ச்சி வசப்பட்டு பேசிக்கொண்டிருந்தான்.
இவளுக்கு தற்போது அமைதி தேவைப்பட்டது, சரி எழுந்து அந்த பக்கம் போகலாம், அதற்கு முன் காப்பி ஆர்டர் கொடுத்தவனிடம் தான் வேறு இடம் போய் உட்காருகிறேன் என்று அவனுக்கு கை காண்பிக்கலாம் என்று நின்றவாறே அவனை தேடினாள்.
அதற்குள் சிவசாமியின் குரல் வேகமாய் இவள் காதுகளில் விழுந்தது, “சார் கடவுள் அப்படீங்கறவங்க நீங்க சொல்ற துறவிககிட்டயிருந்தோ அல்லது நான்தான் கடவுள் அப்படீன்னு சொல்லிகிட்டு இருக்கறவன் கிட்டயிருந்தோ வராது. அதுமட்டுமல்ல நீங்க காட்டற எந்த உருவத்துல இருந்தும் வராது. அது உங்க கிட்ட வரும்போது ஏதோவொன்னாக கூட வரலாம், அதுக்கு கூட தெரியாது நீங்க அதை கடவுளா நினைச்சுகிட்டீங்கன்னு”
எப்படியோ தனிமையில் ஒரு இடம் பார்த்து காப்பியை சுபத்ரா இரசித்து குடித்தபடி இருந்தாலும் சிவசாமியின் பேச்சும் ஒரு பக்கம் மனதுக்குள் ஓடிக்கொண்டுதான் இருந்தது.
அன்றாட பரபரப்பு முடிய ஐந்து மணியை நெருங்கி கொண்டிருந்தது அலுவலகம், சுபத்ரா தனது மேசையை பூட்டி சாவியை தோள்பையில் போட்டுக்கொண்டு கிளம்பலாம் என்று எழுந்த போது அவளது பையில் இருந்த செல்போன் கிண்கிணித்தது.
எடுத்து பார்த்தவள் வானதி பெயரை பார்த்ததும் “சொல்லு” என்றாள். அக்கா..அவள் குரலில் பதட்டம். என்னாச்சு? சொல்லு இவளுக்கும் பதற்றம் தொற்றி கொண்டது. அக்கா நான் படிச்ச காலேஜுல சர்ட்டிபிகேட் ஒண்ணு தவறிப்போய் நின்னுருச்சு, அதை அரை மணி நேரம் முன்னாடிதான் கண்டு பிடிச்சேன். அது இருந்தாதான் நாளைக்கு விசா இண்டர்வியூவுல எனக்கு சக்சஸ் ஆகும், இல்லையின்னா இன்னும் ஒரு வருசம் தள்ளி போயிடும்.
அதுக்கு நான் என்ன பண்ணனும்?
அக்கா நான் அதை ஏங்க காலேஜுல இருக்கற மேடத்துகிட்ட சொல்லி எடுத்து வைக்க சொல்லிட்டேன், நான் படிச்ச காலேஜு உனக்குத்தான் தெரியுமே, எனக்காக போயி அதை வாங்கிட்டு வந்துடேன்.
என்ன விளையாடுறயா? இப்பவே மணி அஞ்சுக்கு மேல ஆச்சு, இதுக்கு மேல நான் கிளம்பி உன் காலேஜ் பன்னெண்டு மைல் தள்ளி இருக்கு, அங்க போய் சேரும்போது எல்லாம் பூட்டிட்டு போயிடுவாங்க.
அக்கா எனக்கும் தெரியும், ஆனா யார்கிட்ட கேட்பேன்? அங்க மேடம் கிட்ட கேட்டேன். அவங்க அஞ்சரை வரைக்கும் இருப்பாங்களாம், அது வரைக்கும் கையில வச்சுருக்கேன், அதுக்குள்ள வந்து வாங்கினா வாங்கிக்குங்கன்னு சொல்லிட்டாங்க. அக்கா ப்ளீஸ் ஒரு கால் டாக்சி பிடிச்சு போக முடியுமான்னு பாரேன் எனக்காக.
மனதுக்குள் கோபம் வந்தது. இவ்வளவு பேசுகிறவள் அங்கிருந்தே கால் டாக்சி பிடித்து காலேஜுக்கு அவளே போய் விடலாமே? நினைத்தாலும் வீடு முப்பது கிலோ மீட்டருக்கு மேலே இருப்பது ஞாபகம் வர சரி போய் பார்ப்போம்,
மாலை எல்லா நிறுவனங்களும் ஒன்று போல் மூடிவிடுகிறதோ? கிட்டத்தட்ட இருபது நிமிடங்களாக ட்ராபிக் சிக்கலில் நின்று கொண்டிருந்ததை பார்தது கால் டாக்சியில் உட்கார்ந்திருந்த சுபத்ரா இப்படி நினைத்தாள். வாட்சை பார்த்தாள். ஐந்தரையை நெருங்கியிருந்தது. இனி பிரயோசனமில்லை, என்ன செய்யலாம்?
வானதியிடம் தன் நிலைமையை சொன்னாள். “அக்கா” அவள் குரல் அழுகையை காட்டியது. எப்படியாச்சும் முயற்சி பண்ணுக்கா, இல்லைன்னா ஒரு வருசம் போச்சு. மறுபடி முயற்சி பண்ணி நான் ரொம்பவும் வெறுத்து போயிடுவேன்.
இதென்ன தொல்லை, செல்போனை அணைக்கவும் ட்ராபிக் சிக்கல் விடுபட்டு கால் டாக்சி கொஞ்சம் வேகம் பிடித்தது.
கல்லூரி கம்பவுண்ட் வாசலை தொடும்போது காம்பவுண்ட் கேட் அடைக்கப்பட்டிருந்தது. இவள் அவசரமாய் கேட் செக்யூரிட்டியிடம் ஓடினாள். சார் ப்ளீஸ் இந்த மாதிரி ஒரு சர்ட்டிபிகேட் ஒரு “ஸ்டாப் கிட்ட இருக்குன்னு சொல்லியிருக்காங்க, அதை வாங்கணும்.
மேலும் கீழுமாக அவளை பார்த்தவர் “மேடம் மணி என்ன பாருங்க” மணி ஆறாயிடுச்சு, எல்லாம் பூட்டிட்டு கிளம்பிட்டாங்க. நீங்க சொல்ற ஸ்டாப்பும் அப்பவே கிளம்பி போயிட்டாங்க.
“போச்சு” தலையில் கையை வைத்தபடி நின்றவள், தங்கைகு போன் போட்டாள்.
அக்கா அவங்ககிட்ட பேசுனேன், அஞ்சரை வரைக்கும் அவங்க கையிலதான் வச்சிருந்தாங்கலாம், யாரும் வரலைன்னுட்டு அப்படியே டேபிள்ள வச்சுட்டு போயிட்டாங்களாம்.
இப்ப நான் என்ன பண்ணுறது? நான் சொன்னா எல்லாம் இங்க யாரும் கேட்க மாட்டாங்க.
ப்ளிஸ் அக்கா இருங்க அந்த மேடம் கிட்ட அந்த செக்யூரிகிட்ட பேச சொல்றேன், உன் போன் நம்பரை கொடுத்து அதுல பேச சொல்றேன், நீ போனை அவங்க கிட்ட கொடேன்.
எரிச்சலும் கோபமுமாக செக்யூரிட்டியிடம் சென்றவள், சார் ஒரு நிமிசம் உங்க ஸ்டாப் உங்களோட பேசணுமாம்.
அவர் எரிச்சலாய் பார்த்தவர் “மேடம் இப்படி கேட்ட பூட்டிகிட்டு போன்ல பேசிகிட்டு நின்னா என்னைய நிப்பாட்டிடுவாங்க, சார் சார் கோபிச்சுக்காதீங்க, ப்ளீஸ் ரீங் வர போனை அவர் கையில் திணித்தாள்.
என்ன பேசினார்களோ என்னவோ தெரியவில்லை, முகம் இறுக போனை அவள் கையில் திரும்ப கொடுத்தவர், இவங்க என் வேலைக்கு உலைய வச்சுடுவாங்க, பூட்டுன ஆபிச திறக்கணும்னா ஆபிசர் சொன்னாத்தான் முடியும், இதை கூட புரிஞ்சுக்காம..
போனை கையில் வாங்கிய சுபத்ரா தங்கையிடம் கேட்டாள், இப்ப என்ன செய்யறது?
என்ன செய்யறது? என் வாழ்க்கை இந்த ஒரு வருசம் வீணா போச்சு, இதுக்காக நான் கஷ்டப்பட்டு எழுதின எக்சாம், செலவு, எல்லாம் வேஸ்ட், அவள் அழுவது இவளுக்கு கேட்டது. அழுவாதே, ரிலாக்ஸ், இது இல்லியின்னா இன்னொன்னூ, இவள் சொல்ல அவள் அழுகை அதிகமானது.
காம்பவுண்ட் கேட்டுக்குள் கல்லூரி சுகாதார பணியாளர்கள் பணி முடிந்து போவதற்காக நான்கைந்து பேர் உட்கார்ந்து இவள் சற்று தள்ளி நின்று பேசிக்கொண்டிருந்ததை பார்த்து கொண்டிருந்தனர். அதில் கொஞ்சம் படித்தவராய் கையில் இவர்களின் வருகை பதிவேட்டை கையில் வைத்தபடி நின்று கொண்டிருந்தவர், அவர்களுக்கு சூப்பர்வசைராக இருக்கவேண்டும், வருகை பதிவில் பணி முடிந்து செல்வதற்கான பதிவை போட்டு கொண்டிருந்தவர் யாருக்கோ போன் செய்தார்.
யாரிடம் பேசிக்கொண்டிருந்தாரோ தெரியவில்லை, சடாரென்று ஒருவனிடம் ஏம்ப்பா அந்த ஆபிச பூட்டினவங்க ஏன் இன்னும் வரலை? வந்துகிட்டிருக்காங்க, பதில் வர இவர் வேகமாய் சென்று தள்ளி நிறுத்தியிருந்த இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அந்த அலுவலகத்துக்கு விரைந்தார்.
பத்து நிமிடங்கள் ஓடியிருக்க, சுபத்ராவுக்கு மீண்டும் ஒரு போன், அக்கா எங்கிருக்க?
என்ன பண்ணறதுன்னு தெரியாம டாக்சி பிடிச்சு வீட்டுக்கு போறதுக்கு முயற்சி பண்ணிகிட்டிருக்கேன்.
அக்கா, ப்ளீஸ் அஞ்சு நிமிசம் நில்லு, இப்ப உனக்கு ஒரு போன் நம்பர் தர்றேன், அவருக்கு ஒரு ரிங் விடேன். ப்ளிஸ் எனக்காக.
அவள் அனுப்பியிருந்த தொலைபேசி எண்ணை மனனம் செய்து அதற்கு அழைப்பு அனுப்பினாள்.
சட்டென்று எடுத்த நபர் ஹலோ யாரு? அ…. அப்படீங்களா நான் வந்துகிட்டே இருக்கேன், அவர் பாட்டுக்கு பேசிக்கொண்டே சற்று முன்னால் வந்தவர் மென்மையாக நீங்க நடந்து கொஞ்ச தூரம் போயி நில்லுங்க, நான் உங்க பொண்ணு கடிதாசிய எடுத்து கையில வச்சிருக்கேன். இங்க வச்சு கொடுத்தா தப்பா போயிடும்” போனை வைத்து விட்டார்.
சுபத்ராவுக்கு ஆச்சர்யம், யார் இவர்? என்றாலும் அவர் சொன்னபடி அந்த இடத்தை விட்டு வேகமாக நடந்து சென்றாள்.
அவள் நடக்கும்போதே அவளது கைபேசிக்கு ஒரு அழைப்பு, மேடம் உங்க பின்னாடிதான் எங்க ஆளுங்களோட வந்துகிட்டிருக்கேன், அப்படி ஓரமா நில்லுங்க, அவள் திரும்பி பார்க்காமல் ஓரமாய் நிற்கவும், அவள் அருகே வந்து நின்ற இரு சக்கர வாகனத்தில் இருந்தவர், இந்தாங்க இதுதான் நீங்க கேட்டது, அந்த ஸ்டாப்புகிட்ட அவங்க எங்க வச்சிருக்காங்கன்னு கேட்டு அவங்க டேபிள்ள இருந்து எடுத்துட்டு வந்திருக்கேன்.
நல்ல வேளை எங்க ஆளுங்க அப்பத்தான் பூட்டிட்டு அங்க நின்னுட்டு இருந்தாங்க, அதனால வேகமா எடுக்க முடிஞ்சது. நீங்க எதுவும் பேசாம போய்கிட்டே இருங்க.
விருட்டென்று அவர் வண்டியை கிளப்பிவிட்டு போனார். இவள் பிரமையாய் நின்றாள். யார் இவர்? திடீரென்று எப்படி வந்தார், எப்படி எங்களுக்கு உதவி செய்தார்.
கையில் போன் அழைப்பு வர சுய நினைவு வந்தவளாய் போனை உயிர்ப்பிக்க “அக்கா அந்த சர்ட்டிபிகேட் உன் கையில கொடுத்தாச்சுன்னு மேடம் சொன்னாங்க. அவங்ககிட்ட அந்த சூப்பர்வைசர் பேசினாராம், என்ன பிரச்சினைன்னு?
அப்பத்தான் அவங்க சொல்லியிருக்காங்க, அவர் உடனே சரி நீங்க போனை வையுங்க, நான் உள்ள போய் அதை எடுதுட்டு உங்களை கூப்பிடறேன்னு சொல்லி அவசரமா போய் அதை எடுத்துட்டு வந்து அவங்களுக்கு தகவல் சொல்லியிருக்காரு. அவங்க எனக்கு போன் பண்ணி , அவர் நம்பரை கொடுத்து உங்க அக்காகிட்டே இதை அனுப்பிடுன்னு சொன்னாங்க.
அவள் குரலில் மகிழ்ச்சி..அக்கா கடவுள் இருக்காருக்கா, இந்த மாதிரி திடீருன்னு நமக்கு உதவறங்க மூலமா.. அவள் சொன்னது இவளுக்கும் ஆமோதிப்பதாகத்தான் இருந்தது. சிவசாமி காலையில் ராமசேசனிடம் விவாதம் செய்து கொண்டிருந்ததும் ஞாபகம் வந்தது.
அவள் அருகில் சென்று கொண்டிருந்த டாக்சியை கூப்பிட்டாள்.