பூத்தூவும் காற்று

பூத்தூவும் காற்று
===============
காற்றோடு நீகொஞ்சம் பேசு - அதன்
கண்ணீரைத் துடைத்தெடுத்து வீசு
நேற்றதிலே கலந்துவைத்த மாசு - தினம்
நிறைந்திருக்க விட்டவரை ஏசு
கீற்றிடையே படிந்திருக்கும் தூசு - நுண்
கிருமியுடன் கைக்கோக்கும் நீசு
ஏற்றமொடு நீக்கியதில் ஆசு - கொள
இயன்றளவு நிறமின்மை பூசு
*
எரிபொருளைக் குடித்துவிட்டு நாளும் - புகை
ஏப்பமிடும் இயந்திரங்கள் மூலம்
வரிவரியாய் வானமெங்கும் நீளும் - விச
வல்லூறாம் அமிலங்களால் சூழும்
புரியாத நோய்த்தொற்றித் தோலும் - தினம்
புண்ணாகித் துடிதுடிக்க மூளும்
பரிகாசத் துடனிங்கு வாழும் - நிலை
படரவளி வழிகொட்டும் தேளும்
*
எதிர்ப்பின்றித் போனதனால் ஏவும் - பல
ஏவுகணை விண்மீது தூவும்
அதிர்வலைகள் ஏற்படுத்தும் நோவும் - அதை
அடுத்துவரும் சோதனைகள் யாவும்
எதிர்கொண்டு அனுதினமும் கேவும் - வளி
இன்னலுற்று அலைமோதித் தாவும்
புதிர்தனையே புரிந்துணர்ந்து கூவும் - நமைப்
புவியிருக்க வைத்துப்பூத் தூவும்
*
*சர்வதேச சுற்றாடல் தினம் இன்று-
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (5-Jun-23, 1:45 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 98

மேலே