அறிவது உம்மை அறிவினாலே

இறைவா இறைவா என்னுயிர் தலைவா
உறைந்தாய் உறவாய் உள்ளத்தின் உள்ளே
அறியா பாதையை அறியவேச் செய்தாய்
நிறைவாய் என்னை நிறைத்தாய் அருளால்

அணுவின் அணுவாய் அளவில் கண்டேன்
குணத்தின் வழியே குருவாய் திகழ்ந்தாய்
அணைக்கும் வகையில் காற்றாய் நிறைந்தாய்
பிணைத்தே என்னை பிரியாது காத்தாய்

மண்ணில் விளைந்தவை யாவுமே மண்ணே
கண்ணில் நிறைந்தவை எல்லாம் பொய்யே
தண்ணீரில் விளைபவை தண்ணீரால் கரையும்
கண்ணியனே நீதான் என்றுமே உண்மை

அறிவது உம்மை அறிவினாலே முடியும்
அறமும் தரமும் உள்ளத்தால் வேண்டும்
குறையே இல்லா நிறைபொருள் நீயே
பிறந்தவர் எவரும் உன்னை அறியார்

தெரிந்தவன் அறிந்ததை தொடர்ந்து சொன்னால்
பரிகாசம் செய்து இகழ்ந்து நகைப்பர்
குரைக்கும் நாய்போல் கூடியே விரட்டுவர்
தரத்தினை அறியதோர் தராசு விற்பதாய்

முருகா முருகே முதலின தமிழே
உருகா உள்ளமும் உன்பெயர் கேட்டால்
உருகிடும் மெழுகாய் முற்றிலும் மாறும்
உருக்கி உன்னை உள்ளத்துள் வைக்குமே.
— நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (6-Jun-23, 6:15 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 22

மேலே