நாதியற்றோர் - பிச்சைக்காரர்

வாதிடும் வழக்கம் இல்லை
போதிக்கும் பழக்கம் இல்லை
நாதியற்ற நிலை உள்ளோரை
கண்ணுற்ற மனம் வலிக்கிறது !

இரங்கிடும் குணமுண்டு எனக்கு
உறங்கிடும் வேளையிலும் எனக்கு !
உருகிடும் உதவியென கேட்டால்
துடித்திடும் உள்ளம் உதவிடவே !

கனவில் வருவது நனவாகுமா
நினைவில் வரும் கனவாகுமா !
பிச்சை எடுப்பதும் நீங்கிடுமா
உலகில் இந்நிலை வந்திடுமா !

நாதியற்றவர் வாழ வழிகாண
சாதிமத பேதங்கள் மறந்திடுக
அவர்கள் புதுவாழ்வு பெற்றிட
வழியொன்று வகுத்து கூறிடுக !

எல்லோரும் எல்லாம் பெற்று
நல்வாழ்வு வாழ்ந்திட நாமும்
வையகம் போற்றிட என்றும்
மகிழ்வோம் மண்ணில் என்றும் !

உதவிடும் உள்ளங்கள் வாழியவே
உதவாதவர் மனங்கள் மாறிடுக
உள்ளவர் உள்ளவரை உதவிடுக
உலகோர் சற்றே செவிமடுத்திடுக !

பழனி குமார்
07.06.2023

எழுதியவர் : பழனி குமார் (7-Jun-23, 3:18 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 39

மேலே