கண்ணதாசன் - சித்திரமே எழுந்து வா
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
மா மா மா மா விளம் மா காய்
அத்திப் போல அபூர்வ மெனவே அதிசய நிலையில் பூத்தாயே
எத்திக் கிலும்புகழ் மணக்க தமிழால் பாடியே நிலைத்து நின்றாயே
நித்தம் கற்றே நிலைக்கும் கருத்தை பாட்டிலே வைத்து கொடுத்தாயே
யுத்தம் மகிழ்வு துக்கம் துள்ளல் எதற்குமே இசையால் மருந்திட்டாய் — (க)
எதையும் சொன்னாய் பாட்டில் எவரும் கவர்ந்திடும் அழகு கருத்தையுமே
கதைகள் சொல்லும் பாட்டை தினமும் வகைவகை நிலையில் தந்தாயே
புதையல் போன்றே கருத்தை அறிந்தே காவியம் தெளிவாய் எழுதினாயே
விதையைப் போன்றே விதைத்து வளர்த்து தமிழினை விண்ணில் வளர்த்தவனே — (உ)
கூடல் பட்டி விதையே தமிழின் குலகுரு கண்ண தாசவேந்தே
தேடி வியந்தேன் தினமும் உந்தன் திறன்மிகு படைப்பை எந்நாளும்
பாட நானும் முனைந்தேன் உந்தன் சிறப்பினை சித்திர மேவருவாய்
ஆடும் மனித மனதை நிலைத்து அமைதியைக் கொள்ளச் செய்வாயே. — (ங)
—- நன்னாடன்.