சட்டென்று செய்த உதவி

சட்டென்று செய்த உதவி

மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தும், அதோ அந்த கட்டிடத்தின் ஓரத்தில் பசியால் மயங்கி கிடக்கும் அந்த சிறு பெண்ணை எவரும் கண்டு கொள்ளவில்லை.
இதற்கும் மேல், பனிப்பொழிவும் அதிகம் இருந்ததால் தரை முழுவதும் ஈரமான நிலையில் இருந்தது, காலை பதினோறு மணி அளவில் இருக்கலாம். சூரியன் மட்டும் இன்னும் எட்டி பார்க்கவில்லை.
பத்து வயது சிறுமி எவ்வளவு நேரம் மயக்கத்தில் கிடந்திருப்பாள் என்று தெரியவில்லை, மயக்கம் மெல்ல தெளிய அந்த சிறுமி முணங்களுடன் கண்ணை விழித்து பார்க்க, அதற்காகவே காத்திருந்தது போல அவளின் வயிறு பசியால் எரிய ஆரம்பித்தது.
மெல்ல தடுமாட்டத்துடன் எழுந்தவள் அவளை தாண்டி நடந்து போய் கொண்டிருப்பவர்களை பார்த்தாள். பசியால் யாரிடமாவது கையேந்தலாமா? என்று நினைத்தவள் சட்டென அந்த நினைவை உதறியபடி அருகில் இருந்த தூண் ஒன்றை பற்றிக்கொண்டு நின்றாள்.
என்ன செய்வது? பசியால் அடுத்த அடி எடுத்து வைக்கமுடியாது, அதே போல் எவ்வளவு நேரம் இந்த தூணை பிடித்தபடியே நின்று கொண்டிருப்பது?
அப்பொழுது கும்பலாய் எதிரில் இருந்த ஓட்டல் ஒன்றில் நுழைந்த பெண்கள் கூட்டம் ஒன்று பேசி சிரித்தபடி முன்புறம் இருந்த மேசையை சுற்றி அமர்ந்தனர். இரண்டு பேர் பாதையை பார்த்தபடியும், எதிரில் இரண்டு பேர் இவர்கள் முகத்தை பார்த்தபடியும் அமர்ந்திருந்தனர்.
ஏதோ சுவாரசியமாய் பேசியபடியே பாதையை பார்த்துக்கொண்டிருந்த இரு பெண்களில் ஒருத்தி தன் பார்வையை பாதையை தாண்டி எதிரில் பார்க்க, ஒரு தூணை பிடித்தபடியே அசையாமல் ஒரு சிறு பெண் ஐந்து நிமிடங்களாய்..!
அந்த பெண் எந்தவித அசைவுமில்லாமல் நிற்பதை பார்த்து கொண்டிருந்தவள் , பக்கத்தில் இருந்த பெண்ணிடம் ஏதோ சொல்லியபடி வேகமாக வெளியே வந்தாள்.
உட்கார்ந்திருந்த மூவரும் திடீரென இவள் எழுந்து வெளியே போவதை பார்த்து விட்டு மஞ்சு எங்க போறே? அவர்களின் குரல் காதில் கேட்கும்போது அந்த பரபரப்பான சாலையை தாண்டி அந்த தூணை பிடித்தபடியே நின்றிருந்த பெண்ணருகில் சென்றிருந்தாள்.
எங்கே மஞ்சு? அவர்கள் மூவரும் எழுந்து பார்க்க், பாதையை தாண்டி சிறு கும்பல் நிற்பதை பார்த்ததும் என்ன அங்க கூட்டம்? மஞ்சு அங்கதான போனா? இரு பார்க்கலம், இருவர் வேகமாக வெளியே வந்து சாலையை கடந்து வந்து கும்பலை தாண்டி எட்டி பார்க்க..!
சிறுமி ஒருத்தி மயங்கிய நிலையில் மஞ்சுவின் தோளில் சாய்ந்திருக்க, மஞ்சு அந்த பெண்ணை எங்கு படுக்க வைப்பது என்னும் தடுமாற்றத்தில் இருந்ததை பார்த்தார்கள்.
அந்த சிறுமி வேகவேகமாக தட்டில் இருப்பதை எடுத்து விழுங்குவதை பார்த்தபடி உட்கார்ந்திருந்தார்கள் மஞ்சுவும் அவளது தோழிகளும். பாவம் எத்தனை நாளாக பசியில் இருந்தாளோ?
மஞ்சுவின் அருகில் உட்கார்ந்திருந்த விமலா மெல்ல கேட்டாள், எப்படி கண்டு பிடிச்சே? இந்த பொண்ணூ பசியோட இப்படி இருக்கறதை?
இல்லை நாம பேசிட்டு உட்காரும்போதே கவனிச்சேன், அந்த பொண்ணு வித்தியாசமா அந்த கம்பிய பிடிச்சுகிட்டு நின்னதை, அப்புறம் அஞ்சு நிமிஷம் பேசிட்டு இருக்கும்போதும் அந்த பொண்ணூ அசையாம அப்படியே நிக்கறதை பார்த்த உடனே எனக்கு டவுட்டு வந்துடுச்சி, அதான் நான் பக்கத்துல போய் அந்த பொண்ணை தொடவும் அந்த பொண்ணு மயங்கி என் மேலயே விழவும் சரியா இருந்துச்சு, என்ன பண்ணரதுண்ணும் தெரியலை, கூட்டம் கூடினாலும் ஒருத்தரும் உதவிக்கு வரலை, வேடிக்கை மட்டும் பார்த்துகிட்டு நின்னாங்க, நல்ல வேளை நீங்க வந்தீங்க, அவர்களை நன்றியுடன் பார்த்தாள்.
உன் பேர் என்ன? கொஞ்சம் முகத்தில் தெளிவு வந்திருந்தாலும் இவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் அவர்கள் முகத்தையே பார்த்து கொண்டிருந்தாள். அவர்கள் மீண்டும் மீண்டும் கேட்கவும் அவள் ஏதோ சொல்ல முயற்சிப்பதையும், முடியாமல் திணறுவதையும் பார்த்தவர்கள் ஒரு வேளை இந்த பொண்ணு ஊமையோ?
மற்றவர்களுக்கு இந்த சந்தேகம் வந்து இது என்னடா வம்பு என்பது போல திகைத்தனர். மஞ்சு தைரியமாய், கமான் வாங்க வெளியில் போய் இந்த பொண்ணை காட்டி யார்கிட்டயாவது விசாரிக்கலாம், அவர்களை தைரியப்படுத்தி வெளியே அழைத்து வந்தாள்.
ஆனால் இவர்கள் நினைத்தது போல் அது சாதாரண விசயமாக படவில்லை. கிட்டதட்ட எல்லா தெருவிலும் விசாரித்து பார்க்க ஒருவருக்கும் அந்த பெண்ணை பார்த்ததாக அடையாளம் சொல்ல முடியவில்லை.
எல்லோரும் மஞ்சுவை இப்பொழுது உறுத்து பார்க்க ஆரம்பித்து விட்டார்கள், பெரிய சிக்கல்ல மாட்ட வச்சுட்டா, என்பது போன்ற பார்வை. மஞ்சுவுக்கு தனக்கு ஏன் அந்த பெண்ணிடம் அப்படி ஒரு ஈர்ப்பு வந்து காப்பாற்ற போக வேண்டும், இப்படி ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் வந்திருந்தது.
மஞ்சுவின் தோழிகள் ஒவ்வொருவருக்கும் ஒரு வேலை இருப்பதாக சொல்லி இவளின் காரில் வந்திருந்தாலும், சந்திக்க போகும் சிக்கலை கருதி ஆட்டோ பிடித்து போய் விடுகிறோம், என்று சொல்லி இவளிடம் இருந்து கழண்டு கொண்டார்கள், இவள் மட்டும் தனியாக, இந்த பெண்ணுடன் நின்றிருந்தாள். என்ன செய்யலாம்?
கிட்டத்தட்ட அந்த நகரத்தை விட்டு நான்கைந்து கிலோ மீட்டர் வந்திருப்பாள். காருக்கு பெட்ரோல் போடலாம் என்று அங்கிருந்த பெட்ரோல் பங்கில் காரை கொண்டு போய் நிறுத்தினாள்.
காரில் பெட்ரோல் போட வந்த பையன், காருக்குள் இந்த பெண்ணை பார்த்ததும் “ஐ உஷா” சைகை மூலம் இவளிடம் ஏதோ கேட்டான்.
மஞ்சுவிற்கு அப்பொழுதுதான் உயிரே வந்தது. சட்டென அந்த பையனை நிறுத்தி இந்த பொண்ணை உனக்கு தெரியுமா? அவன் தலையசைத்து, தேயிலை செடிகளாக மலை முழுவதும் பரவியிருக்க, அதோ அங்க தெரியுது பாருங்க, என்று மலை உச்சி ஒன்றை காட்டினான், அங்கதான் இவங்க வூடு, இருக்கு,
காருல போக முடியுமா?
கொஞ்ச தூரம் போகாலம், என்றான். வா என் கூட, அவன் தயங்கினான். அவன் தயக்கத்தை புரிந்து கொண்ட மஞ்சு, பங்க் அலுவலகத்திற்குள் சென்றாள். அங்கு ஒரு பெண்ணும், ஆணும் அமர்ந்திருந்தனர். அவர்களிடம் இந்த பெண்ணை பற்றி சொல்லி, அவளை வீட்டில் விட்டு விட்டு வர வேண்டும், அந்த பையனை கொஞ்சம் கூட அனுப்ப முடியுமா என்று கேட்டாள்.
இவர்கள் அந்த தேயிலை செடிகள் நடுவே அமைந்திருந்த பாழடைந்து இருந்த அந்த பையன் காட்டிய வீட்டை அடைந்தார்கள். கதவு திறந்திருக்க, அரவம் கேட்டு உள்ளிருந்து நாயொன்று வெளியில் வந்தது. மஞ்சுவிற்கு ஏதோ விபரீதமான எண்ணம் வந்தது.
அந்த பெண்ணை அழைத்துக்கொண்டு வேகமாக உள்ளே சென்றார்கள். அங்கு ஒரு பெண் படுத்து கிடப்பது தெரிய, ஒரு வித வாடை மூஞ்சில அடித்தது. சட்டென மூக்கை கைக்குட்டையால் பொத்தி கொண்டவள் அடுத்து என்ன செய்வது என்று திகைத்து வெளியே வந்தாள்.
அந்த பையன் வெளிறிய முகத்துடன் வந்தவன், சட்டென அங்கிருந்து ஓடினான். மஞ்சு அவன் ஓடுவதை வெறித்து பார்த்து என்ன செய்வது என்று திகைப்புடன் நின்றாள்.
பத்து நிமிடம் கழிந்திருக்கும், பேச்சுக்குரல் கேட்க தள்ளி வந்து பார்த்தாள்.அந்த பையனுடன் நான்கைந்து பேர்கள் உடன் வர அவர்கள் இந்த தோயிலை தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களாக இருக்கவேண்டும் என்பதை பார்த்தவுடன் புரிந்து கொண்டாள்.
கிட்டத்தட்ட எல்லா காரியங்களும் முடிந்து, அங்கு வந்த காவல் துறை அதிகாரியிடமும் அந்த பெண்ணை நகரத்தில் எப்படி பட்ட சூழ்நிலையில் பார்த்து, அந்த பெண்ணை பத்திரமாக கொண்டு வந்து சேர்க்க இங்கு வந்ததை பற்றி விவரமாக சொன்னாள்.
இறந்தவள் இந்த பெண்ணின் அம்மாவென்றும், அவள் இறந்து போய் இரண்டு நாட்களுக்கு மேல் ஆகியிருக்கவேண்டும், ஆனால் இந்த பெண் அதை பற்றி எதுவும் தெரியாமல் இருந்திருக்கிறாள், பசி தாளாமல் நடந்தே நகரத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறாள். விளக்கமாக சொன்னார் அந்த காவல் அதிகாரி.
மஞ்சு வீடு வந்த பொழுது வீட்டில் ஒரே பரபரப்பாய் இருந்தது. அம்மா ஓடி வந்தாள், எங்கே போயிட்டே? காலேஜூல படிக்கற பொண்ணுக்கு காரை கொடுக்காதேன்னு சொன்னா கேட்டியான்னு உங்கப்பா காலையில சத்தம் போட்டுட்டு இருந்தாரு, நானு சரி பரவாயில்லைன்னு விட்டா நீ பிரண்ட்சுகளோட பர்ச்சேஸ் போறேன்னுட்டு காலையில கிளம்புனவ, உங்கப்பா பாவம் அங்க இங்கயும் ஓடி உன் பிரண்டுக வீட்டுக்கு போய் விசாரிச்சப்ப நீ இப்படியொரு காரியம் பண்ணியிருக்கேன்னு சொன்னாங்க. உனக்கு ஏன் வீண் வம்பு? அம்மா அவளை திட்டியபடி போய் குளி போ..விரட்டினாள்.
அரை மணி நேரத்தில் களைப்பாய் உள்ளே வந்த பிரகாசத்தின் முன்னால் இவள் தயங்கி தயங்கி நின்றாள். “ஸாரி அப்பா உங்களை டென்சன் படுத்திட்டேன்” தயங்கியபடி சொல்ல, அவர் “ஹேய் நீ பண்ணுன காரியத்த பார்த்து நான் ரொம்ப பெருமை பட்டு வந்திருக்கேன்” நீ சாரி சொல்லிட்டு இருக்கே? அவளை அணைத்தபடி அதான் என் பிரண்டுதான் அந்த பொண்ணு இருக்கற ஏரியா போலீஸ் இன்ஸ்பெக்டரு. உன்னை பார்த்த உடனே கண்டு பிடிச்சுட்டான், உனக்குத்தான் அவனை அடையாளம் தெரியலை. எல்லாம் டீடெயிலா என் கிட்டே சொல்லிட்டார்ன்.
“குட் ஒரு போலீஸ் அதிகாரியோட பொண்ணா என்ன செய்யணுமோ அதையத்தான் நீ செஞ்சிருக்கே” தன் யூனிபார்பை கழட்டியபடியே சொல்லிக்கொண்டிருந்தார்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (18-Jul-23, 2:46 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 124

மேலே