அத்தை மனசு
அத்தை மனசு
அத்தை..!
நான் கூப்பிட கூப்பிட முறைத்து பார்த்து ஒரு சிலுப்பு சிலுப்பி விட்டு மாட்டின் மூக்கணாங்கயிற்றை பற்றி இழுத்துக்கொண்டு போனாள்.
ஹூம்..பெருமூச்சு விட்டேன், இந்த அத்தை எதுக்காக என் மீது கோபமாக இருக்கிறாள், இரண்டு வாரத்துக்கு முன்னால் வாடா மருமவனே, என் அண்ணன் பெத்த மகனே என்று நெட்டி முறித்து வரவேற்றவள், இன்று கூப்பிட கூப்பிட கூப்பிட முறுக்கி கொண்டு போகிறாள்.
எல்லாம் என்னிய சொல்லணும், இத்தனை வருசம் கழிச்சு என் ஊருக்கு அதுவும் இந்த பட்டிக்காட்டுக்கு வந்து இவங்களோட சந்தோசமா ஒரு மாசம் இருந்துட்டு போகோணும்னு நினைச்சதுக்கு எனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும் மனதுக்குள் நினைத்தபடியே அத்தை வீட்டு வாசலில் நின்றபடி “மாமோவ்” உரக்க கூவினேன்.
என் கூவலை கேட்டு மாமா வெளியே வருவதற்கு முன் அத்தை தன் மாட்டை “சொத்த்” சொத்து என்று இரண்டு அடி அதன் முதுகில் அடித்து சனியனே சொன்னா கேட்டாத்தானே, “மேயற மாட்டை நக்கி கெடுக்கறதுக்குன்னே நாலஞ்சு மாடுங்க அலையுதுங்க” உரத்து சொல்லியபடி “இந்தா நட” மாட்டை விரட்டுவது என் காதில் அப்பட்டமாய் விழுந்தது.
ஒரு மனுசனுக்கு இதை விட மானக்கேடு வேணுமா? ஒரு பக்கம் மனசு சொன்னாலும், ஒரு காலத்துல இது கூட வாங்காத பேச்சா? வாங்கி வாங்கித்தானே ஊரை விட்டு ஓடி போனேன். அப்படி போனதுனாலதான், டவுனுல சம்பாரிச்சு கையில கால்ல செயினு மோதிரத்தோட மாமனுக்கும், அத்தைக்கும் துணிமணி, இன்னும் என்னமெல்லாம் வாங்கிட்டு வந்து கொடுக்க முடிஞ்சது.
அப்ப மட்டும் இதுக பல்லை காட்டி வாங்கினதுக, மாமன்னா தினக்கும் சாயங்காலம் சரக்கு போட என் பின்னாடி அலைஞ்சுகிட்டு இருக்காரு, மனதுக்குள் கொஞ்சம் கோபம் எட்டி பார்க்க பேசாம போயிடலாமா? ஒரு பக்கம் மனசு நினைத்தாலும் சரி வூட்டுக்குள்ள போயி பார்க்கலாம், என்னதான் இந்த ஆளு செஞ்சுகிட்டிருக்கான்னு?
“மாமோவ் மாமோவ்” குரலிட்டபடியே வூட்டுக்குள் தேடி தேடி போகிறேன், மனுசனை எங்கும் காணோம், எங்க போனாரு இந்த மனுசன்? பின்புறம் கொஞ்சம் தோட்டமும் கிணறு ஒன்றும் இருந்தது. கிணத்து மேட்டு மேல ஒரு உருவம்..யார் அது?
அருகே செல்ல செல்ல உருவம் புலப்பட்டது “அட மாமோவ்” இங்கன உக்காந்திருக்கியா? நான் கூப்பிட்டுகிட்டே இருக்கேன், நீ என்ன பண்ணிகிட்டிருக்கே?
மாமன் நான் வந்ததை கூட கவனிக்காமல் கையில் செல்போனை வைத்து ஏதோ பார்த்து சிரித்து கொண்டிருந்தார்.
“மாமோவ்” அவர் தோளை பிடித்து உலுக்கின உலுக்கலில் சட்டென நிமிர்ந்து பார்த்தவர் “அட நீதானா, நில்லுப்பா, ஒரு முக்கியமான நியூசு போட்டிருக்கான் பாத்துகிட்டிருக்கேன், மீண்டும் செல்போனுக்குள் தலையை குனிந்து கொண்டார்.
ஏன் மாமோவ் இது உனக்கே நியாயமா? இங்க உக்காந்து என்ன பண்ணிகிட்டிருக்கே? காலையில மேப்புக்கு அத்தை மாட்டை கூட்டிட்டு போயிட்டிருக்கு, நீ என்ன பண்ணறே?
நான் சொன்னதை கிஞ்சித்தும் கண்டு கொள்ளாமல் “ அட இருப்பா” அவ போனா போகட்டும், இங்க பாரு இந்த படத்தை பாரு ஏதோ ஒரு படமாய் ஓடிக்கொண்டிருக்கும் காட்சியை என்னிடம் காட்டி இதை பாரு மாப்பிள்ளை.
இந்த ஆள் இப்ப எழமாட்டான், மாமோவ் “சரக்கு” இருக்கு போலாமா, புது மரத்து கள்ளு ஆசை காட்டினேன்.
நீ போய் காளியண்ணன் கிட்ட வாங்கி வை, நான் இதா பத்து நிமிசத்துல வந்துடறேன், மீண்டும் செல்லுக்குள் தலையை மடக்கி கொண்டார்.
எரிச்சலாய் வந்தது, எனக்கு உறவு என்பதே இந்த இரண்டுகளும்தான், ஒண்ணு திட்டிட்டு போகுது, இன்னொண்ணு கிணத்து மேட்டுல உக்காந்து இழுத்தடிக்குது, சலிப்புடன் வீட்டை விட்டு வெளியே வரவும், அத்தை பக்கத்து வீட்டு அங்கம்மாக்கா வாசலில் நின்று கொண்டிருந்தாள்.
“அடே எங்க போனா உன்ற அத்தை?
மேப்புக்கு மாட்டை புடிச்சுகிட்டு போயிட்டிருக்குது.
ஏன் அவங்க வூட்டுக்காரருதான போவாரு?
அது கிணத்து மேட்டுகிட்ட உக்காந்து செல்போனை பாத்துகிட்டிருக்குது, அத்தை மாட்டை திட்டுற சாக்குல என்னிய கரிச்சு கொட்டிட்டி போயிட்டிருக்கு அலுப்புடன் சொன்னேன்.
ஆமாடே நீ செஞ்ச காரியத்துக்கு ஒன்னிய கொஞ்சுவாங்களா? சும்மா இருக்கற மனுசனை உசுப்பேத்தி விட்டுட்டே, அப்புறம் உங்க அத்தை உன்னை திட்டாம என்ன பண்ணும்?
நானென்ன பண்ணேன்?
அதா புதுசா உன் மாமனுக்கு வாங்கிட்டு வந்து கொடுத்திருக்கியே, அதுக்கு பேர் என்னா..?
செல்போனு..! அவருதான் நல்லா இருக்கு, எனக்கு கொடு அப்படீன்னாரு..!
ம்..உன்னைய சொல்லி என்ன புண்ணியம்..! அலுத்தபடி அங்கம்மாக்கா வீட்டுக்குள் நுழைந்து கொண்டாள்.
இது என்னடா வம்பா போச்சு, மனதுக்குள் நினைத்தபடி அடுத்த தெருவில் இருந்த என் வீட்டுக்கு சென்றேன்.
ஒரு வாரம் அத்தை வீட்டுக்கே போகவில்லை, பொன்ராசு பொன்ராசு, வாசலில் நின்று குரல் கேட்கவும் அம்மா உன்ர அத்தை மாதிரி தெரியுது, உள்ளாற வரச்சொல்லு என்றாள்.
வெளியே வந்தவனை புன்சிரிப்புடன் பார்த்தாள் அத்தை. “ஏந்சாமி அன்னைக்கு திட்டுனதுக்கு கோபிச்சுகிட்டியா? ஒரு வாரமா வூட்டாண்டை காணோம்?
பின்னே நீ அம்புட்டு பேச்சு பேசிட்டு போறப்ப, நான் எப்படி உன்ர வூட்டுக்கு வாரது.
அதுவும் சரிதான், ஆனா ரோசனை பண்ணி பாரு, உங்க மாமனுக்கு மாடு கன்னு, தோட்டம் காடு இதை தவிர எதுவும் தெரியாது, வேணும்னா அப்ப அப்ப கள்ளு சாராயம் குடிச்சு கமுந்தடிச்சு படுத்து கிடக்கும், ஆனா நீ என்னமோ ஒண்ணை வாங்கி கொடுத்து எப்ப பார்த்தாலும் அதையவே பார்த்துகிட்டு மாடு கன்னு பார்க்காம, ஏன் சோறு தண்ணி கூட உங்காம, பைத்தியம் புடிச்சாப்புல அதை பார்த்து சிரிக்கறதும், “ஆ ஊன்னு கத்துறதும், இப்ப அஞ்சு நாளா தெளிஞ்சப்பாடி இருக்காரு, அந்த கருமத்தை காணொமுன்னு இரண்டு மூணு நாளா வூடு வாசல் எல்லாம் தேடுனாரு, அப்புறம் என்ன நினைச்சாரோ மறுபடி மாடு கன்னை கூட்டிட்டு தோட்டத்துக்கு போக ஆரம்பிச்சுட்டாரு.
எப்படியோ உன் புருசன் உனக்கு திருப்பி கிடைச்சிட்டாருன்னு சொல்லு.
போடா அங்கிட்டு,..வெட்கத்துடன் சிரித்தாள், அம்மா கொண்டு வந்து கொடுத்த காப்பி தண்ணியை குடித்தபடி.
ஊரை விட்டு தொலை தூரமாய் இரயிலில் சென்று கொண்டிருக்கிறேன், மன நிம்மதியுடன். நம்ம ஊரு ஏதோ ஒரு பட்டிக்காடுதான், எங்கிட்டோ ஒரு மூலையில பஸ் வசதி கூட இல்லாம இருக்கற ஊருதான், ஆனா அங்க மனசங்களா ஒண்ணூக்குள்ள ஒண்ணா பழகி வாழ்ந்துகிட்டு இருக்கறவங்க. அவங்ககிட்ட புதுசா ஒண்ணை கொண்டு போய் கொடுத்து “இதுதான் செல்போன்” இதுல உலகத்தையே பார்க்கலாம், அப்படீன்னு சொல்லி பழக்கியும் கொடுத்துட்டா அவங்க எல்லாத்தையும் மறந்துட்டு… வேண்டாமடா சாமி..
மாமாவின் வீட்டில் இருந்து அன்று இரவே களவாடி வந்திருந்த செல்போனை கையில் எடுத்து பார்த்தவன் “மன்னிச்சிருங்க மாமா” என்று மனதுக்குள் சொன்னேன்.
நான் களவாண்டு வந்த மறு நாள் விடியற்காலையில் அழுத முகமாய் வந்து நின்ற மாமாவின் முகம், “மாப்பிள்ளை நீ கொடுத்த செல்போனை காணலை” கை கால் உதற சொன்னவர், அது முன்னாடியே முழிச்சு பழகிட்டேன், எனக்கு என்ன பண்ணறதுண்ணே தெரியலை” புல்மபினார். இரண்டு மூன்று நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக அதை மறந்தவர் மீண்டும் மாடு கன்னுகளுடன்..அத்தை மனதும் சந்தோசமாக..!