கோயில் கொடை

கொடை

செவ்வாய்க்கிழமை நடக்கவிருக்கும் கோவில் கொடைக்கு, திங்கள் இரவு தூங்காமல் விழித்திருந்து சமைப்பாள், அம்மா. பெரிய தூக்குவாளியில் புளிச்சோறும், சின்ன தூக்குவாளியில் புளிக்கறியும் அடைத்தாள். ஒரு சின்ன டிபன் பாக்ஸில் வாழையிலை வைத்து அதற்குள் புளித்துவையலை நிரப்பினாள். பார்க்கும் போதே எச்சிலூறியது.

சித்தியும் அத்தையும் இட்லி அவித்தார்கள். சாம்பாரும் மிளகாய்ப் பொடியும் தொட்டுக்க எடுத்து வைத்தார்கள். மறுநாள் கெட்டுவிடும் என்பதால் சட்னி மட்டும் வைக்கவில்லை. ஒவ்வொன்றையும் ஒவ்வொரு தூக்குவாளியில் வைத்து மூடினேன் நான்.

முழுக் குடும்பத்துக்கும் ஒரேயொரு "டக்கர்" பிடித்தார்கள். வாழைக்குலைகளையும் ஏற்றிக் கொண்டு, சாப்பாட்டு வாளிகளையும் வைத்துக்கொண்டு நெருக்கியபடி இருந்தார்கள். இடமில்லாமல் பெரியம்மா மடியில் உட்கார்ந்தேன் நான்.

அது ராதாபுரம் அருகில் ஒரு குக்கிராமம். உதயத்தூர் அதன் பெயர். அங்குச் செல்ல நல்ல சாலைகள் எதுவும் கிடையாது. வண்டி மேடுபள்ளம் ஏறி இறங்க, தூக்குவாளி மூடி திறந்து சாம்பார் மெல்லக் கசிந்தது.

வண்டி பூராவும் அத்தையின் சாம்பார் வாசம். அப்போதே ரெண்டு இட்லி கிடைக்காதா என்று எனக்குத் தோன்றியது. கேட்டால் பாட்டி, தலையில் குட்டுவாள் என்று அமைதியாக இருந்தேன்.

நெட்ட சித்தப்பாவின் தலை வண்டியின் மேல்கம்பியில் இடித்தது. "எலேய் கோமுட்டி! சொத்தம் மொள்ளத்தான் போயான்"என்று சித்தி டிரைவரைத் திட்டினாள்.

டிரைவர் எங்கள் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கம். அவரும் லேசுபட்ட ஆளு இல்ல. "உம்ம புருஷன யாரும்மா இம்புட்டு ஒசாரமா வளரச் சொன்னது" என்று அவர் பதிலுக்குப் பேசினார். வண்டி பூராவும் ஒரே சிரிப்பாணி.

அந்த ஊரைச் சுற்றிப் பெரிய பெரிய காற்றாடிகள் ஓடின. அப்படியே மேலே ஏறிச் சென்று விடலாமா என்று எனக்குத் தோன்றியது. மேலே இருந்துகொண்டு ஊரைப் பார்க்க ஆசை.

ஆனால், நாங்கள் வெட்ட வெளியில் போர்வைகளை விரித்து அப்படியே அமர்ந்தோம். வாகனங்கள் அங்கு அவ்வளவாக கிடையாது. வீடுகள் அவ்வளவாக இல்லை. வேறு உலகத்தில் வாழ்வது போல இருந்தது. வயதான தாத்தா ஒருவர் தானமாக மோர் கொடுத்தார். வயிறு முட்டக் குடித்தேன்.

'நாடு நல்ல நல்ல நாடு
நாவலர்கள் போற்றும் நாடு"
என்று ஒருபுறம் வில்லுப்பாடல் கேட்டது. அப்புறம் பூசை நடந்தது. மேளச் சத்தம் கேட்டதும் சாமிவந்து மாமா ஆடினார்.
அவிழப் போன வேட்டியைப் பெரியப்பாவும் சித்தப்பாவும் இறுக்கிக் கட்டினார்கள். அம்மாவும் பெரியம்மாவும் சாமிக்குப் பொங்கல் வைத்தார்கள்.

ஏராளமான கூடாரக்கடைகள் . அங்கங்கு ஐஸ் வண்டிகள் நின்று கொண்டிருக்கும். ஒரே ஒரு கூடை ராட்டினம் இருந்தது. அதன் அருகிலேயே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். எல்லாக் கூடைகளிலும் ஆள்கள் ஏறிவிட்டார்கள். ஒரு கூடை மட்டும் காலியாக இருந்தது. வேறு ஆள் கிடைக்காத காரணத்தால் பைசா இல்லாமலேயே என்னை ஏற்றினார், ராட்டுக்காரர்.

"தேவுடா தேவுடா" பாடும் பொம்மை செல்போன் கேட்டு அம்மாவிடம் அடம்பிடித்தேன்.

"இந்த வருஷம் அப்பா கிட்ட காசு இல்ல அடுத்த வருஷம் கண்டிப்பா வாங்கித்தரேன்" என்று போன வருஷத்தில் சொன்ன அதே வசனத்தைச் சொல்லிச் சமாளித்தாள்.

"நீ இப்போ வாங்கித் தரலனா
பெரிய புள்ளையா ஆனதும்
உனக்குச் சம்பாதிச்சுத் தரமாட்டேன்" என்று தரையில் புரண்டு அழுதேன். அழுதுகொண்டிருக்கும் என்னை இழுத்துச் சென்று சேமியா ஐஸ் வாங்கிக் கொடுத்தாள், பாட்டி.

பிடிக்கத் தெரியாமல் குச்சியைப் பிடித்துக் கீழே தவறவிட்டு மீண்டும் அழுதேன். இந்த முறை தலையில் கொட்டி, கரகரவென இழுத்து வந்தாள் பாட்டி.

கோயில் திருவிழா முடிந்து
எல்லோரும் வீடு திரும்பினோம்.

அன்று கனவில் சாமி வந்து, மண் ஒட்டிய அந்த ஐஸை எடுத்துச் சட்டையில் துடைத்துச்
சாப்பிட்டுக் கொண்டிருந்தது!

எழுதியவர் : திசை சங்கர் (28-Jul-23, 10:03 pm)
சேர்த்தது : THISAI SANKAR
பார்வை : 88

மேலே