மனம் மனம் பயம் பயம்

மனம்.. மனம்.. பயம்.. பயம்..

எச்சரிக்கை: வாசகர்கள் இது ஒரு கதையாக படித்து மறந்து விடுங்கள், வைத்தியரை பார்த்து விடுங்கள். (அப்பாடி..முதல்லயே சொல்லிட்டோம்)

இரவு பனிரெண்டு மணிக்கு மேல் தாண்டியிருக்கலாம். நல்ல உறக்கத்தில் இருந்த அபிராமிக்கு சட்டென விழிப்பு வந்து விட்டது. விழித்து அப்படியே மேலே சுற்றும் காற்றாடியை பார்த்தபடியே இருந்தாள்.
இடது புறமாய் நெஞ்சுக்குள் சிறு குத்தல் போன்ற உணர்வு, இதென்ன திடீரென்று..! எழுந்து, உட்கார்ந்தவள் மெல்ல மூச்சை இழுத்து பார்த்தாள். இடதா வலதா..? இடதுதான், மெல்ல குத்துவது போல..!
வேர்க்க ஆரம்பித்து விட்டது, கடவுளே இந்த வயசிலயா? வலது கை பக்கம் உணர்வுகள் மரத்து போவது போல..! இதிலும் அவளுக்கு சந்தேகம் தோன்றியது, இடது கையா வலது கையா? இடது என்றால்…? ஆனால் வலது கை மரத்து போவது போல..இல்லையில்லை.. இப்பொழுது இடது கையும் மரத்து போவது போல உணர்வு..
அவ்வளவுதானா? இந்த முப்பத்தி எட்டு வயசுல மாரடைப்பு வரப்போகிறதா? கடவுளே அருகில் அடித்து போட்டாற்போல் தூங்கி கொண்டிருந்த கணவனை பார்த்தாள். அவனை எழுப்பலாமா? நினைத்தவள், திடீரென்று “யோகி” மன நிலைக்கு போனாள், “வேண்டாம் நிம்மதியாய் தூங்கட்டும்” அவருக்கு எத்தனையோ தொல்லைகள் கொடுத்திருக்கிறோம், போகும் போதாவது யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல் போய் விடலாம்.
நாளை…. அலுவலகத்தில்.. எதிர்த்த மேசை கல்பனா என்ன சொல்லி கொண்டிருப்பாள் “சே..இந்த வயசுலயா ? நல்ல மனுஷி ஆச்சே” ஆனால் மனசுக்குள் அப்பாடி தொலைஞ்சா இப்படி கூட நினைக்கலாம். அவள் அப்படி நினைக்க காரணம் இருக்கு, நான் கொஞ்சம் சிவப்பு, அவளுக்கு அதுவே ஒரு எரிச்சல், புதுசா வேலைக்கு ஜாயின் பண்ணறவங்க என் கிட்டே வந்து ‘மேடம்’ உங்களை பாத்து முப்பத்தஞ்சை தாண்டுனவங்கன்னு சொன்னா யாரும் நம்ம பாட்டாங்க” இப்படி பேசி சிரித்துவிட்டு போவதை எதிரில் உட்கார்ந்து பார்த்து கொண்டிருப்பவள் அவள்தானே.
அதுவும் அந்த ரமேஷ் நீங்க எனக்கு அக்கா மாதிரின்னு” அவன் வேலை எல்லாம் எங்கிட்டே கொடுத்து அவன் வேலை எல்லத்தையும் என்னைய செய்ய வைக்கறதை பார்த்து அவளே ஒரு முறை ரமேசு எங்ககிட்ட எல்லாம் வரமாட்டியா? நாங்க உதவி பண்ணமாட்டமா?ண்னு வாய் விட்டே கேட்டவளுக்கு அவன் அப்பவே பதிலடி கொடுத்தானே “நீங்க ஒரு நாளைக்கு செய்வீங்க” ஆனா இவங்க எப்ப வந்தாலும் உதவி பண்ணறாங்க”
ஆபிசுல நிறைய பேருக்கு என் பேர்ல பொறாமை, இருபத்தஞ்சு, முப்பதுலயே, இந்த பொம்பளைங்களும், ஆம்பளைங்களும் முகமெல்லாம் “ஓடுங்கி” ஆளும் மெலிஞ்சு போயிட்டிருக்கற நேரத்துல இங்க ஜாய்ன் பண்ணி பத்து வருசத்துக்கு முன்னாடி எப்படி வந்தீங்களோ அப்படியே இன்னும் இருக்கறீங்கன்னு மேனேஜர்லயிருந்து பியூன் வரைக்கும் என்னை பார்த்து சொல்ல வச்சுருக்கேனே.
இதுக்காக உடம்பை எவ்வளவு ‘மெயிண்டெய்ன்’ பண்ணிகிட்டிருந்தேன், காலையில எந்திரிச்சு வாக்கிங், ‘டயட்’ இப்படி உடம்பை வச்சுகிட்டு இருந்தும் என்ன பிரயோசனம்?
திரும்பி பார்த்தாள், கணவனை எழுப்பலாமா? மறுபடியும் வேண்டாம் “பாவம் தனியார் கம்பெனியில மேனேஜருன்னுதான் பேரு, ‘வேலை பெண்டை நிமித்திடறாங்கன்னு’ புலம்பியிருக்காரு, நான் இதுக்காகவே அவரை அதிகமா தொந்தரவு பண்ணகூடாதுன்னு நினைக்கறது, எங்க அவரு..! கேட்டாத்தானே அஞ்சு மணிக்கு எந்திரிச்சு நான் வாக்கிங் போறதுக்கு ரெடியாகறதுக்கு முன்னாடி “காப்பி போட்டு கொடுக்கறதும்” வாக்கிங் முடிச்சுட்டு வர்றதுக்குள்ள இரண்டு பசங்களை ஸ்கூலுக்கு அனுப்பறதுக்கு தயார் பண்ணிடறதும்”
சமையல் கூட எனக்கு அலுப்பா இருக்குன்னு “ஒரு டைம்” எப்பவோ சொல்லிட்டேன்னு வேலைக்காரிய சமைக்கறதுக்கு ஏற்பாடு பண்ணி வச்சுட்டாரு. அதுவும் சரிதான் ஏழு மணிக்கு அந்த பொண்ணு வந்து எட்டு எட்டரைக்கெல்லாம் “டாண்ணூ” சமைச்சு டேபிள்ள வச்சுட்டு போயிடறாளே” இதுவெல்லாம் நம்மால செய்ய முடியுமா? பாவம் இவர் கிட்ட சொன்னா அதைய கூட செஞ்சிடுவாரு, வேண்டாம் சமையல்காரியே இருக்கட்டும்னு சொல்லிட்டேனே.
நான் இந்த வயசுல இப்படி இருக்கேன்னு அக்கம் பக்கம் பொம்பளைங்களுக்கும் பொறாமை” இல்லையின்னா என் கிட்டயே வந்து பரவாயில்லை உன் வீட்டுக்காரரும் குழந்தைகளும்” அவங்கவங்க அவங்க வேலைய செஞ்சுக்கறாங்களேன்னு சொல்லியிருக்காங்களே. உள்ளுக்குள்ள எரிச்சல்லதான் சொல்லியிருப்பாங்க, ஒண்ணூ நான் இப்படி ஸ்லிம்மா இருக்கறது” இரண்டு இதுக்கு என் வீட்டுல அவரும் குழந்தைகளும் ‘அட்ஜஸ்ட்’ பண்ணிட்டு போயிடறதும்.
நாளைக்கு வீட்டுக்கு வந்து இதே பொம்பளைங்க என்ன சொல்லுவாங்க? “ அவங்களுக்கா? இந்த தெருவுலயே இந்த வயசுலயும் உடம்பை எப்படி கச்சிதமா வச்சிருந்தாங்க’ அவங்களுக்கு இப்படி ஒரு …? இது மாதிரி வெளியில பேசுனாலும் உள்ளுக்குள்ள “என்னா மினுக்கு மினுக்குன்னா”? கடைசியில தூக்கத்துலயே…! இப்படி மனசுக்குள்ள சொல்லிக்குவாளுங்க.
மெல்ல மெல்ல குத்தல் முதுகுப்புறம் ஆரம்பித்திருந்தது, தலை கனமானது போல் இருந்தது, அவ்வளவுதான்..கண்கள் தானாக சொருக ஆரம்பித்து விட்டது. அப்படியே தன் மார்பின் கைது இரு கைகளை வைத்தவள் காலையில் எழும்போது இப்படியே இருப்போம், முகத்தை சிரிப்பது போலவே வைத்துக்கொள்ள முயற்சிக்கும் போதே….கண்கள் அப்படியே அவளை தொலை தூரத்துக்கு இழுத்து கொண்டு போய் விட்டது.
அபிராமி..அபிராமி, கன்னத்தை யாரோ தட்டி அழைக்கும் சத்தம், கண்களை விழித்து பார்த்தவள் “மலங்க மலங்க விழித்தாள்’
என்ன மணி ஆறாகப்போகுது, இந்நேரத்துக்கு எந்திரிச்சு வாங்கிங் கிளம்பி யிருப்பியே? ஒரு கையில் ஆவி பறக்கும் காப்பி டம்ளருடன்..!
ஆறாகப்போகுதா? வேகமாக எழுந்து பாத்ரூமுக்குள் நுழைந்து கொண்டவள் பத்து நிமிடம் கழித்து வரும்போது மேசையில் இருந்த காப்பி ஆறிப்போயிருந்தது.
ஏங்க இதை மனுசன் குடிப்பானா? காலையில ஆறி அவிஞ்சு போன காப்பியை கொடுக்கறீங்க? இங்கிருந்தே சத்தம் போட்டாள். ஆமா நீ இவ்ளோ நேரம் கழிச்சு வந்தியின்னா..! இன்னொரு டம்ளரில் காப்பியுடன்
அலுவலகத்தில் நேற்றைய இரவு நடந்தது எதுவும் ஞாபகம் வரவில்லை, பதினோரு மணிக்கு சங்கீதவுடன் காண்டீன் சென்று “வடையோ போண்டாவோ” எடுத்துட்டு வாப்பா என்று சொல்லும்போது, இரவு நடந்தது ஞாபகம் வந்தது, அதே நேரத்தில் நேற்று பகலில் இங்கு நடந்ததும் ஞாபகம் வந்தது.
நேற்று இதே நேரம் கூட வந்திருந்த சங்கீதா எனக்கு உருளைக்கிழங்கு போண்டான்னா ஒத்துக்கறது இல்லை” சொன்னபோது இவள் என்ன நீ..? இந்த வயசுல அது ஒத்துக்காது இது ஒத்துக்காதுன்னு” என்னை மாதிரி “ஹெல்த்தியா” இருக்கணும்னா தைரியமா சாப்பிடணும், சொல்லிவிட்டு மூன்று உருளைக்கிழங்கு போண்டாவை வாங்கி சாப்பிட்டதும் ஞாபகம் வந்தது.
அபிராமி “வடையிருந்தா போதுப்பா” காண்டீன் பணியளரிடம் சொன்னதை, இன்றும் கூட வந்த சங்கீதா வியப்பாய் பார்த்தாள்

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (2-Aug-23, 10:38 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 197

மேலே