அறியாமையும் முட்டாள்தனமும்
அறியாமையும் முட்டாள்தனமும்
செண்பகநாதன் குற்றாலநாதர் கோவில் மற்றும் குற்றாலம் அருவியில் இருந்து முப்பது கிலோமீட்டர்
தொலைவில் உள்ள சாம்பவர்வடகரை கிராமத்தில் பண்ணையாராக இருந்தார். செண்பகநாதனுக்கு
விளைசல் மிகுந்த நிலங்களும்,தென்னை,தேக்கு மரங்களுடன் மாமரங்களும் நிறைந்த தோப்புகள்
அந்த கிராமத்தை சுற்றி இருந்தன. இவையெல்லாம் கவனிக்க கணக்கு பிள்ளையும் பல
விவசாயிகளும் இருந்தனர். பண்ணையார் கண்டிப்பானவராக இருந்தாலும் தங்கள் வீட்டில் வேலை
செய்பவர்களையும், தன்னிடம் விசுவாசமான விவசாயிகளையும் மிகவும் நல்ல முறையில் நடத்தியதால்
அவரிடம் இருப்பவர்கள் மிகவும் மரியாதையுடன் இருந்தனர்.பண்ணையாரின் மனைவி பார்வதி
எல்லோரையும் தங்கள் வீட்டிலேயே உணவு உட்கொள்ள செய்வாள். தங்களுக்கு என்ன உணவு
சமைக்கப் படுகிறதோ அதையே எல்லோருக்கும் எடுத்து வைத்து அவர்களை மிகவும் அன்புடன்
நடத்தி வந்தார்.அவளை யாவரும் பெரும் மதிப்புடன் நடத்துவார்கள். வேலையாட்களின்
குழந்தைகளும் குடும்பமும் சில நேரங்களில் உணவு உட்கொள்ள வருவதுண்டு. பேருந்துகள்
அருவிக்கு செல்லும் பொழுது தாமதமானால் இரவு வெகுநேரம் ஆகிவிட்டால் கிராமத்தில்
நிறுத்தப்படும். அங்கு இரவில் உணவு கிடைக்க வழி இல்லை. பயணித்தவர்கள் யாரைக் கண்டு
தங்களுக்கு உணவிற்கு என்ன செய்வது எனக் கேட்டால் ஒரே பதில் பண்ணையார் வீடு தான்
எனச் சொல்லும் அளவிற்கு அங்குள்ளவர்கள் அவர் வீட்டை பற்றி கூறிடுவார்கள். யார் எந்த
நேரத்தில் வந்தாலும் அவர் வீட்டில் உணவு உண்ணலாம். இரவு கண் விழித்து சமையல்காரர்
தங்களுக்கு என்று புதிதாக உப்புமாவோ,கலந்த சாதமோ அல்லது சுலபமாக செய்யக்கூடிய
சமையல் செய்து அதை கொடுப்பது வழக்கம். பேருந்து நிலையத்தில் இருக்கும் பணியாட்கள்
இதை மிகப் பெருமையாக பேசிக்கொள்வார்கள். நிலத்திலும், தோப்பிலும் பண்ணையாருக்கு
நல்ல விளைச்சல் கிடைத்த பொழுது வேலை செய்யும் ஆட்களுக்கு அதில் ஒரு பகுதியை
கொடுப்பார்.இதனால் எல்லோரும் அவர் நிலத்தில் மிகக் கடுமையாக உழைத்து விளைச்சலைப்
பெருக்குவார்கள். .பண்ணையாருக்கு விவசாயத்தில் மிகுந்த ஈடுபாடும் நிலத்தையும் தோப்பையும்
பராமரிக்கும் அறிவும் இருந்ததால் அவரை ஏமாற்றமுடியாது.இவ்வளவு பரப்பு நிலத்தை உழுது
விதை விதைத்தால் என்ன விளைச்சல் வரும் என்பது துல்லியமாக அவருக்கு தெரியும். ஆகவே
கணக்கு பிள்ளையும் விவசாயிகளும் அவரது அறிவுரைகளைக் கேட்டு அதன் பின் நிலத்தில்
வேலை செய்வார்கள் பண்ணையார் வீட்டில் அவர் அவரது மனைவி அவரது ஒரே மகள் என்ற
மூவர் தான் இருந்தனர். வேலையாட்கள் யாவரும் வந்தும் போய் கொண்டும் இருப்பர்,சமையல்
செய்யவும் மற்ற வீட்டு வேலைகளை செய்யவும் சில பெண் பணியாளர்கள் இருந்தனர். வீட்டில்
உள்ள வேலையாட்கள் அவரது மகளான யாமினியை
மிகக் கவனமாக பார்த்துக் கொள்வார்கள். சில வேலையாட்களின் குழந்தைகள் ஆவலுடன் வந்து
அவளோடு விளையாடுவதும் உண்டு.இதை பண்ணையாரோ அவர் மனைவியோ கண்டிக்க
மாட்டார்கள்.அந்த குழந்தைகளையும் தங்கள் வீட்டு குழந்தையைப் போல
நடத்துவார்கள்.இதனால் அந்த குழந்தைகள் அவர்களிடம் மிக மரியாதையும் மதிப்பும்
வைத்திருந்தனர்.சிறு சிறு வேலைகளை தாமாகவே முன் வந்து செய்து கொடுத்தனர்.
பண்ணையார் தனது மகளை முழு சுதந்திரமும், தைரியமும் உள்ள பெண்ணாக வளர்த்தார். அவள்
மற்ற குழந்தைகளைப் போல அரசாங்க பள்ளிக்குத் தான் படிக்கச் சென்றாள்.அவளை
எல்லோருக்கும் தெரிந்தாலும் அவளுக்கு எந்த விதத்திலும் சலுகைகள் அளிக்க படவில்லை. மிதி
வண்டியின் பள்ளிக்கு சென்று வர ஏற்பாடு செய்து அதற்கு ஒருவனை நியமித்து வைத்திருந்தனர்.
பின்னர் மகளின் விருப்பப்படி அவளுக்கு ஒரு மிதிவண்டியை வாங்கி கொடுத்த பின் அவளே
பள்ளிக்கு செல்ல ஆரம்பித்தாள். விளையாட்டிலும் படிப்பிப்பிலும் மிகவும் கெட்டிக்காரியாக
இருந்தாள் யாழினி. அவளை எல்லோரும் செல்லமாக அழைக்கும் பெயர் தங்கம் என்பதுதான்.
அதற்கு முக்கிய காரணம் அவள் பிறந்தபின் பண்ணையார் மிகப் பெரிய அளவில் வளர்ச்சி
அடைந்து தனது செல்வத்தையும் பெருக்கி விட்டதால் தான். பள்ளியில் யாழினி நன்றாக படித்து
முதல் மாணவியாக பரிசு பெற்ற பொழுது பண்ணையார் தங்கள் வீட்டில் அதை ஒரு விழாவாக்கி
வருவோருக்கெல்லாம் உணவளித்து கொண்டாடினார். அந்த கிராமத்தில் எந்த வீட்டிலும் உலை
எரியவில்லை எல்லோரும் பண்ணையார் வீட்டில் உணவு உட்கொண்டு தங்கள் பாத்திரங்களிலும்
எடுத்து சென்றதாக இன்னும் அங்கு பேசி கொள்வர். யாழினி தான் ஒரு மருத்துவராகி கிராமத்து
மக்களுக்கு அவளால் முடிந்தவரை உதவவேண்டும் என நினைத்தாள். பண்ணையார் அவளை ஒரு
நல்ல வக்கீலாக ஆகவேண்டும் என்ற தனது கருத்தை அவளிடம் கூறினார்.
யாழினிக்கு நடனம், இசை ஆகியவற்றிலும் ஈடுபாடு இருந்தது. அவள் மேடையில் பலமுறை
இவைகளைப் பற்றி பேசியும்,இசை, நடனம் நிகழ்ச்சிகளை நடத்தியும் பரிசுகளை வென்றிருக்கிறாள்.
அப்பாவின் ஆசைப்படி வழக்கறிஞர் ஆவதற்கான படிப்பை தொடர யாழினி மதுரை நகரத்தில் உள்ள
கல்லூரிக்குப் படிக்க செல்ல வேண்டி இருந்தது. அங்கேயே தங்கி படிக்க வேண்டிய கட்டாயம்
இருந்ததால் அங்கு ஒரு வீட்டை வாங்கி அவளுக்கு வேண்டிய வசதிகளைச் செய்து ஒரு
வேலைக்காரியையும் சமையல் மாமியையும் ஏற்பாடு செய்து பண்ணையார் அவளை மதுரைக்கு
கொண்டு விட்டு விட்டு கிராமத்திற்கு வந்தார்.வந்தபின் அவருக்கும் பார்வதிக்கும் வீடே சோபை
இழந்ததுபோல தோன்றியது. மதுரை தானே நான்கு மணிநேரத்தில் சென்று தங்கத்தை மாதத்தில்
ஒன்றோ இரண்டோ முறை பார்க்கலாம் என்று இருவரும் மனதை தேற்றி கொண்டனர். யாழினி
மூன்றாண்டுகளில் படிப்பை முடித்து மாநிலத்தில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்று தங்க பதக்கம்
பெற்றாள். மதுரையில் பல நிறுவனங்களும் அவளின் திறமையை பாராட்டி அவளுக்கு வேலை
அளித்தது. ஆனால் கிராமத்து மக்களின் வேண்டுகோளுக்கு இணங்கி அவள் சாம்பவர்வடகரைக்கு
மீண்டும் வந்தாள். மக்களுக்கு உதவ வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் வக்கீலாக தொழில்
செய்ய ஆரம்பித்தாள். கிராமத்து மக்களின் எந்த பிரச்னையானாலும் அவள் அவர்களுக்கு நல்ல
யோசனை வழங்கி கிராமத்து மக்களின் மனதில் இடம் பிடித்தாள். செண்பகநாதனும் அவர்
மனைவியும் யாழினிக்கு திருமணம் செய்ய முடிவெடுத்து அவளுக்கு ஏற்ற தகுதியுள்ள
மாப்பிள்ளையைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். பண்ணையாருக்கு வரக்கூடிய மாப்பிள்ளை தன்
வீட்டோடு இருக்கக் வேண்டும் என்ற ஆசை அதை போல ஒருவனை தான் தேட விரும்பினார். .
பல மாதங்களாக பல ஊர்களில் தேடியும் ,அவருடைய மகளுக்கு யாரும் பொருத்தமாக
அமையவில்லை. சில இடங்கள் தகுதி உள்ளவையாக இருந்து குடும்பமும் நல்லதாக அமைந்த
பொழுது அந்த வரன்கள் மாமனார் வீட்டில் தங்கும் மாப்பிள்ளையாக வர விரும்பவில்லை.
சென்னையில் ஒரு சம்பந்தம் வருவதற்கு அறிகுறிகள் தென்பட்டதும் அங்கு சென்று தங்கி
அவனையும் அவன் குடும்பத்தையும் பற்றி அறிந்து கொண்டு,பின்னர் அவனை சென்று பார்க்கலாம்
என்ற எண்ணத்தோடு பண்ணையாரும் பார்வதியும் யாழினியுடன் சென்னைக்கு பயணம்
மேற்கொண்டனர்.
பண்ணையார் அவனைப் பற்றி விசாரித்தார்.அவன் படித்தவனாக இருந்தான்.ஒரு நல்ல
அலுவலகத்தில் வேலையிலும் இருந்தான்.அவனை பற்றி அந்த அலுவலகத்தில் சென்று கேட்டதில்
அங்குள்ளவர்கள் அவனை பற்றி நல்ல செய்தியை கூற அவன் தனது மகளுக்கு நல்ல துணையாக
இருப்பான் என்ற முடிவோடு அவனது குடும்பத்தை பார்க்க ஒரு நல்ல நாளில் அவர்கள் வீட்டிற்கு
சென்றனர்.
அவனது குடும்பம் சிறிது, அவர்கள் செல்வச் செழிப்பில் .இல்லை ஆயினும் ஒற்றுமையாக அவனும்
அவனது சகோதரரும் அம்மாவுடன் அந்த குடும்பத்தை நடத்தி வந்தனர்.வீடு நன்றாக பராமரிக்க பட்டு
அழகான முறையில் சுத்தமாக இருந்தது. பெரியவர்களை மதிக்கும் தன்மை உள்ளவர்களாக அவர்கள்
இருந்தனர். தனது தகுதிக்கு ஏற்ற இடமில்லை என்றாலும் அவர்களின் மரியாதையையும்,பழகும்
விதத்தையும் கண்டு பண்ணையாரும் பார்வதியும் இந்த இடத்தில் நம் பெண் நல்லபடி வாழ்க்கையை
வாழ்வாள் என மனநிம்மதியோடு அந்த மாப்பிள்ளையிடம் தங்களது விருப்பத்தை
தெரிவித்தனர்.யாழினியும் அவனுடன் தனியாக பேசி விட்டு தனக்கும் அவனை பிடித்திருக்கிறது எனக்
கூற அவனையே மாப்பிளையாக்க முடிவு செய்து, பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்க நாள்
பார்த்து ஒரு பெரிய அளவில் கல்யாணத்தை நடத்தி முடித்தார், மாப்பிள்ளை வேலையில் இருந்து
கொண்டு அவர்களின் வீட்டில் இருந்தவாறே அதை செய்து கொண்டிருந்தான். மாமனார் வீட்டில்
யாழினி சொல்வதைக் கேட்டுக் கொண்டு, அமைதியாக இருந்து வந்தான். சில மாதங்கள் மிக
மகிழ்ச்சியோடு அங்கு கழிந்தது.பின்னர் சென்னைக்கு ராகுல் தனது மனைவி யாழினியுடன் வந்து
அலுவலகம் வழி கிடைத்த ஒரு வாடகை வீட்டில் குடியேறினான். வேலை நிமித்தம் அவன் மாதம்
இருமுறை வெளியூர்களுக்கு செல்ல வேண்டி இருந்தது.சில நேரங்களில் மனைவி யாழினியையும்
அழைத்து கொண்டு செல்வான்.யாழினிக்கு வெளியூர் செல்லும் பொழுதெல்லாம் அங்குள்ள புதிய
உணவு வகைகளை சுவைப்பதும் அங்கு நடக்கும் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளை காண்பதும்
வழக்கமானது. ராகுல் ஆவலுடன் கூட செல்வான் ஆனால் அவனுக்கு அவள் புரியாது ஒரு முப்பது
நிமிடத்தில் அவனுக்கு அந்நிகழ்ச்சிக்கள் அலுத்து விடும். யாழினி கடைசி வரை இருந்து
கலைஞர்களைப் பாராட்டி விட்டு தான் வருவாள். சில ஆண்டுகள் சென்னையில் கழிந்தது. பின்னர்
ராகுலை கேரள மாநிலத்திற்கு மானேஜராக மாற்றிட கேரளாவில் திருவனந்தபுரத்தில் இருவரும் ஒரு
வீட்டை எடுத்துக்கொண்டு குடிபெயர்ந்தனர். இந்த செய்தி செண்பகநாதனுக்கும்,பார்வதிக்கும்
தேனாக இனித்தது. அதற்கு காரணம் கிராமத்தில் இருந்து நான்கு மணிநேரத்தில் அங்கு சென்றுவிட
முடியும் என்பதால் தான். . அவர்கள் யாழினியையோ,யாழினோ அவர்களையே அடிக்கடி பார்க்க வர
முடியும்.ராகுல் பதவி உயர்வு பெற்றவுடன் ஒரு காரையும் வாங்கி இருந்தான். காரில் கேரளாவை
பாதை வழி சுற்றி பார்க்க மிகவும்அழகாகவும் கண்களுக்கு குளிர்ச்சியாகவும் இருந்தது.பச்சை பசேல்
என்ற வயல்களும், தென்னை மரங்களும் வழி நெடுக அமைந்துள்ள அழகிய கிராமங்களும் மனதைக்
கொள்ளை கொண்டன. பேசும் மொழியில் சில சொற்களே புரிந்தாலும் மக்கள் மிகவும் அன்பாகவும்
அனுசரணையாகவும் இருந்தனர். யாழினிக்கு இந்த இட மற்றம் மிக மகிழ்ச்சியை
கொடுத்தது.கிராமத்தில் உள்ளது போல வயல்களும் மரங்களும் ஓடைகளும் மிகவும் சுவையான
தண்ணீரும் ,பச்சைக் காய்கறிகளும் கோவில்களும் அவளை வெகுவாக கவர்ந்தன. பல வித கலை
நிகழ்வுகள், அங்குள்ள மக்களின் அன்பு இவைகள் சந்தோஷத்தை கொடுத்தது. அம்மா அப்பாவிடம்
தினமும் பேசி கிராமத்து செய்திகளை அறிந்துகொண்டாள். இருவரும் சேர்ந்து கிராமத்திற்கு அடிக்கடி
சென்று வரலானார்கள்.
இந்த மகிழ்ச்சியை இரட்டிப்பாக்க யாழினிக்கு கிடைத்த செய்தி டாக்டர் அவளது பரிசோதனை
"பாசிட்டிவ்" என வந்தது., செண்பகநாதனும் பார்வதியும் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே
இல்லை.
பார்வதி சில மாதங்களில் அவர்களுடன் வந்து தங்கி எல்லா வேலைகளையும் அவளே கவனித்து
வேலையாட்களை கொண்டு வீட்டை நடத்தினாள். யாழினிக்கு முழு நேரம் ஓய்வு.படுக்கையை விட்டு
எழுந்தாலும் கூடவே யாரேனும் அவளுக்கு துணையாக இருந்தனர்.
மாதங்கள் உருண்டோடின, யாழினி ஒரு அழகிய பெண் மகவை ஈன்றெடுத்தாள். கிராமத்தில்
குழந்தையை எடுத்து வந்த நாள் மீண்டும் ஒரு விழா நாளாகியது. குழந்தைக்கு வர்ஷினி என்ற பெயர்
இட்டு தொட்டில் சடங்குகளை செய்தனர்.ராகுல் அவளையும் குழந்தையையும் கிராமத்தில் விட்டு
விட்டு அவ்வப்பொழுது திருவனந்தபுரத்திற்கு சென்று வந்தான்.
சென்னையில் இருந்து அவன் அம்மாவும் சகோதரனும் அவனுடன் கிராமத்திற்கு வந்து குழந்தை
வர்ஷினியையும், யாழினியையும் பார்த்து மிக மகிழ்ச்சியுடன் பல நாட்களை கழித்து விட்டு
சென்றனர். ராகுலுக்கு துபாய் நகரில் வேலைக்கு உத்தரவு வந்தது அதை ஏற்று அவன் துபாய்க்கு
சென்றான்.எல்லோரும் குழந்தை வர்ஷினி பிறந்த வேளை தந்தைக்கு வெளிநாடு செல்லும் பாக்கியம்
வந்தது எனக் குழந்தையை புகழ்ந்தனர். வெளி நாட்டில் இருந்தாலும் அவனுக்கு மனைவி யாழினியின்
நினைவும் குழந்தை வர்ஷினியின் நினைவும் எப்பொழுதும் இருந்தது.குழந்தையை சரியாக கூட
கொஞ்சமுடியாமல் இந்த முடிவை எடுத்து வெளிநாட்டிற்கு வந்தோமே என ஒவ்வொரு இரவும்
நினைத்து கண்களில் நீர் வரும்.அவர்களை எப்படியாவது இங்கே அழைத்து வர வேண்டும் என
நினைத்து அவர்கள் வரும் பொழுது இருக்க வேண்டிய வசதிகளை செய்ய அரம்பித்தான். தன்னுடைய
இரு அறைகள் கொண்ட அடுக்கு மாடி கட்டடத்தில் பல மாற்றங்களை செய்து குழந்தைக்கு வேண்டிய
பொருள்களையும் வாங்கி வைத்தான்.அவனுடன் வேலை செய்யும் நண்பர்களிடம் ஆலோசனைகளைக்
கேட்டு அவற்றையும் செய்தான். மாதங்கள் உருண்டோடின வெளி நாடு வந்து பத்து மாதங்கள் ஆகி
இருந்தது.யாழினி அனுப்பிய குழந்தையின் மற்றும் அவளின் புகை படங்கள் அவனுக்கு வேலையில்
இருந்து வந்தவுடன் ஒரு ஆறுதல். ராகுலிடம் ஒருநாள் நிறுவனம் தங்களது ஒரு புதிய முடிவை
அவனிடம் கூறியது.இந்தியாவின் முன்னேற்றம் வெகு விரைவில் நடக்கிறது ஆகவே நாங்களும்
இந்தியாவில் ஒரு கிளை ஆரம்பிக்க வேண்டும் எனக் கருதுகிறோம் நீ இந்தியாவிற்குச் சென்று
அதைச் செய்ய வேண்டும் எனச் சொல்லி அவனை கேட்க அவன் அதை உடனே சரி எனக் கூறிட
அவனை இந்தியாவிற்கு அனுப்பியது. திருவனந்தபுரம் வந்து இறங்கியதும் அலுவலகம் ஆரம்பிக்க
வேண்டிவற்றை செய்து உடனே யாழினியையும் குழந்தை வர்ஷினியையும் தன்னுடன் தங்க
ஏற்பாடுகள் செய்தபின் கிராமத்திற்கு சென்று அவர்களை கூட்டிக் கொண்டு வந்தான்.
செண்பகநாதனும் பார்வதியும் மகளும் குழந்தையும் அவர்களுடன் பல மாதங்கள் இருந்து விட்டதால்
அவர்களைப் பிரியும் பொழுது மிக வருத்தம் அடைந்தனர். இருவரும் பல புண்ணிய கோவில்களுக்கு
செல்ல முடிவெடுத்து பயணத்திற்கு ஏற்பாடு செய்தனர். கணக்கு பிள்ளையிடம் தங்களது நிலங்களின்
பொறுப்பையும்,தோப்புகளில் பராமரிப்பையும் ஒப்படைத்துவிட்டு காசி ராமேஸ்வரம் ஹரித்வார்
ரிஷிகேஷ் கேதார் பத்ரி என பல இடங்களுக்கு சென்றனர். எல்லா இடங்களிலும் அவர்கள்
ஆண்டவனைத் தொழுத பொழுதிலும் மகளின் நினைவும் பேத்தியின் நினைவும் மனதில்
வந்துகொண்டே இருந்தது . பயணம் முடித்து வரும் பொழுது பண்ணையார் பார்வதியிடம்
மாப்பிள்ளை வேலை செய்தது போதும் இனி நம் குடும்பத்துடன் இருக்கட்டும் என்ற தனது முடிவைக்
கூறிட அவளும் சம்மதித்தாள். கிராமத்தில் நவராத்திரி பண்டிகை வெகு விமரிசையாக நடை பெற்றது.
பல பெரிய பாடகர்கள் அந்த கிராமத்திற்கு வந்து இசை நிகழ்ச்சிகளை நடத்துவர். இசை பாடகர்கள்
பண்ணையார் வீட்டிற்கு வந்து இசை கச்சேரி நடத்துவது வழக்கம்.அவர்களுக்கு நல்ல மரியாதையும்
சன்மானமும் பண்ணையார் வீட்டில் கிடைக்கும். பண்ணையார் கோவில்களுக்கு சென்று விட்டதால்
அந்த வருடம் ராகுலும் யாழினியும் குழந்தையுடன் அங்கு இருந்தனர்.
ஒருநாள், பாடகர் ஒருவர், தம் குழுவினருடன் பண்ணையார் வீட்டுக்கு வந்தார்.
பண்ணையார் யாத்திரை சென்றுள்ளார். எனக்கு இசையில் விருப்பம் இல்லை. நீங்கள் பண்ணையார்
வந்த பிறகு வரலாம்,'' என்றார் மாப்பிள்ளை.
பாடகர் வருத்தத்தோடு புறப்படத் தயாரானார்.
அப்போது, குளித்து விட்டு வந்த யாழினி ""வந்தவர் யார் எதற்காக வந்தார்?'' என்று கேட்டாள்.
""பாடகர், பாடினால் சன்மானம் பெறலாம் என்று வந்துள்ளார். பண்ணையார் யாத்திரை
போயிருக்கிறார். அவர் வந்த பிறகு வரலாம் என்று கூறி அனுப்பினேன்,'' என்றான் ராகுல்.
""நம்பிக்கையோடு வந்தவரை வெறுமனே போகச் சொல்வது முறையல்ல, என்று கூறி பாடகரை
வரவழைத்து இசை நிகழ்ச்சி நடத்தும்படி ஏற்பாடு செய்தாள் யாழினி.
""எனக்கு இசையே தெரியாது. நான் எப்படி சபையில் இருந்து ரசிப்பது?'' என்றான் ராகுல். அதை நான்
கவனித்துக் கொள்கிறேன்,'' என்று கூறிவிட்டு அவன் கையில் ஒரு நூலைக் கட்டி, அதை தன்கையில்
பிடித்துக் கொண்டு, நான் இதை இழுக்கும் பொழுதெல்லாம் நீங்கள் தலையை ஆட்ட வேண்டும் என
அவள் கூறிவிட்டு யாழினி அமர்ந்தாள்.
பாடகர் உற்சாகமாகப் பாடிக் கொண்டிருந்தார். பாட்டுக்கு ஏற்றபடி நூலை ஆட்டிக் கொண்டிருந்தாள்
யாழினி.அவ்வவ்போது ராகுலின் தலை அசைந்து ஆடியது.
"மாப்பிள்ளையைக் கண்ட பாடகர் நல்ல ரசிகராக இருக்கிறாரே' என்று நினைத்து, மேலும்,
சிறப்பாகப் பாடிக் கொண்டிருந்தார்.
திடீரென்று பாடகரைப் பார்த்து, ""உம்முடைய பாட்டை நிறுத்தும்!'' என்றார் ராகுல் பாடகர்
திடுக்கிட்டார். தான் பாடிய பாட்டில் அல்லது ராகத்தில் ஏதேனும் தவறு நேர்ந்து விட்டதோ என்று
குழப்பத்தில் ஆழ்ந்து பாட்டை நிறுத்தி விட்டு, மாப்பிள்ளைப் பார்த்தார்.
நூல் அறுந்து விட்டது என்றார் மாப்பிள்ளை. யாருக்கும் அவர் என்ன கூறுகிறார் என்று
புரியவில்லை. பாடகரும் என்ன நடக்கிறது என்பதை அறியாமல் பண்ணையாரின் மாப்பிள்ளை
என்பதால் இந்த செய்கையை பொறுத்து கொண்டார். யாழினிக்கு என்ன செய்வதென்று
தெரியவில்லை.யாழினி அவருடைய இடுப்பில் கட்டியுள்ள வேஷ்டியின் மேல் அது நழுவி விடாமல்
இருக்கக் கட்டிய நூல் அறுந்துவிட்டது பட்டு வேஷ்டி ஆனதால் அது வழுக்கி விடாமல்
இருக்கவேண்டுமே என்பதால் அவர் இதை கூறினார் என மன்னிப்புக் கேட்டுக்கொண்டாள்.
பாட்டை ரசிக்க தெரியாமல் இருப்பது குற்றம் இல்லை; ஆனால், ஒரு சபையில் தனது அறியாமையை
வெளிப்படுத்தி அதை ஒரு முழு அறிவிலியைப்போல் வெளியே காட்டுவது அதுவும் அனைவரும் கூடிய
சபையில் என்பது பெரிய முட்டாள்தனம்.

