குட்டி குட்டி கவிதைகள்

மனிதர்களாகிய நாம் கண்ணாடியைப் போன்றவர்கள்..
சில சமயங்களில் ஒருவரில் ஒருவரைப் பார்த்துக் கொள்கிறோம்..
சில சமயங்களில் ஒருவரோடு ஒருவர் மோதி உடைத்துக் கொள்கிறோம்.
-----------------------------------------
வாழ்க்கை எவ்வளவு அழகானதென்று
மார்னிங் ஷிப்டில் இட்லியும்
எவ்வளவு கொடூரமானதென்று
நைட் ஷிப்டில் பொங்கலும் சொல்லிவிடுகின்றன
-----------------------------------------
மெழுகுவத்தியை அழித்துவிட நினைத்த தீ
இறுதியில்
தன்னையும் அழித்துக்கொண்டது.
-----------------------------------------
காயாகும் முன்பே உதிர்ந்து விட்ட பூவொன்று
ஊஞ்சல் ஆடிக்கொண்டிருக்கிறது நூலாம்படையில்.

-----------------------------------------
கடவுளின் தனிமையை உணர்ந்துகொண்டேன்
இன்று கூட்டமாக இருக்கிறேன்.
-----------------------------------------
காலையில் வெட்டப்படுவோம் என்பது தெரியாமல், நிம்மதியாய் உறங்கிக்கொண்டிருக்கின்றன
"கறிக்கடைக்கோழிகள்"
-----------------------------------------
சிரிக்கும்போது வருகின்ற கண்ணீர் எல்லாம்
அழுகை வரும்போது பிடிவாதமாய் அடக்கி வைத்தவைதாம்.
-----------------------------------------
பூக்கும் வரை காத்திருக்காதே மொட்டுகளாகவே பறித்து வை
உன் கூந்தலில் அவை மலர்ந்துவிடும்.
-----------------------------------------
தீபாவளிக்குப்
பட்டாசு வாங்கிக் கேட்ட மகனுக்காகக் "கம்பி மத்தாப்பு" கொளுத்துகிறார்
வெல்டர் அப்பா

எழுதியவர் : திசை சங்கர் (7-Aug-23, 8:39 pm)
சேர்த்தது : THISAI SANKAR
பார்வை : 65

மேலே