குடிமகன்கள்
குடிமகன்கள்... 14 /08 /23
தங்கள் கல்லறையை
தானே தேடிப்போகும்
தள்ளாடித் தள்ளாடி
தடுமாறும் நடை பிணங்கள்.
தாலியை அடமானம்வைத்து
தாரத்தை அடித்துஉதைத்து
தன்மானத்தை சாக்கடையில்
நாறடிக்கும் நாட்டின் குடிமகன்கள்
வருவாய்க்காய் ஏழை
வருவாயை சுரண்டி
வயிற்றில் அடிக்கும்
அரசை என்ன சொல்ல?
அரசன் அன்று கொல்லும்
தெய்வம் நின்று கொல்லும் - இங்கோ
அரசு நித்தம் கொல்லும்
தெய்வம் காணாது கொல்லும்.
குடிமக்களின் உயிர்க்கும் வாழ்வுக்கும்
அரசே பொறுப்பு
அரசே தடம் மாறிப்போக
இறையே நீதான் பொறுப்பு.
நீ படைத்த ஏதேன் தோட்டம்
சீர்கெட்டு சீரழிந்து நாசமாவது
காண சகியாமல்தான் நீயே உன்னை
சிலுவையில் ஏற்றிக்கொண்டாயோ..?
கண்முன்னே நாளும் கல்லறையில்
புதைந்திடும் உன் படைப்பினை
காண கூசியே நீயும்
கல்லாகிப் போனாயோ...?
வணங்கும் நீயென்ன?
ஆளும் அரசென்ன?
அவனவன் திருந்தாவிடின்
யாரை நொந்து என்ன பயன்?