குவளையைத் தன்னாரால் யாத்து விடல் - பழமொழி நானூறு 365

இன்னிசை வெண்பா

பன்னாள் தொழில்செய் துடைய கவர்ந்துண்டார்
இன்னாமை செய்யாமை வேண்டி இறைவர்க்குப்
பொன்யாத்துக் கொண்டு புகுதல் குவளையைத்
தன்னாரால் யாத்து விடல். 365

- பழமொழி நானூறு

பொருளுரை:

பல நாட்கள் ஊழியஞ்செய்து அரசனுடைய பொருள்களைப் பற்றி உண்டு மகிழ்ந்தவர்கள், பின்னர் ஒருகாலத்தும் துன்பம் செய்யாதிருத்தலை விரும்பி, அரசனுக்குத் தம்மிடத்துள்ள பொன்னைக் கொடுத்து அன்பால் ஒழுகுதல் குவளைமலரை அவற்றின் தண்டினாலேயே கட்டுதலோ டொக்கும்.

கருத்து:

அறிவுடையோர் அரசனிடத்துத் கொண்ட பொருளையே அவனிடத்துக் கொடுத்துத் தம்வயப் படுத்துவர்.

விளக்கம்:

நார் என்றது அதனையுடைய தண்டினை; பிற நாராற் கட்டுதற்கு ஏலாது குவளையை அதன் நாராலேயே கட்டுதலைப் போல, அரசனிடத்துக் கொண்ட பொருளாலேயே அவனை வயப்படுத்துக.

'குவளையைத் தன்னாரால் யாத்து விடல்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Aug-23, 6:21 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 34

சிறந்த கட்டுரைகள்

மேலே