உன்னை வருத்திக் கொல்லாதே, திருத்திக் கொள்

பலவருடங்களாக, சொல்லப்போனால் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக என்னுடைய சில கொள்கைகளில் மிகவும் பற்றுடனும் வெறியுடனும் இருந்தேன். சிறு வயதிலிருந்தே நான் மிகவும் உணர்ச்சி வசப்படுபவன். இதனால், நான் பலரிடம் கெட்ட பெயரை சம்பாதித்தேன். ஆயினும் நான் கொண்ட கொள்கைகளில் மிகவும் உறுதியாக இருந்தேன்.

குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் என்னை சரியாக மதிக்காதவர்களை, என்னை அவமானப்படுத்துபவர்களை, என்னை குத்தலாகப் பேசி கேலி செய்பவர்களை, மற்றும் புலால் உண்பவர்களை எனக்கு பிடிக்காது. என்னை மதிக்கவில்லை அல்லது தகுந்த பதில் மரியாதையோ அல்லது பதில் தராதவர்களையோ நினைத்தால் எனக்கு மிகவும் எரிச்சலாக இருக்கும். என்னை சரியாக நடத்தவில்லை அல்லது ஏற்ற மரியாதையை எனக்கு தரவில்லை எனும் காரணத்தினால் நான் பணி செய்து வந்த அலுவலகங்களில் பலபேரை ஒதுக்கிவிட்டிருக்கிறேன்.

புலால் விஷயத்தில் வள்ளலாரைப்பற்றி குறிப்பிடமுடியாமல் இருக்கமுடியாது. இராமலிங்க அடிகளார் என்று அழைக்கப்படும் வள்ளலார், நூற்றியைம்பது ஆண்டுகளுக்கு முன்பு மானிடத்திடம் வேண்டிக்கொண்ட இருமைய கொள்கைகளாகிய 'ஜீவகாருண்யம்' மற்றும் 'கொல்லாமை' இவைகளை என் வாழ்க்கையில் இவரைப்பற்றி அறிந்துகொள்வதற்கு முன்பிலிருந்தே கடைபிடித்து வருபவன் நான். மிகவும் தெளிவாக கூறவேண்டும் என்றால், கடந்த ஒரு வருட காலமாகத்தான், வள்ளலாரின் வாழ்க்கை வரலாற்றை மற்றும் அவரது அன்பின் தத்துவத்தின் அடிப்படையில் அமைந்த அவரது கொள்கைகளை பற்றிய விவரங்களை நான் அறிந்துவருகிறேன். ஆனால் இந்த குறுகிய காலத்தில், என் மனதளவில் இவரையே என் முதற்கடவுளாகவும் காண்கிறேன், வணங்குகிறேன். ஒரு பக்கம் அன்பில் விளைந்த குணங்களான இரக்கம், கருணை இவை அடங்கிய மனிதாபிமானம். இன்னொரு புறம் வன்முறை, உயிர்கொல்லுதல், கருணையின்மை, உறக்கமின்மை, நேர்மையின்மை, நாணயமின்மை. இவைதான் இன்றைய உலகத்தின் வாழும் முறைகள்.

நல்லது, என் சுபாவத்தால் எனக்கு ஏற்பட்ட இரண்டு வாழ்க்கை உதாரணங்களைத் இங்கு தர விரும்புகிறேன். உண்மையை சொல்கிறேன். நான் முப்பத்தியைந்து வருடங்கள் பணி செய்து வந்த நிர்வாகத்தையே எனக்கு பிடிக்காது. இதற்கு முக்கிய காரணம் என் நிர்வாகம் இரண்டு முறை எனக்கு கொடுத்த செய்யாத குற்றத்திற்கான தண்டனைகள். ஒரு முறை எனது நேர்மையும் வாய்மையும் சந்தேகிக்கப்பட்டன. என் பாத்திரம் அறிந்த எனது அனைத்து சக ஊழியர்களும் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை கண்டு ஆச்சரியம் கொண்டனர், அதிர்ச்சியும் அடைந்தனர். இதை நான் எப்படி சொல்வேன் என்றால் பெற்றெடுத்த தாய் பாலூட்டும் தனது குழந்தையின் மீது சந்தேகம் கொள்வதுபோலத்தான் இருந்தது என் நிர்வாகத்தின் செயல்.

இன்னொரு முறை என் நிர்வாகத்தின் அசட்டையால் எனக்கு ரூபாய் ஐம்பதாயிரம் நட்டம் ஏற்பட்டது. இன்று இதன் மதிப்பு ரூபாய் மூன்று லட்சத்திற்கு மேலாக இருக்கும். முதலில் எனக்கு இழைக்கப்பட்டது, என் நேர்மையையும் வாய்மையையும் சந்தேகித்த, சோதித்த என் நிர்வாகத்தின் தவறான அணுகுமுறை. அடுத்த முறை, நான் தற்செயலாக, கவனக்குறைவுடன் செய்த ஒரு காரியத்திற்காக என்னை நிர்வாகத்திற்கு பணத்தை கொடுக்குமாறு நிர்பந்தித்த ஒரு சூழ்நிலை. இந்த பணத்தை எனக்கு நிர்வாகம் மீண்டும், நெறிமுறைகள் மற்றும் ஒழுக்க ரீதியாக, நியாயமான முறையில் பெற்றுத்தருவதற்கான வாய்ப்புகள் இருந்தும், நான் அத்தகைய சாத்தியக்கூறுகளை உரிய அதிகாரிகளுக்கு தெரிவித்தபின்பும் எனக்கு ஏற்பட்ட பண நஷ்டத்தை நிர்வாகம் ஈடுசெய்யவில்லை.
மேலேகுறிப்பிட்ட நிகழ்வுகளால் எனக்கு என் நிர்வாகத்தின் மீதிருந்த மதிப்பும் விசுவாசமும் வெகுவாக குறைந்தது. ஆரம்பத்திலிருந்தே, நான் என் நிர்வாகத்திற்காக மிகவும் கடின உழைப்பு மற்றும் திறமையை அதிக அளவில் கொடுத்ததே இல்லை. ஏனோ என் மனநிலையும் என் செய்கைகளும் அப்படிதான் இருந்தது. இப்படிப்பட்ட ஒரு மனநிலையில் நான் ஏற்கெனவே இருந்துவந்ததால், மேற்குறிப்பிட்ட இரண்டு சம்பவங்கள் என்னை வெறும் சாதாரண ஒரு பணியாளராக மாற்றியது.
சரி, இப்போது இந்த கட்டுரையின் மையத்திற்கு வருகிறேன். என்னை மதிக்காதவர்களை நான் மிதிக்கவில்லை ஆனால் தூரத்தில் தள்ளி வைத்தேன், என் நிர்வாகத்தையும் சேர்த்துதான். என்னுடைய பொது மேலாளர் (General manager) ஒருவர் நான் அவருக்கு சில நாட்களில் காலை வணக்கம் (good morning) சொல்லியும், அவர் பதில் அளிக்காமல் உம்மென்று சென்றுவிட்டதால், நான் அதன் பிறகு அவரை நேரில் பார்ப்பதையே தவிர்த்தேன். ஒரு வேளை பார்த்தாலும் அவரை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன்.
என்னுடைய பல நண்பர்களிடமிருந்து, இதுபோன்ற காரணங்களினால் விலகிவிட்டேன். இந்த விஷயத்தில் எனக்கு தேவையான பொறுமையும் சகிப்புத்தன்மையும் இல்லவேயில்லை என்பதை நான் இங்கே தெள்ளத்தெளிவாக பதிவு செய்கிறேன். இப்போது இந்த வயதில் என்று சொல்வதை விட, கடந்த ஒரு வாரத்தில் எனக்கு ஏற்பட்ட மனக்கவலைகள் காரணமாக உதித்த ஒரு விளக்கமுடியாத தெளிதல்தான், என்னை இந்த கட்டுரையை எழுதப்பணித்தது.

இப்போதிலிருந்து நான் ஒரு உறுதியான தீர்மானம் செய்துவிட்டேன். அது என்னவெனில், எவரேனும் என் விருப்பத்திற்கு மாறாக பேசினாலும் நடந்துகொண்டால், அதை முடிந்தவரை பொறுத்துக்கொள்வேன். அப்படிப்பட்ட நபர்கள் எனக்கு செய்வதை, நான் அதிகம் பொருட்படுத்தாமல் விட்டுவிடுவேன். அப்படிச் செய்வதால் நான் அதிக நபர்களின் நட்பை, உறவை இழக்கமுடியாமல் இருக்கமுடியும். புலால் உண்பவர்கள் என்றால் எனக்கு ஒரு விவரிக்கமுடியாத வெறுப்பும் அதிருப்தியும் இருந்து வந்தது. இதனாலேயே, நான் பலர் வீட்டிற்கு செல்வதை தவிர்த்துவந்தேன். இங்கே மறைக்காமல் ஒரு உண்மையை சொல்கிறேன். என்னுடைய சிறந்த நண்பன் ஒருவனை, அவன் புலால் உண்கிறான் என்கிற முக்கிய காரணத்திற்காக, மெல்ல மெல்ல விலகிவிட்டேன். சில மாதங்களுக்கு முன்பு அவனின் சில பேச்சுகளும் செயல்களும் எனக்கு பிடிக்காமல் போகவே, அவனை நான் ஒரேடியாக ஒதுக்கிவிட்டேன்.

இதே தளத்தில் சில மாதங்களுக்கு முன்பு நான் ஒரு கட்டுரையில், ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தா இருவரையும் என் உள்ளத்தின் புனிதமானவர்கள்பட்டியலிலிருந்து விலகிவிட்டேன், இவர்கள் இருவரும் மீன் மற்றும் மாமிசம் உண்பவர்கள் என்று தெரியவந்ததால். ஆனால், தற்போது உதித்த ஞானோதயம் என்னுடைய கடந்த கால கொள்கைகளை விவேகத்துடன் மாற்றியமைக்க வழிவகுத்துள்ளது. மனிதர்கள் பலர் பல தவறுகள் செய்கிறார்கள், பொய் உரைத்தல், திருடுதல், வன்முறை செயல்களில் ஈடுபடுதல், லஞ்சம் வாங்குதல், பிறரை தாழ்த்தி பேசுதல், பிறரை ஏமாற்றுதல், இதுபோன்ற பல தீங்குகளை செய்கின்றனர். இந்தமாதிரி குணம் கொண்ட பல பேர்களிடம், பல வருடங்களாக நான் தெரிந்தும் தெரியாமலும் ஓரளவு சுமுகமாகவே பழகி வருகிறேன். இப்போது, சற்றே மாற்றியமைக்கப்பட்ட என் கொள்கைகள் காரணமாக, என்னை சரியாக மதிக்காதவர்கள், எனக்கு புறம்பக பேசுபவர்கள், புலால் உண்பவர்கள் போன்றவர்களையும் நான் மேற்கூறிய சராசரி மனிதர்களின் குணங்களில் அடங்கும் என்று தீர்மானித்துள்ளேன்.

இவ்வுலகில் புல்லால் உண்பவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட என்பது சதவிகிதம். இவர்கள் அனைவரும் சைவமாக மாறவேண்டும் என்று நான் நினைத்தால் அது இந்த பிறவியில் நடக்காது. கடவுளின் உண்மையான பாதிப்பு மானிடத்தில் ஏற்படும் காலம் எதுவென்றால் அது உலகில் மனிதர்கள் அனைவரும் சைவமாக மாறும் காலம். அக்காலம் எப்போது வரும்? தெரியாது. எனவே இனியும் என்னை நான் வீணாக என் மனதையும் உடலையும் வருத்திக்கொள்ளமால், என் கொள்கைகளை கொஞ்சம் மாற்றியமைத்துக்கொண்டுவிட்டேன்.

இதன் விளைவு, எனக்கு சமுதாயத்தில் மேலும் பல நட்புகளையும் உறவுகளையும் பெற்றுத்தரும் என்று நான் நிச்சயம் நம்புகிறேன். ஒரு வேளை அப்படி அமையவில்லை என்றாலும், என்னளவில் நான் என்னை மனதாலும் உடலாலும் மேலும் வருத்திக்கொள்ளாமல், என்னை நானே திருத்திக்கொண்டேன் என்னும் மனதிருப்தி எனக்கு இருக்கும். அது ஒன்றே எனக்கு போதும். இந்த, வாழ்க்கையை அணுகும் விதத்தை மாற்றியமைப்பதன் மூலம், நான் சொல்லத்தெரியாமல் இழந்த மன அமைதியையும் அதே நேரத்தில் பல நாட்கள் இழந்த அமைதியான தூக்கத்தையும் மீண்டும் பெறுவேன் என்னும் ஆழ்ந்த நம்பிக்கையும் எனக்கு உள்ளது.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (28-Aug-23, 12:49 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 138

மேலே