புத்திசாலித்தனம்
காலில் மண் பட்டால்
தட்டிவிட்டு எழுகின்றோம்...
சேற்றில் கால் பட்டால்
உடனே கழுவிவிட்டே
நகர்கின்றோம்...
காலில் முள் குத்தினால்
உடனே அதனை எடுத்துவிடவே
முனைகின்றோம்...
அடிபட்ட காலுக்கோ
உடனே அதற்கான வைத்தியத்தைப்
பார்த்துவிடுகின்றோம்...
மண்ணை தட்டிவிடாவிட்டால் குத்திக்கொண்டே அசௌகரியத்தை தந்து கொண்டிருக்கும் என்பதால் தட்டிவிடுகின்றோம்...புத்திசாலித்தனம் தான்...
சேற்றை அகற்றாவிட்டால் அதன் நாற்றம் நம்மிலும் தொற்றி அருவருப்பினை உண்டாக்கிக்கொண்டிருக்கும் என்பதால் உடனே கழுவிவிடுகின்றோம்...
புத்திசாலித்தனம் தான்...
காலில் குத்திய முள் வலியை தந்த உடனே வலியகற்ற அதனை எடுத்துவிடுகின்றோம். வலி தந்தாலும் பரவாயில்லையென விட்டு வைத்தால் அவை பழுத்து இன்னும் இன்னும் வலியை உண்டாக்கிக்கொண்டே இருக்கும் என்பதால் அகற்றி விடுகின்றோம்...
புத்திசாலித்தனம் தான்...
காலில் அடிபட்ட உடனே நிவாரணம் தேடுவதால் வலியும் ஆழம் செல்லாது கட்டுப்படுத்தப்பட்டு சரியாகிவிடுகின்றது. நிவாரணம் தேடுவதும் புத்திசாலித்தனம் தான்...
அசௌகரியங்களை, அருவருப்புக்களை, உள்குத்துக்களை, வலிதருபவைகளை என அனைத்தையும் நீக்கிட உடனே செயற்படும் நாம் வலிதரும் வார்த்தைகளைப் பேசுபவர்களை கடக்காமலும் துன்பத்தினை, கஷ்டங்களை எதிர்நோக்கும் சந்தர்ப்பங்களிலே அவற்றுக்குள்ளே நின்று சுழன்றுகொண்டேயிருக்கின்றோம்.
வலி நீக்கிட நிவாரணம் தேடி அழையாது வலியினை இன்னுமின்னும் அதிகப்படுத்துவதற்கான செயற்பாடுகளை மட்டுமே செய்துகொள்கின்றோம். இதனால் வலியில் துடிப்பதும் நாம் தானே???
புத்திசாலித்தனம் இங்கே புறந்தள்ளப்படுவது ஏனோ?
புறந்தள்ளிவிட்டு வலியினை அதிகரிக்காது புத்திசாலித்தனமாய் செயற்பட்டு வலி நீக்குவதே நன்று...
இவள்
எண்ணங்களின் எழுத்தழகி
அறூபா அஹ்லா