கால மாற்றம்
"கால மாற்றம்" தலைப்பே சிரிப்பை மூட்டுகிறது . அது எங்கே மாறுகிறது. காலம் எப்பொழுதும் நிலையாக தான் இருக்கிறது அந்த இயற்கையுடன் ஒன்றி வாழ வேண்டிய மனிதன் தான் மாறிக் கொண்டே இருக்கிறான்.
முன்பு ஒரு காலத்தில் கூட்டு குடும்பமாக ஆனந்தம் குடிகொண்டிருந்த குடும்ப சூழல் இன்று ஒற்றை பிள்ளையுடன் தாய் தந்தை இருவரும் இணைந்து மூவர் வாழும் மிகப் பெரும் கூட்டு குடும்பமாக மாறிவிட்டது.
இயற்கையாகவே தன் தவற்றை ஒத்துக் கொள்ளாத மனிதன் உதாரணமாக "முள் குத்தி விட்டது" என்று கூறுவான் ஆனால் முள் தானாகவா இவன் காலை தேடி வரும் குத்துவதற்கு. இல்லை இவன் தான் தானே சென்று குத்திக் கொண்டிருப்பான் ஆனால் கூறும்போது முள் குத்தி விட்டது என்று கூறுவான்.
இதே போல காலத்தோடு ஒன்றி வாழ வேண்டிய மனிதன் மாறி விட்டு காலத்தின் மேல் குறை கூறும் சுயநலம் தான் மனிதனின் அடிப்படை குணம்.
தேவைக்கு அதிகமான வருமானம், சுதந்திரம் ஆசை என்று மாற மாற மனிதரிடம் குடிகொண்டிருந்த அன்பு பாசம் அனுசரனை எல்லாம் மாறி சுயநல குன்றாக திகழ்கிறார்கள்.
முதியவர்களுக்கோ குழந்தைகளுக்கோ ஏற்ற சூழல் இன்றைய சமுதாயத்தில் இல்லை. உழைத்த களைப்பில் உருக்குழைந்த முதியோர்கள் உறுதுணை தேடும் வயதில் அவர்களை பாதுகாக்க வேண்டிய வாரிசுகள் உணர்வற்ற காகிதத்தின் பின் ஓடுவதை நாம் கண்கூடாக பார்க்கின்றோம்.
பணத்திற்கு இருக்கும் மரியாதை பந்தங்களுக்கு இல்லாமல் போனது. குழந்தைகளின் நிலையோ இன்னும் கேட்கவே வேண்டாம்.
தாய் தந்தையர் பாசம் சரிவரக் கிடைக்காது, தேவைக்கு அதிகமான பணம் புழக்கம், நினைத்தது உடன் கையை வந்தடையும் நிலை என்று சிறு வயதிலேயே அவர்களின் பிடிவாதம், கர்வம் மேலோங்க உதவுகிறது.
சிறுமியர்க்கு உரிய பாதுகாப்பு இச்சமூகத்தில் கேள்விக்குறியாக மாறி வருவதை தாங்களும் மறுக்க இயலாது.
மழலை மனம் மாறாத இளம் குருத்துக்களையும் விட்டு வைப்பதில்லை காமுகர்கள். இவர்களுக்கு உரிய வழுவான தண்டனை சட்டம் இல்லாததே இதற்கு முழு முதற் காரணம்.
அஹிம்சைக்கு பெயர்போன காந்தி தாத்தாவை எனக்கும் மிகவும் பிடிக்கும். ஆச்சரியம் அடைந்தது உண்டு சுதந்திர போராட்டத்தில் எவ்வளவோ கடுமையான சூழலிலும் விட்டுத்தராமல் அஹிம்சையை கடைபிடித்த அவர் உறுதியை சிலாகித்து பேசிய தருணங்கள் பற்பல.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் நம் பாரதம் செல்லும் பாதையில் காந்தியடிகளின் செல்லரித்துப்போன சட்டதிட்டங்களைக் கொண்டு கோலோச்சினால் பாரதம் சென்றடையும் இடம் கண்டிப்பாக நரகமாக இருக்குமே அல்லாது சொர்க்க பூமியாக பாரதம் மாறுவது என்பது வெறும் கனவாகிப் போகும் என்பது திண்ணம்.
கவிபாரதீ ✍️