மறைந்தே போனான்
ஆண்டவா....
எனக்கு குழந்தை வரம் வேண்டும்.
குழந்தைக்கு நல்ல பள்ளியில் இடம் கிடைக்க வேண்டும்.
அவர்கள் படிக்க பணம் காசு அதிகம் வேண்டும்,
பணம் காசு சேர நல்ல வேலை வேண்டும்
வேலையில் வேலை உயர்வு உடனே வேண்டும்.
சேத்த பணம் பத்திரமாய் பல்கி பெருகிட வேண்டும்.
சொத்துக்களை பிடுங்காத உறவுகள் வேண்டும்.
போகுமிடம் எங்கும் மங்காத புகழ் வேண்டும்.
நோய்நொடி இல்லா ஆரோக்யம் வேண்டும்.
எத்தனைதான் இருந்தாலும் நிம்மதி என்றும் வேண்டும்.
என்னை மட்டும் காப்பாத்து ஆண்டவா...
ஆண்டவன் .
குழம்பி போனான்.
படைக்கும்போது
பார்த்துப் பார்த்துதானே படைத்தோம்.
இவர்களுக்கு என்னனென்ன தேவையோ அத்தனையையும்
பார்த்துப் பார்த்துதானே படைத்தோம்.
தனிமையை போக்க துணையினை படைத்தோம்.
சந்ததிகள் வளர சந்தான பாக்கியம் தந்தோம்.
பசியாறிட கனியும் காய்கறிகளையும் படைத்தோம்.
உழைத்து முன்னேறிட கையும் காலையும் தந்தோம்.
நேர்வழி சிந்திக்க நல்ல மூளையும் படைத்தோம்.
பகுத்து அறிந்திட பகுத்தறிவையும் கொடுத்தோம்.
வாழ்வை ரசித்திட இயற்கை வளங்களை படைத்தோம்.
சுவாசிக்க காற்றையும் தாகத்திற்கு நீரையும்
சமைத்திட நெருப்பும் பயிரிட நிலமும்
அண்ணாந்து ஆச்சரியப்பட பிரபஞ்சமும் படைத்தோம்.
இத்தனையையும் அடக்கி ஆள ஆறாம் அறிவையும் தந்தோம்.
கொடுத்ததை உருப்படியாய் உபயோகிக்காமல்
இப்படி என்னிடம் வந்து அழுகிறானே..!
படைப்பில் ஏதாவது குறையா? - இல்லை
படைத்ததே ஒரு குற்றமா?
குழம்பித்தான் போனான் ஆண்டவன்.
கல்லாய் இருக்கும்போதே இத்தனை தொல்லை
காட்சி கொடுத்து விட்டால்....
அய்யய்யோ..
மீண்டும் கல்லாகி காற்றில்
மறைந்தே போனான்.