என்னை புரிந்து கொள்ளுங்களேன்

என்னை புரிந்து கொள்ளுங்களேன்
நான் ஒரு எழுத்தாளன், என் பெயர் இப்பொழுதுதான் கொஞ்சம் பிரபலமாகி கொண்டிருக்கிறது. இன்னும் நிறைய புகழ் கிடைக்க வேண்டுமென்று விரும்புகிறேன். ஆனால் இந்த மூன்று மாதங்களாக உடல் நிலை ஒத்து கொள்ள முடியாமல் போய் கொண்டிருக்கிறது. என்றாலும்..!
ஓரு ஆச்சர்யம் பாருங்கள், இந்த மூன்று மாதங்களாக நான் எழுத நினைப்பது எல்லாம் நடக்கிறது, ஆனால் எழுத மட்டும் முடிவதில்லை. என்றாலும் நான் ஒரு நிகழ்வை நடந்தது போல் கற்பனை செய்து அதை கதை வடிவில் மனதுக்குள் வடிவமைத்திருப்பேன். எழுத வேண்டும் இது மட்டுமே ஞாபகமாக இருக்கும்.
ஆனால் நான் எழுத வேண்டும் என்று நினைத்தது உண்மையில் நடந்திருக்கும், அதன் பின் அதை பற்றி இந்த உலகம்” வாய் ஓய” பேசி மறைந்தும் போய் விடும். என்னுடைய கதை அப்படியே மங்கி மனதுக்குள்ளே மறைந்து விடும்.
இதை யாரிடமாவது முதலிலேயே சொல்லி விடலாம் என்றுதான் நினைப்பேன், நிலைமை பாருங்கள் வீட்டில் நான் இருப்பதாகத்தான் நினைத்து கொண்டிருக்கிறேன், ஆனால் யாரும் என்னை பொருட்படுத்துவதில்லை. என் அறைக்குள் வருவதே இல்லை. எப்பொழுதாவது என்னை பற்றி பொது வெளியில் என் மனைவி உட்பட எல்லோரும் பேசி கொண்டிருப்பார்கள், அதுவும் என்னை பற்றித்தான். நான் ஆர்வமாய் அவர்கள் அருகில் போய் நின்றாலும் என்னை கண்டு கொண்டதாகவே காட்டி கொள்ளமாட்டார்கள். அவர்கள் என் பக்கம் திரும்புவார்கள் என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து கடைசியில் நானே மனம் வெறுத்து அவ்விடத்தை விட்டு நகர்ந்து விடுவேன்.
முன்னரெல்லாம் நான் கதை எழுத போவதாக சொன்னால் மனைவி முதற் கொண்டு குழந்தைகள் வரை அருகில உட்கார்ந்து யோசனை சொன்ன காலமுமுண்டு. அவர்கள் பெரியதாக பெரியதாக அவர்களுக்கும் திருமணம் ஆகி குழந்தைகள் பிறந்து தனித்தனி குடும்பங்களாகி விட்டனர். என்றாலும் வீட்டிற்கு வரும்போது என் அறைக்குள் வந்து என்னிடம் என் கதைகளை பற்றியும் எழுத்துக்களை பற்றியும் ஆற அமர பேசி கொண்டுதான் இருந்தார்கள்.
என்னவாயிற்று அவர்களுக்கு? என் எழுத்தின் மீது அவர்களுக்கு வெறுப்பு வந்து விட்டதா? அப்படியென்ன தவறு செய்தேன்? உங்களிடம் ஒரு இரகசியம் சொல்கிறேன் நான் ஒரு கதையை மனதுக்குள் உருவாக்கி கொண்டிருந்த நேரம் குளித்து கொண்டிருந்தேன், என்று நினைக்கிறேன்.
அந்த கதையின் கரு (உஷ்.. உங்களுக்கு மட்டும் சொல்கிறேன்) எனக்கு திடீரென மரணம் நிகழ்வதாகவும், அதன் பின்னர் எனது குடும்பம் நானில்லாமல் எப்படி இருக்கிறார்கள், நடந்து கொள்கிறார்கள் என்பதை போன்று என் கற்பனைகள் சென்று கொண்டே இருந்தன.
அதற்குள் வெளியிலிருந்து யாரோ சத்தமிட என் கற்பனைகள் சட்டென அறுந்து வெளியே வந்து விட்டேன். மறுபடியும் அந்த கருவை வைத்து கதையை எழுத வேண்டும் என்று நினைக்கிறேன், அதற்கான நேரம் ஒதுக்கி உட்காரத்தான் முடியவில்லை. அதற்கு பின்னர்தான் இந்த மாதிரி ஒவ்வொன்றையும் கற்பனை செய்து வைப்பேன், அது நடந்த பின்னால் வருத்தப்படுவேன், சே அதை மட்டும் கதையாக்கி எழுதி அனுப்பி இருந்தால்..!
எனக்குள் ஒரு ஆச்சர்யமும் வந்ததுண்டு, நமது கற்பனைகள் நிசமாகும்போது நாம் அதை ஏன் வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லாமல் வெளி உலக நண்பர்களிடம் சொல்ல கூடாது? ஆனால் வெளி உலகில் எனது பழைய நண்பர்கள் மட்டுமே கண்ணில் தென்படுகிறார்கள், அதுவும் எப்பொழுதோ என்னுடன் வேலை செய்தவர்கள், ஏன் மறந்தும் போனவர்களை எல்லாம் சந்திக்கிறேன். அவர்கள் ஒரு இடம் இதை பற்றி விவாதிக்கிறேன். அவர்களுக்கு என் கதை எழுதும் திறமை பற்றி புரிவதில்லை, அதனால் கண்டு கொள்ளாமல் அங்கிருந்து சென்று விடுகிறார்கள்.
எனக்கு நன்றாக கதை எழுத வரும் என நம்பும் நண்பர்களை இப்பொழுதும் நான் பார்க்கிறேன், ஆனால் அவர்கள் என்னை கண்டு கொள்ளாமல் இடத்தை விட்டு நழுவி விடுகிறார்கள். எனக்கு ஒரு சந்தேகமுமுண்டு, உண்மையில் அவர்கள் என்னை கண்டு கொள்ளவில்லையா? அல்லது வேண்டுமென்றே நழுவுகிறார்களா?
இவர்களுக்கு பாடம் கற்பிக்கவாவது ஒரு முறை உட்கார்ந்து எனது கதை ஒன்றை எழுதி விட வேண்டும். அதுவும் அப்பொழுது நடந்த விசயமான “கரு”வாக இருக்க வேண்டும், முடிவு செய்து விட்டு, அப்பொழுதே கற்பனையை விரிக்க விடுகிறேன்.
பார்த்தீர்களா.. அன்று குளியல் அறையில் நான் மரணமாவது போல கண்டிருந்த கற்பனை சட்டென மீண்டும் உயிர்ப்பித்து… விரிய ஆரம்பித்து விட்டது. என் ஆத்மாவை சாந்தப்படுத்த வீட்டில் ஏதோ யாகம் ஒன்றை நடத்தவேண்டும் என்று என் மனைவி மகன்களிடம் பேசி கொண்டிருப்பதாக கற்பனை விரிகிறது.
மனைவி சொல்லி கொண்டிருக்கிறார், யாகம் செய்பவரிடம் அவர் ஆத்மா சாந்தியடைஞ்சா போதும், பாவம் பெரிய எழுத்தாளராகணும்னு நினைச்சாரு, எப்ப பார்த்தாலும் அதை பத்தியே பேசிகிட்டிருப்பாரு, அன்னைக்கு குளிக்கும் போது திடீருன்னு ஹார்ட் அட்டாக் வந்துடுச்சு, அவசரமா ஹாஸ்பிடலுக்கு கொண்டு போனோம், பிரயோசனமில்லை, அப்பவே போயிடுச்சுன்னு டாக்டர் சொல்லிட்டாரு.
ராத்திரியானா அவர் ரூமுக்குள்ள ஏதேதோ சத்தம் கேக்கற மாதிரியே இருக்கு, அதுக்கோசரம்தான் இந்த பூஜை, எப்படியாவது அவர் அமைதியானாருன்னா போதும்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (2-Nov-23, 11:00 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 61

மேலே