காலைப் பொழுது

காலைப் பொழுது
"சித்திரைச் சந்திரன்" - செல்வப் ப்ரியா.
கிழ்த்திசையில் இளங்காலைக் கீழ்வானில் வெள்ளிக்கோள்!
கீற்றுகளாய் வீசியெழும் கெழுங்கதிரன் ஒளிக்கரங்கள்!
வாழ்த்தொலித்துப் பாட்டிசைத்து வரவேற்கும் புள்ளினங்கள்!
வாகையதன் மென்மணம்போல் வருடிவரும் பூன்தென்றல்!
தாழ்ந்திருக்கும் மாமரத்தில் தானமர்ந்தோர் கருஞ்சாத்தன்,
தான்பாடும் பாட்டிற்குத் தன்னிணையின் எதிர்ப்பாட்டு!
சூழ்ந்திருக்கும் மரப்பூக்கள் சுழன்றாடும் வண்டினங்கள்,
சொரிந்தோடும் மதுவருவிச் சுனைக்குள்ளே மயங்கிவிழும்!
ஆழ்ந்திருக்கும் இளங்காற்றில் அலர்விரிக்கும் குமுதமலர்!
அல்லிமலர் கதிர்காண அஞ்சியதன் இதழ்கூம்பும்!
வாழ்த்தவரும் இளங்காலை வளரும்முன் துயில்விழித்து,
வழிந்தோடும் பூமகளின் வண்ணத்தில் நனைந்திருந்தேன்!
- - - - - - "சித்திரைச் சந்திரன்" - செல்வப் ப்ரியா.
22Nov2023- புதன்கிழமை.