இடிஞ்ச சுவர்

இடிஞ்ச சுவர்
(இந்த சிறுகதை எப்பொழுதோ படித்த சிறு கதையின் கரு )

அறையில் உட்கார்ந்திருந்த நண்பர்களுக்கு சீட்டு கச்சேரி போரடித்து போய் விட்டது போலும், அவரவர்கள் உடம்பை நிமிர்த்தி சோம்பலை வெளிப்படுத்தியபடியே கதையளப்பு சமாச்சாரத்தை ஆரம்பித்து விட்டார்கள்.
ஆனால் என்ன…? கதையளந்த அம்சத்தில் பரபரப்போ, திகிலூட்டக்கூடிய சமாச்சாரமோ, கிளுகிளுப்போ எதுவுமே தென்படவில்லை சுந்தரத்தின் பங்கு வரும் வரை.
அவன் சொல்ல ஆரம்பிக்கும் போதே, கண்களை மூடி இரண்டு நிமிடம் தியானித்து, அதன் பின் பெரு மூச்சு விட்டு, இப்படியாக வேண்டிய முன்னேற்பாடுகளை ஆரம்பித்து கொண்டதை கண்டவுடன் சுற்றி இருந்தவர்கள் சட்டென அமைதியாகி அவன் முகத்தையே பார்த்தவாறு இருந்தனர். அவன் சினிமா உலகில் எப்படியாவது கால் பதிக்க வேண்டும் என்று காத்திருப்பவன்
மீண்டும் ஓரு பெருமூச்சை வெளியே விட்டபடி அப்ப எனக்கு இருபத்தி மூணு வயசு இருக்கும், டிகிரி முடிச்சுட்டு வீட்டுல இருந்தேன். எல்லா வேலைக்கும் அப்ளிகேசன் எழுதி போட்டுட்டு ‘தேமேன்னு” கூப்பிடுவாங்கன்னு எதிர்பார்த்து காத்துகிட்டிருந்த காலம்.
வீட்டுல முணுப்பு ஆரம்பிச்ச நேரமும் கூட, இங்க இருக்கறதுக்கு பேசாம ஹைதராபாத் போயிடலாமான்னு ஒரு யோசனை தோணுச்சு. என்னடா சென்னைய விட்டுட்டு ஹைதராபாத்துக்கு போலாமான்னு தோணுச்சுன்னு நீங்க கேட்கலாம், எனக்கென்னவோ சட்டுன்னு அதுதான் தோணுச்சு, காரணம் சீனு அங்க வேலை பார்த்துகிட்டிருந்தான், என் உறவுக்காரன், கூட படிச்சவன், அவன் ஊருக்கு வரும்போதெல்லாம் என்னைய வந்து பார்த்துட்டு நீ அங்க வந்துடு, எப்படியும் ஒரு வேலைய வாங்கிடலாம், அப்படீன்னு சொல்லிகிட்டிருப்பான். அதனால சட்டுனு ஹைதராபத்துக்கு போலாமுன்னு முடிவு பண்ணிட்டேன்.
ஆனா அங்க போயிட்டனே தவிர உடனே எனக்கு வேலை கிடைக்கலை. நண்பனோட ரூமுல தங்கியிருந்துட்டு வேலை தேடிகிட்டிருந்தேன். நாங்க தங்கியிருக்கற ரூமு மாதிரியே வரிசையா அஞ்சாறு ரூமு இருக்கும். எல்லா ரூமுலயும் எங்களை மாதிரி பசங்கதான் தங்கியிருந்தாங்க. காலையில ஒன்பது பத்து மணிக்கெல்லாம் எல்லா ரூமுல இருந்தும் ஆளுங்க பசங்க வேலைக்கு கிளம்பிடுவாங்க. நான் மட்டும் தனியா உக்காந்துகிட்டு இருப்பேன். என்ன பண்ணறதுன்னு யோசனையில..!
நாங்க இருக்கற இடம் நகரத்துல இருந்து ரொம்ப ஒதுங்கின இடம், அப்படி ஒண்ணும் வீடுக எல்லாம் பிரமாதமா கட்டியிருக்கமாட்டாங்க.எங்க “மேன்சனே” பழைய கட்டிடம்தான்.
அப்படி தனியா உட்கார்ந்துகிட்டிருக்கறப்ப எதேச்சையா எதிர்ல, ரொம்ப காடும் இல்லாம புதரா இருந்த பகுதி நடுவுல பாதி இடிஞ்சும் இடியாம சுவர் ஒண்ணு நின்னுகிட்டிருந்துச்சு, அதுல ஒரு முகம் மட்டும் வரைஞ்சு இருந்துச்சு, ஆனா முகத்தோட பாதி படம் மட்டும் தெரிஞ்சு மிச்ச படம் இருந்த சுவர் சுத்தமா இடிஞ்சு போயிருந்தது.
இந்த படம் யாருடையதாய் இருக்கும்? என் யோசனை திடீருன்னு இப்படி போயிடுச்சு. நான் மெல்ல எந்திரிச்சு எதிர்ல இருந்த இடத்துக்கு போயி அந்த சுவத்தை பாக்கறேன். இங்க இருக்கற பிரபலமானவங்க படமாகவும் தெரியலை, ஆனா எனக்கு இந்த முகத்தை எங்கையோ பார்த்த மாதிரியே ஒரு எண்ணம்.
சாயங்காலம் ரூமுக்கு வந்த நண்பங்க கிட்ட எல்லாம் இந்த படம் யாரோடது? அப்படீன்னு கேட்டேன். ஒருத்தனுக்கும் தெரியலை, நண்பனுக்கும் தெரியலை.
இராத்திரி பூரா யோசனை, யோசனை, காலையில அவசரமா ஒரு வேலைக்கு ஒரு இடத்துக்கு வர சொல்லியிருந்ததுனால அங்க போனேன். ஒரு வேலை இருக்கறதா சொல்லி என்னைய அன்னைக்கே சேர்ந்துக்க சொல்லிட்டாங்க.
சாதாரண துணிக்கடைதான், அதுல கணக்கு எழுதற வேலை, நண்பன் ஏற்கனவே அந்த கடையில சொல்லியிருந்தான், அதனால கிடைக்கற வேலையில சேர்ந்துட்டு அப்படியே நல்ல வேலை தேடணும்னு, முடிவு பண்ணி எதுவும் சொல்லாம வேலைக்கு அன்னைக்கே சேர்ந்துட்டேன்.
ஆனா எனக்கு அந்த இடிஞ்சு போன சுவத்துல பாதி அளவே தெரியற முகம் யாராயிருக்கும்? அப்படீங்கற கேள்வி தினைக்கும் என்னை போட்டு அரிச்சுகிட்டிருந்துச்சு
வேறு எந்த வாசகமும் இல்லை, இந்த ஒரு முகமாகத்தான் வரைஞ்சிருக் காங்க, மழையில நனைஞ்சா இல்லை, பழைய சுவரானதால தானா விழுந்துச்சான்னு தெரியலை, அந்த முகத்துல சரி பாதிக்கு மேல சுவர் சரியா உடைஞ்சு விழுந்திருக்கு.
வர வர அந்த முகம் யாரோடதா இருக்கும்? அப்படீங்கற நினைப்பே என்னை ஆக்ரமிச்சுகிட்டிருந்துச்சு, எங்க போனாலும், எதிர்ல வர்றவங்க போறவங்க முகத்தை அந்த சுவத்து முகத்தோட வச்சு ஒப்பிட்டு பார்ப்பேன், இதனால நண்பர்கள் எல்லாம் கிண்டல் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. உனக்கு பைத்தியம் பிடிச்சிடுச்சுன்னு.
அடுத்து வந்த மூணு வருசத்துல, இந்த கடை வேலையை விட்டுட்டு நாலு கம்பெனிக்கு மாறிட்டேன். சம்பளம் கொஞ்சம் அதிகமா கிடைச்சா அடுத்த இடம் அப்படீன்னே தாவிகிட்டிருந்தேன். உண்மையில் சொல்லப்போனா அந்த சுவத்துல இருக்கற முகம் யாரோடது? அப்படீன்னு தேடற எண்ணத்துலதான் இப்படி வேற வேற இடத்துக்கு தாவி போயிட்டிருகறனோன்னு தோணிகிட்டே இருந்துச்சு. இப்படியே என் வாழ்க்கை ஓடிகிட்டே இருந்துச்சு.
இதுக்கும் நண்பனோட இரண்டு மூணு இடத்துக்கு எங்க ரூமை மாத்திட்டோம், இருந்தாலும் அந்த சுவத்துல பார்த்த முகம் யாருடையது? இந்த எண்ணம் என்னைய விட்டு மாறவேயில்லை.
இப்படி “ஆராட்டமா” இருந்த என் வாழ்க்கையில ஒரு நாள் இரயில்வே ஸ்டேசன்ல நான் வழக்கமா போற எலக்ட்ரிக் டிரெயினுக்காக காத்துகிட்டு இருக்கறப்போ எதிரில நடந்து வந்துகிட்டிருந்தவர் நல்லா அறிமுகமானவரு மாதிரி தெரிஞ்சுது, ஆனா அவரு நடையை பார்க்கறப்ப இப்படி நடந்து வர்ற யாரும் எனக்கு அறிமுகமில்லாதவரு மாதியும் இருந்துச்சு. இருந்தாலும் இந்த முகம் எங்கேயோ பார்த்த மாதிரி….!
“சடாருன்னு பொரி பறந்துச்சு” “மை காட்” இந்த முகம்..அட பாதி சுவத்துல பார்த்த மூஞ்சி, மிச்சம் சேர்த்தா ஏறக்குறைய இவரு முகம்தான் இருக்கும். மனசுக்குள்ள அப்படி ஒரு சந்தோசம், அப்பாடி கண்டு பிடிச்சுட்டோம், என்னால அந்த இடத்தில உட்கார முடியலை, உடனே அவர் கூட பேசணும்னு தோணுச்சு, பரபரன்னு இருந்த நிலைமையில உட்கார்ந்திருந்த இடத்தை விட்டு வேகமா அவர் முன்னாடி போய் நிக்கணும்னு, எழுந்து நடக்கறேன்.
அப்பத்தான் என் புத்திக்கு உரைச்சது, அவரை எப்படி அறிமுகப்ப டுத்திக்கறது? உங்களை மாதிரி ஒரு மூஞ்சிய சுவத்துல பாத்தன்னா? அவரு என்ன நினைப்பார், “பைத்தியக்காரன்னு” நினைக்கமாட்டாரா? இப்படி ஒரு எண்ணம் மனசுக்குள்ள வந்தவுடனே என் நடை வேகம் தடை பட்டுடுச்சு..மெல்ல நடந்தேன், அப்ப…
திடீருன்னு என்னை கடந்து நாலைஞ்சு குரங்குக கூட்டமா நேரா அவரை பார்த்த மாதிரி ஓடுச்சு, அதை பார்த்த அவரு மிரண்டு இடது புறம் ஒதுங்க நினைச்சவரு நிலை தடுமாறி ரயில்வே லைனுக்குள்ள விழுந்துட்டாரு.
கண் மூடுன நேரத்துல, இவ்வளவு நேரமா நான் வேலைக்கு போறதுக்காக எதிர்பார்த்து காத்துக்கிட்டிருந்த டிரெயின் என்னை கடந்து தண்டவாளத்துல அவர் மேல……
ஸ்டேசன்ல இருந்த கூட்டம் பிளாட்பாரத்துல இருந்து கீழே எட்டி பார்க்க எனக்குள்ள வந்த சோகம் கொஞ்சம் நஞ்சமல்ல, கடவுளே ரொம்ப நாளா தேடிகிட்டிருந்த முகம் பக்கத்துல வந்தும் இப்படி அநியாமா….?
வேலைக்கு செல்ல மனமில்லாமல் மீண்டும் “ரூமுக்கே” வந்துட்டேன். வந்து சட்டையை கழட்டி போட்டுட்டு தரையில படுத்து கிடந்தவன், திடீருன்னு அந்த இடிஞ்சு போன சுவரையாவது பார்த்துட்டு வரலாமுன்னு, பஸ் ஏறி நான் முன்னாடி தங்கியிருந்த இடத்துக்கு போறேன்.
அங்க நான் பார்த்த காட்சி.. சரியா பாதி மூஞ்சி இருந்த சுவத்தை இரண்டு பேரு கடப்பாரையில் இடைச்சு உடைச்சு மொத்தமாவே அந்த இடத்தை மட்டம் பண்ணிகிட்டிருந்தாங்க.
நான் அவங்க பக்கத்துல போயி ஏன் அந்த சுவத்தை உடைக்கிறீங்க? கேட்டதுக்கு..
மொத்தமா இடிச்சுட்டு புதுசா கட்டிடம் கட்டபோறேன்னு, அப்படீன்னு இந்த இடத்துக்காரரு சொன்னாரு.
“கடவுளே” இத்தனை வருசமா கிடந்த “இடிஞ்ச சுவரு”, சரியா அந்த ஆளு இரயில்ல அடிபட்டு சாகறப்ப இந்த சுவரும் உடைபட்டு போயிடுச்சே… மனசு முழுக்க சொல்ல முடியாத துக்கத்துல அங்கிருந்து கிளம்புனவன்தான்.
கதையை அப்படியே நிறுத்தி எல்லார் முகத்தையும் பார்த்தான், அனைவரும் அவன் முகத்தை ஆவலுடன் பார்த்தபடியே இருக்க…!
இப்படித்தான் நாளைக்கு ஒரு டைரக்டர்கிட்ட கதை சொல்ல போறேன், அவரு “இடிஞ்ச சுவருன்னு” தலைப்புல ஒரு கதை சொல்ல சொல்லியிருக்காரு. அப்ப அவரை எப்படி “இம்பரஸ்” பண்ணனும்னு தெரிஞ்சு போச்சு, வரட்டுமா? எழுந்து சோம்பல் முறித்து விட்டு அங்கிருந்து நடையை கட்டினான்.
உட்கார்ந்திருந்தவர்களுக்கு ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை, பிறகுதான் புரிந்தது, அவன் சொன்னது சினிமாவுக்கான கதை என்று….!

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (24-Nov-23, 11:56 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 240

மேலே