ஆசை

மேகமாக மாறி நானும்
மேலை நாட்டில் பறக்க ஆசை
மேற்கு தொடர்ச்சி மலையிலேறி
மெத்தை இன்றி உறங்க ஆசை

சிட்டுக்குருவி போலே நானும்
சிறகடித்துப் பறக்க ஆசை
சிந்து நதியினைப் போலே
இமயமலையில் பிறக்க ஆசை

அறுஞ்சுவையின் உணவளித்து
அம்மாவினைப் பேண ஆசை
ஆத்திச்சூடி சொல்லி தந்த
ஔவையாரைக் காண ஆசை

எல்லோரா குகைகளிலே
எனதோவியம் வரைய ஆசை
எட்டடியில் நிலவு செல்ல தூரம்
வானில் குறைய ஆசை

எடிசன் பல்பு கண்டறிந்த
நேரம் அருகில் இருக்க ஆசை
ஏகலைவனைப் போலே
ஏழு வித்தை கற்க ஆசை

நியூட்டன் கையில் கிடைத்த ஆப்பிள்
சுவையை நானும் ருசிக்க ஆசை
நியூடெல்லி கோட்டைச் சுவற்றில்
கொடியினை நான் ஏற்ற ஆசை

அட்சரேகை தீர்க்கரேகை
அளந்து பார்க்க வேண்டும் ஆசை
ஆட்கள் இல்லா தீவின் நடுவே
அமர்ந்து காபி பருக ஆசை

டைம் டிராவல் செய்து தந்தை
இளமைக் காண வேண்டும் ஆசை
தண்டி யாத்திரை புரிந்து
காந்தி விரல்கள் பிடிக்க ஆசை

ஒலிம்பிக்கிலே தங்கம் நூறு
ஓராண்டில் வாங்க ஆசை
ஒட்டகத்தின் முதுகிலேறி
ஓட்டலுக்குச் செல்ல ஆசை

உலகில் உள்ள புத்தகங்கள்
ஒரு நாளில் படிக்க ஆசை
ஊசிஇலைக் காட்டு மரத்தில்
ஊஞ்சல் கட்டி ஆட ஆசை

மூங்கில் காட்டில் தீயை மூட்டி
முழு இரவும் கழிக்க ஆசை
முதுமை வந்த பின்பும் மகனின்
முத்தம் வாங்க வேண்டும் ஆசை

வெட்டி வீழ்த்தா மரங்கள் யாவும்
வேரூன்றி வளர்க்க ஆசை
வெனிசுலாவில் ராக்கெட் ஏறி
வேற்று கிரகம் செல்ல ஆசை

மனதில் இருக்கும் ஆசையெல்லாம்
மலையளவு குவிந்திருக்க
அத்தனையும் நிறைவேற்ற
ஆண்டவன் வரம் கொடுக்க ஆசை

எழுதியவர் : கண்ணன் செல்வராஜ் (3-Dec-23, 2:54 pm)
சேர்த்தது : Kannan selvaraj
Tanglish : aasai
பார்வை : 171

மேலே