தேனீ என்னும் அன்னபூரணி
""" தேனீ என்னும் அன்னபூரணி ! """
சித்திரைச் சந்திரன் - செல்வப் ப்ரியா
புற்கள்யாவும் செடிகள்யாவும் பூவிருக்கும் மரங்கள்யாவும் - தத்தம்,
புவிப்பிறப்பில் நிலைத்துவாழப் புதுவிதைகள் வளர்குழந்தை!
கற்களோடும் மட்களோடும் காலம்புவியைப் படைத்தநாளில் - உயிர்கள்,
கல்மண்ணுண்டு வாழல்வளரல் காலங்கால மாகத்தொடரல்
நற்படாதென் றமைந்ததாலே நான்குகோடிப் பயிர்வகைகள் - மண்ணில்,
நாளும்மண்ணை உண்டுதம்மை நாட்டிவாழப் படைத்ததாமே!!
புற்களுக்கும் செடிகளுக்கும் புவிமரங்கள் வனங்களுக்கும் - அவைதம்,
பூவிப்பந்தில் நிலைத்திருக்கப் புதுவிதைகள் வேண்டுமன்றோ?
விதைகளான குழந்தையாவும் விதைகளாகக் கருவறையில் - வளர,
விரிந்தவிழ்பெண் பூவைத்தந்து விதைக்கருவை அதற்குத்தந்து,
அதையுஞ்சேர ஆண்மலர்கள் அவற்றினுள்ளே ஆணணுக்கள் - அமைத்து,
ஆங்கனைத்துச் செடிகள்பெருக ஆக்கிவைத்த இயற்கைத்தேவி!!
விதைகளாகக் கருவளர்ந்து விரிபுவியில் பிறப்பதற்கு - பூக்கள்,
விரிந்தபின்னர் இரண்டணுவும் விரைந்திணைய வேண்டுமன்றோ?
இதைநிகழ்த்தக் காற்றிருக்கும் எனினுமதற்குக் காலமாகும் - அதனால்,
இயற்கையன்னை பூச்சிக்கூட்டம் இயற்றிவைத்து மலரைக்கூட்டும்!!
மலரைநாடிப் பூச்சியினமும் மாற்றமின்றி வருவதற்கு - அவற்கு,
மனமிழைந்த உணவென்றாங்கு மலரிலிருக்க வேண்டுமென்று
அலருள்ளறையில் மதுரசத்தின் ஆக்கவூற்று அமையவைத்து - மலர்க்கு,
அழகுநிறங்கொள் இதழமைத்து அதில்மணமும் இணைத்தளித்து,
மலரினிருப்பை இதழிருப்பை மதுரசத்தின் மணமிருப்பை - பூச்சி,
மனதிலேற்றி உணவுக்கென்று மலைரைநாடச் செய்தவியற்கை!!
புலரும்போதில் மதுவைநாடும் பூச்சியாவும் மதுவருந்தும் - அவைகள்,
பூக்கள்மீது புரளும்போது பூவிரண்டும் புணரும்தானே!!
பூக்களாக்கும் கோடிவிதைகள் பூமிப்பந்தில் வீழ்ந்திருந்து - நல்ல,
போதில்மழைநீர் வீழமுளைத்துப் புவிமுழுதும் பரவும்வளரும்!
பூக்களாக்கும் விதையிற்பாதி புலத்தில்வாழும் உயிர்கள்யாவும் - நண்ணிப்
புசித்திடற்கு உணவென்றாகும் புதியஉயிர்கள் தோன்றும்பெருகும்!
பூக்களாக்கும் செடிகள்தானே புவியுயிரகள் உண்ணுமுணவு? - அதனால்,
பூவுயிர்க்கு யாவுமுதவும் பொன்மனத்துப் பாரிவள்ளல்!
பூக்களாக்கும் பயிர்கள்தம்மில் பூச்சிக்கூட்டம் திரளுமவற்றில் - என்றும்,
பூவின்நரவும் மகரத்தூவும் பொழுதுமுழுதும் தேடும்தேனீ!
பூக்களாக்கும் மதுவையன்றிப் புசிக்கவேறு எதுவும்நாடாத் - தேனீ,
புதியவுணவு யாவும்விளையப் பயிரில்நாடும் மலர்கள்கோடி!
பூக்களாக்கும் உணவுயிர்க்குப் பூவைத்தேடும் தேனியென்னும் - அன்ன,
பூரணீயென் றளிக்குந்தேவி பொன்மனத்துக் கொடையதாமே!!
- - - - - சித்திரைச் சந்திரன் - செல்வப் ப்[ரியா,
15டிசம்பர்2023-வெள்ளி.