நொண்டும் சேவல்
நொண்டும் சேவல்
சீனர்கள், ஆண்டுகளை 12 ஆகப் பிரித்து ஒவ்வொரு ஆண்டிற்கும் ஒரு மிருகத்தை குறிப்பார்கள். அவ்வகையில் நான் சேவல் ஆண்டில் பிறந்தேன். சிறு வயது முதல், சேவல்களை உன்னிப்பாகக் கவனிக்கவும் செய்தேன்...
வீட்டின் அருகில் சிலர், கோழிகளை வளர்த்தனர். சில சண்டைக் கோழிகளும் இருந்தன. நீண்ட கால்கள் கொண்டதால் நடப்பதற்கு கஷ்டப்படும். ஆனால், சுலபமாக ஓடும். பொதுவான சேவல்களும் இருக்கும். அதில் ஒன்று, கருநீல வால், சிவப்பும் மஞ்சலும் கலந்த இறக்கை, நல்ல தடியான உடலுடன் தனியாக உணவைத் தேடி அலையும். பெரும்பாலும், என் வீட்டின் அருகில் ஒரு புதரின் கீழ் ஓய்வெடுக்கும். வலது கால் சண்டையில் அடிபட்டதால், நொண்டி நொண்டி இரை தேடும். தனியாகவே வாழும். அதற்கு மட்டும் சில ரொட்டி துண்டுகளை நான் போடுவேன். மற்ற சேவல்களுடன் சண்டை போட்டு பெட்டைக் கோழிகளை தன் பக்கம் வைத்துக் கொள்ளும் சில சண்டை சேவல்கள் அருகில் இருக்கும். அதனை கண்டு ஒளிந்து கொண்டு மாலை வரை புதரிலே இருக்கும்.
நல்ல ஆரோக்கியமான இளம் வயதில் பல பெட்டைக் கோழிகளுக்குத் துணையாக இருந்த சேவல், உடல் உபாதையால் யாரும் இன்றி தனியாக.
வலியுடன் நடக்க முடியாமல் நடக்கும்.
சண்டை போடும் காட்டு வகை சேவலுடன் தோற்று கால்கள் காயம் ஏற்பட்டிருக்கலாம். ஒருநாள், அச்சேவலைக் காணவில்லை. அதைப் பிடித்து கறிக்கு விற்றுவிட்டான் வேலையில்லாத ஒருவன். கவலையானேன். தன் வலியில் இருந்து விடுதலைக் கிடைத்ததற்கு மட்டும் மகிழ்வடைந்தேன்.
உன்னால் யாருக்கும் பயன் இல்லை என்றால், தனிமையும் வலியும் உடன் வருவதை உணர்ந்தேன். சுயநலமான உலகம். இறப்பை நோக்கி நொண்டி செல்லும் வாழ்க்கை.
வரும் 2024 புத்தாண்டு Dragon ( டிரேகன் ) ஆண்டு. அனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்து. வலியை எதிர்கொள்ளும் துணிவைப் பெருவோம்.
Siven
Malaysia.