வந்த நோக்கம்…

வந்த நோக்கம்…?
மல்லிகா தன் அக்கா சியாமளா வீட்டை அடைந்தவுடன், கதவு பூட்டியிருந்ததை பார்த்ததும், மனம் பகீரென்றானது. எங்கு போனாள்? நேற்றே சொல்லியிருந்தாள்,தான் உன்னை பார்க்க வருகிறேன் என்று சொல்லியிருந்தும்..!
கையில் பிடித்தபடியே நின்றிருந்த மகள் என்னம்மா பெரியம்மாவை காணோம்? குரலில் ஏமாற்றம் தொனித்தது. நேற்று இரவிலிருந்து மல்லிகா மகள் ஸ்கூலுக்கு போக வேண்டும் என்று அடம் பிடித்தவளை சமாதானப்படுத்தி எங்க அக்கா வீட்டுக்கு நாளைக்கு போயிட்டு வந்துடலாம், மறு நாள் ஸ்கூலுக்கு போயிடுவியாம் கொஞ்சி சமாதானப்படுத்தி கூட்டி வந்திருந்தாள்.
கணவன் செல்வா தனக்கு வேலை இருக்கிறது என்று சொல்லி விட்டான், தனியாகவும் பஸ் ஏறி வருவதற்கு தயக்கம். ஒரு மணி நேர பயணம்தான். வீட்டிலிருந்து டவுன் பஸ் ஸ்டாண்ட் வந்து அங்கிருந்து பஸ் ஏறி அக்கா வீட்டிற்கு வரவேண்டும். அவ்வளவுதான், கூட ஒரு ஆள் இருந்தால் நன்றாய் இருக்கும் என்று மகளை சரி கட்டி அழைத்து வந்திருந்தாள்.
மணி பதினொன்றிருக்கும், வெயில் வேறு காய்ந்து கொண்டிருந்தது. நல்ல வசதியாகத்தான் கட்டியிருந்தாள் வீட்டை, கார் நிறுத்த தனி இடம், இந்த பக்கம் தோட்டம் போட்டிருந்தாள். பூச்செடிகள் நிறைய வளர்த்திருந்தாள், இது போக அங்கங்கு தொட்டியில் வளர்ந்திருந்த செடிகள்.
காம்பவுண்ட கதவை திறந்து உள்ளே போய் நிற்கலாமா? என்று யோசித்தாள். இப்படி தனியாக வீட்டு காம்பவுண்ட் ‘கேட்’ முன்னால் நின்று கொண்டிருப்பதை போவோர் வருவோர் வித்தியாசமாக பார்ப்பதாகவும் தோன்றியது.
சரி பக்கத்து வீட்டில் கேட்கலாம், நினைத்தபடி நகர்ந்து பக்கத்து காம்பவுண்ட் ‘கேட்’ அருகே வந்து நின்று உள்புறமாய் தெரிந்த அவர்கள் வீட்டு வாசலை பார்த்தாள். வாசலின் முன்னால் கட்டியிருந்த நாய் அவளை முறைத்து பார்த்து நின்றது.
கட்டியிருக்கும் கயிறு மட்டும் இல்லாவிட்டால் இந்நேரம் கேட்டருகே ஓடி வந்து விடும் என்று பயந்த மல்லிகா வீட்டில் இருப்பவர்களை கூப்பிடலாமா வேண்டாமா என்னும் பயத்தில் நின்றாள். தன் அருகில் நின்ற மகள் நாயை கண்டவுடன் இவளை விட பயந்து இவள் காலுக்கு பின்னால் நின்று கொண்டாள்.
நல்ல வேளையாக வாசலுக்கு வந்த இளம்பெண் கேட்டருகே யாரோ நிற்பதை பார்த்ததும் உள் புறமாய் குரல் கொடுத்தாள், மம்மி யாரோ கேட்டுகிட்ட நிக்கறாங்க, சட்டென்று உள்ளே போய் விட்டாள். இவர்களது தோற்றம் மதிக்கத்தகுந்த அளவு இல்லை என்ற காரணமாயிருக்கலாம், அல்லது அருகில் காரோ வண்டியோ இருந்திருந்தால் அவளே முன்னால் வந்து தன்னை விசாரித்திருக்கலாம்.
யாருன்னு கேக்கறதுதானே? கையை சேலை தலைப்பில் துடைத்தபடி வெளியே வந்த பெண் கேட்டருகே வந்தாள், அவள் அருகே வர வர, கட்டியிருந்த நாயில் குரைப்பு பெரியதாக ஆரம்பித்தது. மகள் இன்னும் பயந்து பின்புறம் ஒண்டிக்கொண்டாள்.
சியாமளா எங்க போனாங்க? பக்கத்து வீடு..!
இவள் தோற்றத்தை ஒரு நிமிடம் பார்த்த அந்த பெண் தெரியலையே, காலையில தோட்டத்துகிட்ட நின்னு ஏதோ பண்ணிகிட்டிருந்தாங்க, எங்கேயும் வெளிய போன மாதிரி தெரியலை, சொல்லிக்கொண்டிருக்கும் போதே காரின் சத்தம்.இவளை தாண்டி சென்றது.
அதோ அவங்க காருதான், வந்துட்டாங்க, அந்த பெண் சொல்லி விட்டு திரும்பினாள். இவள் வலு கட்டாயமாக “ரொம்ப தாங்க்ஸ்” நான் அவங்க தங்கச்சி” இவளாய் அறிமுகப்படுத்தியபடியே அங்கிருந்து அக்கா வீட்டிற்கு நகர்ந்தாள்.
அந்த பெண் இவளை வித்தியாசமாய் பார்த்தபடி அவளது வீட்டிற்குள் சென்று விட்டாள். மல்லிகாவிற்கு எரிச்சலாய் இருந்தது. இந்நேரம் அவர்கள் ஊராய் இருந்தால், வாங்க வாங்க, அவங்க வர்ற வரைக்கும், ‘நம்ம வூட்டுல உக்காருங்க’ இப்படி ஏதாவது உபகார வார்த்தைகளை சொல்லியிருப்பார்கள்.
அக்காவிடம் இதைபற்றி சொன்ன போது அவ்வளவு சுலபமாக எடுத்து கொண்டதாக தெரியவில்லை, இவளைத்தான் கோபித்து கொண்டாள், நான் வெளிய போறதா இருந்தா சொல்லியிருக்க மாட்டேனா? அவங்களுக்கு ஏற்கனவே நம்ம மேல வயித்தெரிச்சல், உன்னைய வேற பார்த்துட்டாங்க இல்லையா? இன்னும் கொஞ்சம் “தொக்கு” ஏறத்தான் செய்யும்.
மல்லிகாவுக்கு அவள் சொன்னது புரியத்தான் செய்தது. இவளது நடுத்தரத்துக்கு கீழ் வாழ்ந்து கொண்டிருப்பவளின் தோற்றமும், டவுன் பஸ் ஏறி இறங்கி நடந்து வந்ததைத்தான் சொல்லி காட்டுகிறாள். பத்து நிமிட நடைக்கு ஆட்டோ பிடித்து வந்தாலும் அம்பது நூறு கேட்பான், அதற்காக பாவம் சின்ன பொண்ணையும் நடக்க வைத்து கூட்டி வந்ததற்குத்தான் பக்கத்து வீட்டில் இவளது இமேஜ் குறைந்திருக்கும் என்று கணக்கு போடுகிறாள்.
எல்லாம் அவள் கணவன் துபாயிலிருந்து அனுப்பும் பணம், இப்படி வசதி உள்ளவர்கள் இடத்தில் வீடு கட்டி குடி வந்திருக்க செய்கிறது. அவர்கள் நடுவில் வாழ்ந்தாலும் தன்னை ஒரு பணக்காரியாய் காட்டியபடி வாழ்ந்து கொண்டிருப்பவளை, அவளின் ‘தங்கை’ என்று இவளை போன்ற சாதாரண சேலையுடன், பழைய பாவாடை சட்டை போட்ட சின்ன பெண்ணையும் கூட பார்த்து விட்டால் சியாமளாவை பற்றி அவர்கள் என்ன நினைப்பார்கள்?
மல்லிகா இத்தகைய சிந்தனையில் இருப்பதை பார்த்த சியாமளா தங்கை கோபித்து கொண்டாள் போலிருக்கிறது என்று நினைத்து ரொம்ப நேரமாச்சா நீ வந்து? நான் இப்பத்தான் போனேன், காலையில் தோட்டத்துல ஒரு இடம் சும்மா இருந்துச்சு, அதான் காரை எடுத்துட்டு போயி ஒரு ‘ரோசா நாத்து’ வாங்கிட்டு வந்தேன். வா வந்து உக்காரு, உள்புறமாய் சென்றாள்.
உள்ளே நுழையவும் வீட்டின் பளபளப்பு பல லட்சங்களை விழுங்கியிருக்கும் என்று தோன்றியது.” மார்பில்ஸ், டைல்ஸ், இன்னும் சில ஜிமிக்கான பொருட்கள் எல்லா இடங்களிலும் பளபளப்பை காட்டி கொண்டிருந்தன.
சரி என்ன சாப்பிடறே? ஹார்லிக்ஸ் கலக்கட்டுமா? சமையல்காரி வேற இரண்டு நாள் லீவு சொல்லிட்டு போயிருக்கா, நான்தான் இருக்கேன், மதியம் என்ன சாப்பிடறே? “ஸ்வுகில ஆர்டர் பண்ணிடலாம், தன்னுடைய செல்போனை எடுத்து அழுத்த ஆரம்பித்தாள்.
கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கழித்து பிறந்த பையன், அவனை தன்னுடன் வைத்து கொள்ளாமல் “ஊட்டியில் கான்வெண்டில்” தங்கி படிக்க வைத்து கொண்டிருக்கிறாள், இதற்கும் ஏழாவது படிக்கும் பையன். மல்லிகாவுக்கு அக்காவின் இந்த பணக்கார பந்தாவை பார்க்க சிரிப்புத்தான் வந்தது.
கல்யாணம் செய்து கொடுத்தபோது அவர் இங்குதான் வேலை செய்து கொண்டிருந்தார். வாய்ப்பு ஒன்று வர இவள் கல்யாணத்துக்கு சேர்த்து வைத்த பணத்தை தான் அப்பா கொடுத்து உதவினார். அதை திருப்பி கொடுத்து விட்டாலும், எதற்காக அக்கா தன்னை சுற்றி உள்ளவர்களுக்கு “டாம்பீகமாக” காட்டி கொள்கிறாள். இதனால் பலரது கண் இவள் மீது தவறாக பட்டு கொண்டிருப்பதை உணர்வாளா? மல்லிகாவுக்கு அக்காவின் மேல் கவலையும் வந்தது.
சாயங்காலம் நான்கு மணிக்கெல்லாம் கிளம்பி விட்டாள். தான் காரை எடுத்து பஸ் ஸ்டாண்ட் வரை கொண்டு வந்து விடுவதாக சொல்லியும் இவள் ஒத்து கொள்ளவில்லை, தானும் மகளும் நடந்து போய்விடுவதாக் சொல்லி விட்டாள்.
எதுக்கும்மா பெரியம்மா வீட்டுக்கு அவசரமா என்னை கூட்டிட்டு வந்தே? இப்ப அவசரமா வூட்டுக்கு போறேன்னு என்னை இழுத்துட்டு போறே? மகள் அம்மாவின் கையை பிடித்தபடியே கேள்வி கேட்டு கொண்டு வந்தாள்
இவள் பதில் என்ன சொல்வது என்று யோசித்தாள். பாங்கில் அடகு வைத்திருந்த நகைகளுக்கு இந்த வருட வட்டி கட்டி மாற்றி வைக்க அக்காவிடம் பணம் கடன் கேட்கலாம் என்றுதான் அவசரமாய் வந்தாள். ஆனால் வீடு பூட்டியிருந்ததில் இருந்து நடந்த நிகழ்ச்சிகளை பார்த்த இவள் மனம் அவளை கடன் கேட்க விடாமல் செய்திருந்தது.
பார்க்கலாம் வேறு வழியா இல்லாமல் போய் விடும்? அதே மனம் அவளுக்கு தைரியமும் சொல்லியது.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (29-Dec-23, 2:53 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 117

மேலே