அன்றைய இரவுகள்
—————————-
தனித்தனி அறைகள்
இல்லாத வீடு..
ஆங்காங்கேப் பெயர்ந்து
சமமில்லாத் தரைத்தளம்..
புதியதும் பழையுதுமாய்
வண்ணங்கள் கலைந்தக்
கோரைப் பாய்கள்..
ஓரத்துணியில்லாதவை கீழும்
ஓரத்துணியுள்ளவை மேலும்
ஒன்றாய் இணைந்து..
பல வண்ணங்களில்
குட்டிக் கெட்டித்
தலையணைகள் வரிசையாய்..
சில இரவுகளில்
தென்னைமரச் சட்டங்கள்
அதன் மேலடுக்கிய
சிவப்பு ஓடுகள்..
சில உடைந்து..
அவை அனுமதிக்கும்
மழை நீர்த்துளிகள்
சொட்டு சொட்டாய்த்
தெறித்ததும் அதையேந்தும்
சிறியப் பாத்திரங்கள்..
சில இரவுகள்
அம்மாவை அணைத்து..
சில இரவுகள்
அக்காக்களுக்கு இடையில்..
ஒலிச்சித்திரம் முடிந்ததும்
சட்டென்று வரும்
ஓர் உறக்கம்..
சில இரவுகளில்
சில கனவுகள்..
இருந்தாலும் உறக்கத்
தொடர்ச்சிக்குத் தடையில்லை..
டைம்பீஸ் தலையில்
தட்டு வாங்கும்
கடமை செய்ததாலே..
இப்போது நினைத்தாலவை
எல்லாமே அசெளகர்யங்களாய்..
இருந்தும் ஏனோ
தூக்கத்தைத் தொலைத்த
இரவுகள் ஏதுமில்லா
அன்றைய இரவுகள்..
—————
சாம்.சரவணன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
