தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா இரவி

தமிழர் திருநாள்
தரணி போற்றும் பொன்னாள்

- கவிஞர் இரா. இரவி

*****

அறுவடைத் திருநாளைக் கொண்டாடும் தமிழினம்
அகிலம் போற்றும் அற்புத நாள் பொங்கல் !

பழையன கழிதல் புதியன புகுதல் என்று
புதுப்பித்துக் கொள்ளும் நாளே போகிப் பொங்கல் !

புத்தாடை அணிந்து புத்தரிசிப் பொங்கலிட்டு
புத்தாண்டை தைத்திருநாளை தொடங்கும் பொங்கல் !

கதிரவனை இயற்கையை வணங்கிடும் நன்னாள்
கட்டி வெல்லம் நெய்இட்டு படைத்திடும் பொங்கல் !

விளைந்த கரும்பையும் வைத்து வணங்கும் நாள்
வீணான மூடநம்பிக்கைகள் இல்லாத திருநாள் !

மாட்டுக்கு விழா எடுக்கும் ஒரே இனம் தமிழினம்
மாட்டுப்பொங்கல் வைத்து மாட்டை வணங்கும் பொங்கல் !

கடற்கரைகளில் சந்தித்து மகிழும் காணும் பொங்கல்
காணமுடியாது கொண்டாடாத தமிழர்களை உலகில் !

வீரம்மிக்க ஜல்லிக்கட்டு நடத்தி மகிழும் நாட்கள்
வியந்து பார்க்கும் வீரத்தை உலகம் யாவும் !

உலகில் தோன்றிய முதலினமான தமிழினம் இன்று
உலகம் முழுவதும் பரந்து வாழ்வது உண்மை !

உலகின் முதல்மொழியான தமிழ்மொழியோ இன்று
ஒலிக்காத நாடு இவ்வுலகில் இல்லை உண்மை !

பண்பாடு பறைசாற்றும் பாரம்பரிய திருவிழா பொங்கல்
பண்டைத்தமிழர் காலம் தொட்டு நடந்துவரும் பொங்கல் !

கலைநிகழ்ச்சிகள் நடத்தி மகிழும் பொங்கல்
காணக் கண்கோடி வேண்டும் காண்போருக்கு. !



--

எழுதியவர் : கவிஞர் இரா.இரவி. (22-Jan-24, 12:41 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 61

மேலே