சம்பளம்

*********
வாங்கும் திகதியில் வாசல் வரைவந்து
தாங்கும் குடும்பத்தின் தேன் - 1
*
தேனூறச் செய்தின்பத் தாழ்த்து மிதுவன்று
வானூற்றாய்க் கொட்டு மமிர்து - 2
*
அமிர்தே விசமாய் அடுத்நொடி மாற
உமிழும் கடனாய் உயர்ந்து - 3
*
உயராத சம்பளம் ஓட்டாண்டி யாக்க
உயரும் விலைவாசி ஊறு - 4
*
ஊறு விளைவிக்கும் ஒவ்வொரு சம்பளமும்
நூறு எதிரிக்கு நேர் - 5
*
நேர்காணும் துன்ப நிவாரணி யாயினும்
தீர்வின் வழிகாட்டாத் தீ - 6
*
தீயாய் பணிபுரிந்து தேடிய சம்பளத்தின்
நோயாம் விலைவாசி நோக்கு - 7
*
நோக்கிநிற்கும் போதினிலே நூறிரு நூறாகப்
பாக்கியின்றிப் போகும் பறந்து - 8
*
பறந்தோடிப் போகும் பணத்தாள் வரவே
பறந்துழைத் தாலும் பதைப்பு - 9
*
பதைத்திடும் நெஞ்சைப் பயமெனும் பேயால்
வதைசெயச் சம்பளம் வாங்கு - 10
*
மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (31-Jan-24, 1:45 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 65

மேலே