வேதங்கள் ஏதுக்கடி

வேதங்கள் ஏதுக்கடி?
09 / 02 / 2024

சாகும் இவ்வுடலுக்கு அரிதாரம் ஏதுக்கடி?
குதம்பாய் அரிதாரம் ஏதுக்கடி?
முடியும் இவ்வாழ்க்கைக்கு அலங்காரம் ஏதுக்கடி?
குதம்பாய் அலங்காரம் ஏதுக்கடி?

தெரியப் போகும் உண்மைக்கு பொய் பூச்சு ஏதுக்கடி?
குதம்பாய் பொய் பூச்சு ஏதுக்கடி?
புரியாத புதிர்களுக்கு விவாதங்கள் ஏதுக்கடி?
குதம்பாய் விவாதங்கள் ஏதுக்கடி?

உள்ளத்தை சொல்வதற்கு தயக்கம்தான் ஏதுக்கடி?
குதம்பாய் தயக்கம்தான் ஏதுக்கடி?
உள்ளதை மறைக்க வெளிவேஷம் ஏதுக்கடி?
குதம்பாய் வெளிவேஷம் ஏதுக்கடி?

மீறுகின்ற குணத்திற்கு சட்டங்கள் ஏதுக்கடி?
குதம்பாய் சட்டங்கள் ஏதுக்கடி?
உதவாத மனதிற்கு பட்டங்கள் ஏதுக்கடி?
குதம்பாய் பட்டங்கள் ஏதுக்கடி?

முடிவான யாத்திரைக்கு குழப்பங்கள் ஏதுக்கடி?
குதம்பாய் குழப்பங்கள் ஏதுக்கடி?
விடிகின்ற விடியலுக்கு விளக்குகள் ஏதுக்கடி?
குதம்பாய் விளக்குகள் ஏதுக்கடி?

துணிந்து இறங்கியபின் தயக்கங்கள் ஏதுக்கடி?
குதம்பாய் தயக்கங்கள் ஏதுக்கடி?
இணைய முடிவானபின் இடைவெளி ஏதுக்கடி?
குதம்பாய் இடைவெளி ஏதுக்கடி?

புத்தி தெரிவதற்கு வெறும் புத்தகங்கள் ஏதுக்கடி?
குதம்பாய் வெறும் புத்தகங்கள் ஏதுக்கடி?
பட்டுத் தெளிவதற்கு வேதங்கள் ஏதுக்கடி?
குதம்பாய் வேதங்கள் ஏதுக்கடி?

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (9-Feb-24, 6:06 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 176

மேலே