கோலம் மாறா காதல்
***********************
மன நிலங்களில்
விதையாய் விழுந்து
ஆத்மாவரை வேர் பரப்பும்
அற்புத ஆல்
*
ஒரு புன்னகையில் பூவாகப் பூத்தும்
ஒரு கண்ணசைவில் காயாக காய்த்தும்
ஒரு கண்ணீரில் கனியாகவும்
மாறிக் கொள்கிற காதலின்
விழுமியங்கள்
நம்பிக்கையின் அத்திவாரமாய்
திகழ்கிறது.
*
கடனுக்கு வாங்கிச் செலுத்த முடியாததும்
கடமைக்குப் புரிந்து கழித்துக்கட்ட
முடியாததுமான
கருணையின் பேரூற்றான காதல்
தன்னை இன்னொரு இதயத்துக்குச்
சமர்ப்பணம் செய்யும்
வாழ்க்கையின் தெய்வீகம்
*
இணைவோமெனும்
எதிர்பார்ப்பில் எதிர்பாலோடு ஏற்படும் இணக்கப்பாட்டுக்குள்
ஏமாற்றங்கள் என்னும்
இடி விழ நேர்ந்தாலும்
இடிந்துவிழா நேசம்
அணுகுண்டு விழுந்தழியும் மண்ணில்
ஒரு கரப்பான் பூச்சியாகவேனும
உயிர்வாழ்ந்த வண்ணமிருக்கும்
*
கொடியேற்றிக் குதூகலிக்கக்
கொண்டாடி மகிழும்
வருடாந்த திருவிழாவல்ல காதல்
இதயப் படியேறிவந்து
பாமரன் வாழ்விலும்
குடிகொண்டு நிற்கும்
கொண்டாட்டங்களின் கொண்டாட்டம் இது
*
அன்றாடம் கொண்டாடி
அகமகிழும் காதலின்
அமுதக் கோப்பையில்
எச்சிலைத் துப்பி ஏளனப்படுத்த
ஏற்பாடு செய்யும்
எண்ணங்களின் வன்மங்களைத்
தள்ளிவைத்து
கண்களால் பேசி
இதயத்துள் வளர்த்துப்
புனிதப் படுத்தின்
காதலர் கைமாறும் காலம் கண்டாலும்
காதல் இதயம் மாறா கோலம் காணுமே!
*