காதலர் தின சிறப்பு கவிதை
காதலர் தினம்
சிறப்பு கவிதை
படைப்பு #கவிதை_ரசிகன் குமரேசன்
இதயங்கள் சுயம்வரம்
செய்து கொள்ளும்
முகூர்த்த நாள்.....
ஆண்டுதோறும்
பரிமாறிக்கொள்ள வேண்டிய
அன்பை
ஆண்டில் ஒருமுறையேனும்
பரிமாறிக்கொள்ள
அவசர வாழ்க்கையில் கிடைத்த
அரிய வாய்ப்பு.....
'காலாவதியான' காதலை
மீண்டும்
'புதுப்பித்துக்' கொள்ள
வேண்டிய புதிய நாள்....!!!
வேடிக்கையான
தினங்கள் எல்லாம்
வேண்டியது தினங்களாக
இருக்கும்போது
இந்தக் காதலர் தினம் மட்டும்
இன்னும்
விவாதத்திற்குரிய
தினமாகவே இருக்கிறது.....!!!
காதலர் தினம்
தேவையானதா ?
தேவையற்றதா ? என்ற கேள்வி
மனிதன் உயிர் வாழக்
'காற்று'
தேவையானதா?
தேவையற்றதா? என்று
கேட்பது போல் இருக்கின்றது....
போலிகளின்
புகழிடமாகவே மாறிவிட்ட
இன்றைய உலகத்தில்
காதல் மட்டும் என்ன விதிவிலக்கா?
இன்றையக் காதல் .....
'அன்பை' உடுத்தாமல்
'ஆபாசத்தை'
உடுத்திக் கொண்டுள்ளது...
'உள்ளத்தைப்'
பரிமாறிக் கொள்ளாமல்
'உடல்களைப்'
பரிமாறிக் கொள்கிறது.....
'இதய முதிர்ச்சியில்'
முளைக்காமல்
'இனக்கவச்சியிலேயே'
முளைக்கிறது...!!!
"அஸ்திவாரங்கள்
இல்லாத முக அழகின்" மீது
காதல் கோட்டைக் கட்டுவதால்
சிறிய காற்று மழைக்கே!
இடிந்து விழும்
வலிமையற்றதாக இருக்கிறது....
அன்றையக் காதல்
பூங்காவில்
"பூக்களை"த் தேடியது
இன்றையக் காதல்
"புதர்களைத்" தேடுகிறது....
கடற்கரையில்
"கால் தடம் பதித்து"
மகிழ்ந்தக் காதல்
இன்று
மறைவிடம் தேடி மகிழ்கிறது....
அன்று காதல்.....
எழுதினால்
அழிக்க முடியாத
"கரும்பாறையாக" இருந்தது...
இன்றும் இருக்கிறது
"கரும்பலகையாக...... !"
காதலர்கள் என்ற பெயரில்
ஆணும் பெண்ணும்
சோடியாகத்தான்
அலைகின்றார்கள்....
ஆனால்
காதல் தான்
"அனாதையாக" அலைகின்றது....
இன்றைய
பெரும்பாலானக் காதல்கள்
"இதயங்கள்" கருவுற்றுப்
பிறக்காமல்
"காமம்" துளிர் விட்டுப்
பிறக்கின்றது...!!
காதல்....
இதயங்களைத் திருடுவதல்ல
பரிமாறிக்கொள்வது....
இதயங்களைத்
தொலைப்பதல்ல
விதைப்பது ......
மனதைப் பரிக்கொடுப்பதல்ல
பறித்துக்கொடுப்பது...
மனதைக் கொள்ளையடிப்பதல்ல
கொள்ளைக்கொள்வது...
காதல்.....
'படிப்பறையில்' தொடங்கி
'கடற்கரையில்' முடிவதல்ல..
'மனவறையில்' தொடங்கி
'கல்லறையில்' முடிவது...
இதயங்களைப்
பழுது பார்க்கும் பட்டறைச்சாலை
வாழ்க்கையை
ரசிக்க அமரும் பூஞ்சோலை...
காதல் நமக்கு
ஆடை போட்டுப் பார்த்தது
நாம் தான் -அதை
நிர்வாணமாக்கிப் பார்க்கவே விரும்புகிறோம்....
காதல் நமக்கு
'நாகரீகத்தை' க்கொடுத்தது....
ஆனால் நாம்தான்
அதனிடம்
'நாகரிகமற்று
நடந்துக் கொள்கிறோம்......'
காதல் நமக்கு
'மானத்தை' க்கொடுத்தது
நாம்தான் !
அதன் மானத்தையே
கப்பல் ஏற்றுகிறோம்....!!!
காதல் நமக்கு
'வெட்கத்தைக்' கொடுத்தது
நாம் அதற்கு
'துக்கத்தைக்' கொடுக்கிறோம்....
அன்று காதலுக்கு
"கண்" இல்லை
இன்று பெரும்பாலானக் காதலுக்கு
"இதயமே" இல்லை....!!
என்னுடையக்
கவலையெல்லாம்
போலிக்காதல்கள்
அதிகரித்து விட்டதே! என்றல்ல..
அந்தப் போலிக்காதல்களின்
நெரிசலில் சிக்கி மிதிப்பட்டு
"உண்மை காதல்"
இறந்து விடுமோ ? என்பதுதான்...
♥அனைவருக்கும் காதலர் தின நல்வாழ்த்துகள்♥
கவிதை ரசிகன் குமரேசன்