அறிவன் பகையேனும் அன்புசேர் நட்பாம் - நீதி வெண்பா 3

நேரிசை வெண்பா

அறிவன் பகையேனும் அன்புசேர் நட்பாம்
சிறுவன் பகையாம் செறிந்த - அறிவுடைய
வென்றி வனசரன்தான் வேதியனைக் காத்தான்முன்
கொன்றதொரு வேந்தைக் குரங்கு. 3

- நீதி வெண்பா

பொருளுரை:

எதிரிலுள்ளவன் பகைவனேயானாலும் அறிவுள்ளவன் அன்பு பொருந்திய நட்பைப் பாராட்டுவான்.
எதிரிலிருப்பவன் சிநேகனே ஆனாலும் மூடன் பகையையே பாராட்டுவான்.

முன்னாளில், மிகுந்த அறிவையும், வெற்றியையும் உடைய ஒரு வனவேடன் ஒரு பிராமணன் கள்வர்களால் கொலை செய்யப்படுவதிலிருந்து காப்பாற்றினான். அறிவில்லாத ஒரு குரங்கு ஓர் அரசனைக் கொன்றது.

கதை:

முன்னொரு காலத்தில் ஓர் அரசன் ஒரு பிராமணனுக்கு ஒரு மாணிக்க மணியை வழங்கினான். அந்த மணியை கள்வர் கவர்ந்தால் என்ன செய்வது என்று ஆலோசித்தான். பின்னர் அந்த மணியை வாயில் போட்டு விழுங்கிவிட்டான். வீட்டிற்குச் சென்றதும் கக்கி அம்மணியை எடுத்துக் கொள்ளலாம் என்பது அவன் எண்ணம்.

இதனை அறிந்த வேடன் ஒருவன், அந்தப் பிராமணன் வீட்டிற்குப் போகும்பொழுது, அவனைத் தொடர்ந்துபோய், அடர்த்தியான காட்டுவழியில் அவனைத் தடுத்து நிறுத்தி, "உன் வயிற்றில் இருக்கும் மாணிக்கத்தைக் கக்கு" என்றான். அதனைக் கேட்ட பிராமணன் அஞ்சி," மாணிக்கம் உன் வயிற்றில்தானே இருக்கிறது" என்று கூறினான்.

இவ்விருவரும் இவ்வாறு சண்டையிட்டுக் கொண்டிருக்கும் பொழுது கள்வர்கள் வந்து பிராமணனைப் பிடித்துக்கொண்டு, மாணிக்கத்தைக் கக்கச் சொன்னார்கள்.

பிராமணனுக்கு வேடன் பகைவனாக இருந்தாலும், அறிவுள்ளவன் ஆனதால், பிராமணன் மீது அன்பும் இரக்கமும் கொண்டு அவன் உயிரைக் காக்க எண்ணி, கள்வர்களைப் பார்த்து, "ஐயா! நாங்கள் விளையாட்டாகப் பேசிக்கொண்டோம்; மாணிக்கம் வயிற்றிலா இருக்கும்? உங்களுக்கு விருப்பமானால் என் வயிற்றை அறுத்துப் பாருங்கள்" என்றான்.

கள்வர்கள் வேடன் வயிற்றை அறுத்துப் பார்த்தார்கள். வயிற்றில் மாணிக்கம் இல்லை. உடனே இரக்கம் கொண்ட கள்வர்கள், "ஆ! இவ்வேடனை அநியாயமாகக் கொன்று விட்டோமே; இந்தப் பார்ப்பானையாவது கொல்லாமல் விட்டிவிடுவோம்" என் எண்ணி அவனைப் பிழைக்க விட்டார்கள்.

பார்ப்பான் உயிர் பிழைத்தான். பார்ப்பானுக்கு வேடன் பகைவனாக இருந்தாலும். அறிவுள்ளவனாக இருந்ததால். அவன் மீது அன்பு கொண்டு தன்னுயிரை விட்டான்.

குரங்கின் கதை:

ஓர் அரசன் ஒரு குரங்கினை அன்புடன் வளர்த்து வந்தான். ஒருநாள் அவ்வரசன் அக்குரங்கினிடம் ஒரு கத்தியைக் கொடுத்து, "இவ்வழியாக யாரையும் உள்ளே விடாதே; எனக் கட்டளையிட்டு உறங்கச் சென்றான்.

அவன் உறங்கும்போது, அவன் உடம்பின் மீது ஓர் ஈ வந்து உட்கார்ந்தது. குரங்கு அதனைப் பார்த்தது. அரசன் அந்த ஈயைக் கொல்லத்தான் தன்னிடம் கத்தியைக் கொடுத்ததாக அறிவில்லாமல் எண்ணியது. அந்த ஈயைக் கொல்லக் கத்தியால் ஒரு வெட்டுப் போட்டது. ஈ பறந்து விட்டது. அரசன் இரு துண்டானான்.

அரசனிடம் குரங்கு அன்பு கொண்டிருந்தாலும், அறிவில்லாமையால், இத்தீமையைச் செய்து விட்டது.

கருத்து:

முன்னொரு காலத்தில் நிறைந்த அறிவுடைய வேடன் ஒருவன், ஒரு பார்ப்பான் உயிரைக் காப்பாற்றினான்.

ஆனால் அறிவற்ற ஒரு குரங்கு, தன்னை வளர்த்த அரசனையே கொன்றுவிட்டது.

எனவே முட்டாளின் நட்பைவிட, அறிவுள்ளவனின் பகைமை மேலானது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Feb-24, 9:02 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 106

சிறந்த கட்டுரைகள்

மேலே