காதல் இதயத்தின் தேசிய ஜோதி

(காதலர் தின சிறப்புக் கட்டுரை)
மெய்யன் நடராஜ்
காதல் ஒரு ஓவியம். காதலர்கள் அதை கண்களால் வரைகிறார்கள். தேசமெங்கும் காதல் இருந்தாலும் காதல் என்னும் தேசத்திற்குள் நுழைந்துவிடும்போது காதலர்கள் தேசத்தையே மறந்து விடுகிறார்கள்.
வாழ்கையின் நுழைவாயிலில் நின்று கொண்டிருக்கும் காலங்களில் ஒருவர்மீது ஒருவருக்குள் ஏற்பட்டுப் போகும் நம்பிக்கைகளினால் எழுப்பப்படும் உயர்ந்த உன்னத உறுதியான தூண்தான் காதல். காதலின் சாலைகளில் போக்குவரத்து நெரிசலாய் சில தடைகள் ஏற்படலாம். வாகனங்களை திசைமாற்றும் போக்குவரத்துப் போலீஸ்காரர்கள்போல் சில காதலர் வாழ்க்கையை இந்த சமூகம் திசை மாற்றலாம்.
அதனால் தொடமுடியாத தொலைவில் சென்று தொடவேண்டிய இதயம் தொலைந்து போனாலும், சூரியனைச் சுற்றியே சூரிய திசைக்குள் முகம் வைக்கும் சூரியகாந்தியைபோல் அந்த இதயத்தை தேடியே தன ஜீவிதத்தை ஓட்டும். காதல் ஒரு நதிநீரைப் போன்றது. அது இரு கரைகளுக்கு நடுவே ஓடும் நீரானது நதியைப் புனிதமாக்குவதுபோல் இரு மனங்களுக்கிடையே வாழும் காதலானது வாழ்வை புனிதப் படுத்துகிறது. உண்மைக் காதல் வாழும் இதயமானது ஒரு நாயைப் போன்றது என்றாலும் பொருந்தும்.அதனால்தான் அது தன் உயிர்க் காதலுக்குரியவரிடம் எப்போதும் நினைவு என்னும் வாலை ஆட்டிக் கொண்டே இருக்கிறது.
‘காதல் ஒரு பேய் மாதிரி எல்லோரும் அதைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பார்கள் சிலருக்குத்தான் அது தெரியும்’ என்று மேல் நாட்டு மேதை ‘லேரோச்சி போகால்ட்’ கூறியுள்ளார். நாய் கண்ணுக்குத்தான் பேய் தெரியும் என்னும் நம் நாட்டு வழக்கிற்கொப்ப ஒரு மனம் நாயாக மாரும்போதுதான் பேயானக் காதலைக் கண்டு பிடிக்கின்றது. ஆனால் நாய்க்கும் பேய்க்கும் நிஜத்தில் நட்புறவு இல்லாத போதும் காதலில் நாயும் பேயும் நற்புறவாகும் அதிசயம் நிகழும்.
இன்றையக் காலக் கட்டத்தில் காதலர் தினத்தன்று எஸ்.எம்.எஸ்.என்னும் குறுஞ்செய்தி, மின்னஞ்சல், மற்றும் நவீன கைத் தொலைபேசிகளைப் பயன்படுத்தி பூச்செண்டோடு காதல் வேட்டை நடாத்தும் வேட்கை இளைஞர் யுவதிகளிடையே பரவிக் கிடக்கிறது. உண்மையில் காதல் பெப்ரவரி பதின்நான்கில் திடீறேன்றுப் பூக்கும் மின்னல் பூவல்ல.அது கன்னல் பூ. காலங்கள் கடந்தும் வாடாமல் வாசனை வீசப் போகும் அது ஒருபோதும் யோசனை செய்தும் வருவதில்லை. ஒரு சூறாவளியைப்போல் சுழன்று வந்து காதல் பூங்காவை சாய்த்து ஓய்வதும் இல்லை. எப்போது பூக்கவேண்டும் என்று காலத்திற்கேற்ப பூக்கும் பூவாய் வருஷம் மாதம் தேதி பார்த்துப் பூக்காமல் எப்போதாவது பூத்துவிடுவதுதான் காதலாகும். அனால் அது எப்போது என்பதுதான் அந்தக் காதலுக்கும் புரியாத புதிர். இதனால்தான் “காதல் பார்த்ததும் வருவதில்லை” என்று அறிஞர் ‘கிறிஸ்டோபர் மர்லோங்’ கூறியுள்ளார் போலும்.
காதல்கொண்ட இதயங்கள் கனவுகளைச் சுமந்து கைகூடும் காலத்துக்காக ஆளுக்கொரு திசையில் ஆமை வேகத்தில் ஊமை சோகத்தால் தவங்கிடக்கலாம். சில காதலர்களின் வாழ்வோ சோக மேகங்களுக்குள் மறைக்கப்பட்ட நிலவாகிக் கிடக்கலாம். என்றாலும் வானத்தினின்று விழும் மழைத்துளியைப் பருகி வாழும் சாதகபட்சியைபோல இதய வானத்துள் பொழியும் நினைவு மழைத்துளியை சுமந்து காதல் வாழும். காதலை மட்டுமே சுவாசிக்கும் இதயங்களுக்கு காதலில் ஏற்படும் தடைகள் ஒருபோதும் விலங்கிடுவதில்லை.வாழ்க்கைக்காக காதலை தேர்வு செய்யாமல் காதலுக்காக வாழ்க்கையை அர்ப்பணம் செய்பவர்களைப் பார்த்துதான் மகாத்மா காந்தியே “காதல் எங்கு இருக்கிறதோ அங்குதான் வாழ்க்கை இருக்கிறது” என்று கூறியுள்ளார். அதனால் நாம் எல்லோரும் காதலிக்க வேண்டும். காதலால்தான் வாழ்க்கை என்னும் நிலவுக்கு ஒளி கிடைக்கிறது.
வாழ்க்கையை நாம் காதலிக்கும்போதுதான் அது நம்மை காதலிக்கின்றது. நம் பார்வைக்கு காதலிக்காதவர் யார் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு காதலில் மூழ்கியவர்களே..! இப்படிப்பட்டவர்களைப் பார்த்துதான் காதலிக்காதவர் யாரும் இல்லை காதலை வெளிப்படுத்தாதவர்கள் வேண்டுமானால் இருக்கலாம் என்று ஷேக்ஸ்பியர் கூறியுள்ளார்.
காதல் என்பது “shaking beer” போல் இருக்க வேண்டும். குலுக்கப்பட்ட “beer” (Beer என்றதும் போதைக்காக குடிக்கப்படும் மதுவை மாத்திரம் கணக்கில் கொள்ளவேண்டாம் அல்கஹோல் இல்லாத BEER வகைகளும் உண்டு) எப்படிக் குப்பியில் தன்குவதில்லையோ அதுபோல் நம்முள்ளத்தைக் குலுக்கப பொங்கும் காதல் என்னும் திரவம் சேர வேண்டிய இதயத்தைச் சென்று சேர்ந்து விடவேண்டும். அப்படி அடைந்துவிட்டால் மாத்திரம் அது பூரணத்துவம் பெற்றக் காதல் அல்ல. “அலெக்ஸாண்டர் ஸ்மித்” என்னும் மேதையின் கூற்றுப்போல நம்மை இன்னொரு வரிடத்தில் கண்டு பிடிக்கும் காதலானது, “செயின்ட் எக்ஸ் யுபெரி“ எனும் பேரறிஞரின் கூற்றான “இணைகின்ற இருவருக்கும் இந்த உலகம் ஒன்றாகத் தெரிந்தால்தான் அது காதல்“ என்பதாக வேண்டும்.
கண்களின் வழியே மௌனம் பேசி இதயத்தில் இனிக்கும் பிரபஞ்சத்தின் தேசிய வெளிச்சம் காதல். காதல் இல்லாத இதயம் வாழ்வின் தேன் துளிகளை சுவைக்கத் தெரியாத கருப்பு வண்ணாத்தி. காதலைப்பற்றி எழுத எழுத அது இன்ப ஊற்றாகச் சுரக்கிறது.காதலைப்பற்றி பேசப் பேச அது தித்திப்பை அள்ளி அள்ளி சொரிகிறது. ஒன்றை எதிர்பார்த்து ஒன்றை செய்யும் இந்த உலகத்தில் எதையும் எதிர்பாராமல் வருவது காதல் ஒன்றுதான். காதல் காதலை மட்டுமே எதிர்பார்க்கிறது. காதலை காதலால் காணத் தெரியாத கருப்பு இதயம் படைத்தவர்களால் காதல் பல கஷ்டங்களை எதிர்நோக்குகிறது. துன்பங்களையும் துயரங்களையும் கடந்த காதல் ஒன்றே இன்பம் என்னும் தேனாற்றில் மீனாய் நீந்துகிறது.
காதல் செயாதவரைக் காதலித்தாலும் அது காதல்தான். சட்டத்த்திட்டதிற்கு உட்பட்டதோ சம்பிரதாயங்களுக்கு கட்டுபடுவதோ சர்வாதிகாரங்களுக்குள் அடங்கிப் போவதோ காதலின் அகராதியில் இல்லாத வாக்கியங்கள். இவை களுக்கேற்ப மாறிக்கொள்வது ஒரு உண்மையான காதலும் இல்லை. காதலுக்கு ஒரு மனம் ஒரு குணம் இருந்தால் போதும் தேதி பாராமல் மலரும் பூவைப்போல ஜாதி பாராமல் மலரும் காதல் நீதி சொல்பவனையும் போதிக்கும் காதல் புத்தனாக்கும்.
காதலின் சிற்பங்களைச் செதுக்கும் சிற்பிகள்தான் காதலர்கள். ஆம்., கற்களோ உளியோ இல்லாமலும் சொற்களோ மொழியோ இல்லாமலும் கௌரவமான தங்கள் காதலையே ஆத்மாவுக்குள் செதுக்கி வைக்கும் அற்புதச் சிற் பிகள் காதலர்களே..! முற்களின் நுனியிலும் பனித்துளியாய் உட்காரும் மென்மை காதலுக்கு மட்டுமே முடிந்த காரியம். பூக்களின் நறுமணம் போலவும் அலைகளின் புன்னகைப் போலவும் இடம் மாறினாலும் நிலைமாறாதது காதல். மாளிகைகளையும் கூட வேர்களால் ஊடுருவிச் சித்திக்கும் போதிமரங்களைபோல மனசுக்குள் வேர் விடுகின்றக் காதலானது காதலுக்குரியவரிடம் சென்றடையும் வேளை ஏற்றுக் கொள்ளாமைகளால் இதயத்தைச் சிதைக்கவும் கூடும். இங்கே காதல் கோட்டை சிதைந்தாலும் காலங்கள் கடந்தும் காதலின் நினைவுகளின் பசுமையை மனசுக்குள் அசைபோடும் காதலர்களை காண்கிறோம். காதல் கைகூடிய பின்னர் இணைந்த காதலைப்பற்றி பேச மறுப்போரை
கூட காண்கிறோம். ஆனால் ஒருமுறை காதல் வயப்பட்டப் பின்னர் அந்தக் காதலை இதயத்தில் இருந்து தூக்கி எரிந்துவிட்டு வாழ்பவர் எவரையும் காணவே முடியாது. இதழ்களால் காதலுக்கு எதிர்ப்பு கோஷம் எழுப்பிவிட்டு இதயத்தை காதல் குடித்தனம் நடத்த வாடகைக்கு கொடுத்திருக்கும் வெளிவேஷதாரிகளுக்கும் காதல் அவர்களின் ஜீவனுக்குள் ஜீவித்துக் கொண்டுதானிருக்கும்.
வெளிக்காக முள்ளைப் போட்டு தடுக்கும் மனிதன், முள்ளுக்கு வெளிபோட்டுக் காவல் காப்பதில்லை எப்படியோ அப்படித்தான் காதலில் அடிபட்ட இதயங்களின் வடிவங்களும். அநியாயத்தையும், அட்டூழியங்களையும், அகம்பாவத்தையும், ஆத்திரத்தையும், ஆணவத்தையும் நேசிக்கப் பழகி க்கொண்ட பின்னர் ஆயுதங்களையும் நேசித்த மனிதன் இறுதியில் அழிவை நேசிக்கத் தொடங்கியதால்தான் இன்று பூமியில் ஒருவர்மீது ஒருவர் கொள்ளும் விசுவாசத்திலும் விஷவாசம் வீசுகிறது.
காதலால் இந்த உலகம் சாதித்த சாதனைகளை சற்று மனிதன் சிந்திக்கத் தொடங்குவானானால் ஆயுதங்களை அழித்துவிட்டு குரோதம் விளைந்த மனதில் விரோதம் இன்றிக் காதலை விதைப்பான். அப்படி விதைக்கும் காதல் செடி வளர்ந்து பூ பூக்கும்போது அந்த பூவின் மணமானது எந்த ரணத்தையும் குணமாக்கும். எனவே நாளை உலகப் பூங்காவில் காதல் என்னும் மாபெரும் மகிழ்ச்சிப் பூப்பூக்க பிணமான மனங்களையும் ஒன்று கூட்டி காதலைப் போதிப்போம் வாழ்க்கை என்னும். நந்தவனத்துள் காதல் என்னும் பூவின்றி கண்ணீர் வடிக்கும் மனிதத்தின் வேர்களில் நம்பிக்கை என்னும் நீர் வார்த்து செழிக்க வைப்போம். அந்த செழிப்பின் மகிழ்வை கொண்டு சீரழியும் இந்த உலகின் இருண்ட பக்கத்தை வெளிச்சமாக்க காதலை இதயத்தின் தேசிய ஜோதியாக்குவோம்.!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (14-Feb-24, 1:07 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 122

சிறந்த கட்டுரைகள்

மேலே