பித்தன்

பித்தன் தெருவில் இறங்கி நடந்து கொண்டிருந்தான்

கற்களை எடுத்து அவனை நோக்கி வீசினார்கள்

பித்தன் நின்று பதிலுரைத்தான்
உங்கள் கற்களால் எனக்கு எந்த காயமும் உண்டாகாது

நான் உங்கள் கற்களுக்கானவன் அல்ல
உங்களின் சொற்களுக்கானவன்

சேகரிக்க முடிந்த உங்கள் கற்களை விடுத்து
சேகரிக்க விரும்பாத சொற்களுக்காக வந்தவன்
உங்கள் சொற்களும் என்னை காயபடுத்த முடியாது

பித்தன் படியில் உறங்கி கொண்டிருந்தான்
பக்கத்தில் நாய் குரைத்துக்கொண்டிருந்தது

அருகில் உறங்கியவர்கள் விழித்தார்கள்

பித்து பிடித்துவிட்டது பித்தனுக்கு
இவ்வளவு நாயின் சத்தத்திலும்
எப்படி உறங்குகிறான் பார் என்றார்கள்

பித்தன் பதிலுரைத்தான்
குரைக்கும் நாயின் சத்தத்தோடு
நீங்கள் யுத்தம் செய்கிறீர்கள்
நானோ அதனுடன் புத்தம் செய்கிறேன்
அதனால் உறங்குகிறேன்

பித்தன் சென்று கொண்டிருந்த வழியிவ்
திடீரென நின்றான்
விளையாடிக்கொண்டிருந்தவர்கள்
விலகிப்போ நாங்கள் விளையாடுகிறோம் இடையில் நிற்காதே என்றார்கள்

பித்தனோ
விளையாடுவது உங்கள் இயல்பு
ஆனால் வழியில்தானே நீங்களே விளையாடுகிறீர்கள்
என்னை இடையில் நிற்கிறேன் என்பது
எப்படி சரியாகும் என்றான்

பித்தன் சாலையில் ஒலித்த பாடலுக்கு ஆடிக்கொண்டிருந்தான்
எல்லோரும் கைதட்டிச்சிரித்தார்கள்
பித்தனும் சிரித்தான் ஆடுவதை நிறுத்தாமலே
மேலும் உரைத்தான்
உங்களால் முடிந்தும் முடியாததை
நான் செய்கிறேன்

உங்கள் கால்களில் இருக்கும் சமூக விலங்கில் இந்த பாடல் பூட்டப்பட்டிருப்பதை நான் பார்க்கிறேன்

என் கால்களோ இப்போதைக்கு என்னுடையதல்ல அது
இப்போது ஒலித்துகொண்டிருக்கும் இந்த இசையினுடையது என்றான்

பித்தனை கடந்து சென்றான் ஒரு பைத்தியக்காரன்

அவன் வாய் இவ்வாறாக முணுமுனுத்தது

இவனும் பைத்தியம்தான் ஆனால்
வைத்தியம் தேவைப்படாத பைத்தியம்

எழுதியவர் : இளவல் (16-Mar-24, 4:25 pm)
சேர்த்தது : இளவல்
Tanglish : pithan
பார்வை : 65

மேலே