தன்னையே வெறுக்கத் தொடங்கினாள்
.
அம்மா இறந்து ஒரு வருடம் கழித்து, தான் பிறந்த வீட்டிற்கு வருகிறாள் செல்வி. கதவு பூட்டிக் கிடந்தது. ‘வந்துட்டியா செல்வி ! ‘ என்று ஓடி வந்து வரவேற்கிற அம்மா இல்லை . உள்ளே நுழையும் போதே ‘ கம கம’ வென மணக்கும் ஊதுவத்தி வாசனை இல்லை.கையினை இரு கைகளாலும் பிடித்துக்கொண்டு ,
‘வீட்டுக்காரர் எப்படி இருக்கிறார். பிள்ளைகள் எப்படி இருக்கிறார்கள்? எப்படிப் படிக்கிறார்கள் ?’ என்று கேள்விகளை அடுக்கிக் கிட்டே போகும் அம்மா இல்லை.
‘கைகாலை கழுவிட்டு வா, சூடா கொஞ்சம் காப்பித் தண்ணிக் குடி. களைப்பெல்லாம் பறந்து போயிடும் ‘ என்று உபசரிக்கின்ற அம்மா இல்லை.
செல்வியின் கண்களில் அவளையும் அறியாமல் கண்ணீர் பெருக்கெடுத்தது. ‘எங்கே வாய் விட்டு அழுதிடுவோமோ ? ‘ என்று பயந்து முந்தானைத் தலைப்பால் வாயினைப் பொத்திக் கொண்டு உள்ளே சென்று அங்கே மாட்டப்பட்டிருந்த நிழற்படத்தில் இருந்த அம்மாவையும், அப்பாவையும் தொட்டு வணங்கினாள்.மனதுக்குள் ‘என்னை மன்னித்து விடு அம்மா’ என மனதார வேண்டியும் கொண்டாள். அம்மாவிடம் சென்ற வருடம் தான் நடந்து கொண்ட விதம் அவள் மனத்திரையில் விரிந்தது.
தனது வயதான காலத்திலும் தனியாகவே வாழ்ந்து வந்த அம்மா , தலைசுற்றி கீழே விழுந்து, இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டு, இனிமேல், எலும்பு ஊறுவது சிரமம். வீட்டில் வைத்து கவனித்துக் கொள்ளுங்கள். எவ்வளவு நாள் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது என மருத்துவர்களும் கைவிரிக்கவே , கவனித்துக் வேண்டிய பொறுப்பு செல்வியின் மேல் விழுந்தது.
எல்லாமே படுக்கையில் தான் என்ற போது செல்வியும் மிகவும் சோர்ந்து போனாள். அவளுக்கும் வயதாகி விட்டதால் இயலவில்லை. கோபம் வந்தது. எரிச்சலும் வந்தது. அந்த எரிச்சலில் ஒருநாள் ‘ எல்லாத்தையும் அனுபவித்த பிறகும் இந்த கிழத்துக்கு உயிர் போகமாட்டேங்குதே? ‘என்று திட்டி விடவே, நொந்து போன அம்மா அதன்பிறகு எதுவும் உண்ண மறுத்து, பத்து நாளில் உயிரையை விட்டு விட்டார்கள்.
‘ சே! இத்தனை வேலமான மகளாகவா நான் நடந்து கொண்டேன் ‘ என்று தன்னையே திட்டிக் கொண்டாள். தன்னையே வெறுக்கத் தொடங்கினாள்.