அத்தனைப் பேச்சும் இதுக்குத்தானா

மனைவியின் அக்கா பொண்ணுக்கு கல்யாணம் பேசிக்கொண்டு இருந்தார்கள். காதல் திருமணந்தான் என்றாலும், முறைப்படி நடக்க வேண்டும் என்பதற்காக இருவீட்டாரும் பேசினார்கள். செல்போனில் அவ்வப்போது , என்ன நடக்கிறது, என்ன பேசினார்கள் என்னும் விபரங்கள் வந்து கொண்டே இருக்கும்.
‘ஏங்க! கல்யாணம் முடிவு பண்ணி தேதியும் குறித்து விட்டார்களாம் ‘ என்றாள் முகம் நிறைய மகிழ்வோடு. மனைவிக்குக் கல்யாண வீடுகளுக்குச் செல்வதென்றால் அத்தனை மகிழ்ச்சி எப்போதும். அதுவும் இது அக்கா பொண்ணு கல்யாணம் கேட்கவா வேண்டும்.
‘ஏங்க இரண்டு நாள் முன்னாடியே போயிடலாம். ஏன்னா நான்தான் உறுதுணையா இருந்து எல்லாம் செய்யணுமுன்னு அக்கா சொல்லிட்டாள் ‘ என்று வேறு கூறிக்கொண்டாள்.
தினமும் கைபேசியுடனே அலைந்த மனைவி இரண்டு மூன்று நாட்களாகப் கைபேசியைத் தொடவே இல்லை. எந்த அழைப்பும் வரவும் இல்லை. எந்தப் புதிய செய்தியும் மனைவி சொல்லவும் இல்லை.
‘சரி என்ன ஆயிற்று?’ என்று கேட்டுவிடலாம் .இல்லையின்னா ‘எங்க வீட்டுக் கல்யாணத்திலே கொஞ்சங் கூட அக்கறை இல்லாமல் இருக்கிறீங்களே’ என்று குற்றம் சுமத்தத் தொடங்கி விடுவாள்.
‘ ஏண்டி உமா என்னவாயிற்று. கல்யாணத்தைப் பற்றி வேறு ஏதாவது தகவல் உண்டா ?’
‘அடா போங்க… கல்யாணத்துக்கு உதவி பண்ணுறேன்னு சொன்னது உண்மைதான். அதுக்காக இவ்வளவு பெரிய உதவியைச் செய்யணுமுன்னு சொன்னா எப்படிங்க. நம்மால முடியாதுன்னு சொல்லிட்டேன் ‘ என்று சொன்னவள் என்ன உதவி என்பதைக் கூறவில்லை.
‘அது என்ன அவ்வளவு பெரிய உதவியைக் கேட்டுட்டா ‘
‘பொண்ணுக்குச் செய்ய வேண்டிய சீரான கட்டில், பீரோ, பாத்திரங்கள் எல்லாவற்றையும் என்னைக் கல்யாண பரிசாக வாங்கிக் கொடுக்கச் சொல்கிறாள். என்னால் முடியாதுன்னு சொல்லிட்டேன். அதான் அவளுக்கு மனத்தாங்கல் .அப்புறம் பேசவே இல்லை. நானும் போனாப் போறான்னு விட்டுட்டேங்க. கல்யாணதுக்குப் போவோம். இயன்ற மொய்யை எழுதிட்டு வந்திடுவோம். அவ்வளவுதாங்க ‘ என்றபோதுதான் உண்மை விளங்கிற்று. அத்தனைப் பேச்சும் இதுக்குத்தானா வென்று……..

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (8-Apr-24, 6:27 pm)
பார்வை : 33

மேலே