வற்றிய நதி

*************
விடுமுறை வழங்கப்பட்ட
பள்ளிக்கூடத்தில்
ஓடித்திரியும் எலிகளைப்போல
சுதந்திரமாயத் திரியும் சாரை
*
படகு சேவைக்குப்
பகிரங்க விடுமுறை
அறிவிப்பு விடும்
*
கொக்குகள்
கருவாடு உண்ணும்
நிலைமைக்குத் தள்ளப்பட்டிருப்பதற்கான
உறுதிப் பத்திரம் வழங்கும்
*
நீர் நின்றத் தடங்கள்
பாறைகளும் பாவாடைக் கட்டியிருந்தன என்பதற்கான
அடையாளம் காட்டும்
*
தூரத்து ஊரொன்றில்
கவிழ்ந்த படகில் மூழ்கி மரித்த
எவரோ ஒருவரின்
இடுப்பு வேட்டித்துண்டைப்
பதுக்கி வைத்திருந்தப்
பாறை மனசு வெளிச்சத்திற்கு
வந்து விடும்
*
விதைநெல்லை விற்று
அரிசிவாங்கும் விவசாயியின்
கண்களில் நதிபாய
கார்மேகம் வழங்கும்
*
போக்கற்றவர்கள்
புறம்போக்கு நிலமென்று
வீடுகட்டிக்கொள்ள தற்காலிக உத்தரவளிக்கும்
*
சிறுவர்கள் விளையாட
மணற்பரப்பைச் சற்று
அகலப்படுத்திக் கொடுக்கும்
*
தவளைகள் கிட்டாத
கவலைகளால்
புற்றைவிட்டு வெளிநடப்புச் செய்யும்
பாம்புகளின் வாழ்க்கைப் போராட்டம்
பரகசியப்படுத்தப்படும்
*
தூண்டில் வியாபாரியின்
வருமானத்தில்
துண்டுவிழச் செய்யும்
*
மனிதர்களும் மாக்களும்
பெருவெள்ளத்தில்
அடித்துச் செல்லப்பட்டனர்
என்ற சோகச் செய்தியைப்
பதிவேற்றக் காத்திருக்கும்
ஊடகத்தினரின் நாடகத்திற்கு
மேடைதர ஒரு பெரு மழைக்காக
காத்திருந்து கண்ணீர் விடுவதாகவே சில
சலத் துளிகளோடு
நீரழிவு கொண்ட மலைப்பாம்பாய் மெலிந்தோடிக் கொண்டிருக்கும்
எங்கும் வற்றிய நதி
*

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (13-Jul-24, 1:53 am)
Tanglish : vattriya nathi
பார்வை : 66

மேலே