நிலம் கொத்திப் பறவை

உதிர்ந்த பூங்கனவுகளை உடலில் தாங்கி நிற்கும் பூமி
அதிர்ந்து குலுங்குவதால் அன்றாடம் அய்யய்யோ அச்சம்;
முடிந்து விட்ட மரணங்களால் முடிவுறாத கவிதைகளால்
விடிந்து விடுமோ இன்றாவது எனும் கேள்வியே மிச்சம்.

தாய் எனத் தெரிந்தும் பாய்க்கு வாவென்றழைத்து
வாய்ப்பு வரும்போதெலாம் வண்புணர்வு செய்யும்
நாய்க்குணம் மாறாமல் நன்னிலத்தின் கற்பதனை
காய்த்துப் போகவே கொள்ளைக் களவாடினோம்

வடவாறு வெட்டாறு வெண்ணாறு குடமுருட்டிக் காவேரியென
நடமாடிய நதிகளெல்லாம் உடை மாற்றிக் கொண்டனவே
படம் வரைந்து காட்டும் பரிதாப நிலையடைந்தோம்
இடம் பெயர்ந்து போகும் இன்னலுக்கு ஆளானோம்

நிலம் கொத்திப் பறவை என்றதும் நம் நினைவில்
நிலம்பியோ குருவியோ காகமோ கூகையோ என
சில மட்டும் வந்துச் சிறகடித்துச் சென்று விட
நிலமிதிலே மரமில்லை நிலைத்திடவே வளமில்லை.

பதங்கனுக்குக் கீழே புதிதாய் எதுவுமில்லை என்று
பதகராய் வாழ்கிறோம் பதுங்கியே சாகிறோம் பின்
பதகம் இது புதிதென்று வீண்பெருமை பேசுகிறோம்
பதவி போனபின் நாணி பூமுகத்தை மூடுகிறோம்.

சேக்கையின் சேர்வுதான் சேகரம் என உணர்ந்து
தேக்கையும் தெங்கையும் தெவ்வியலாய் அணிவித்து
ஆக்கை இருக்கும் வரை ஆகாரம் தேவையென நிலம்
காக்கை கடமையென இக்காசினியைக் காதலிப்போம்.

எழுதியவர் : தா. ஜோசப் ஜூலியஸ், (12-Jul-24, 3:42 pm)
சேர்த்தது : T. Joseph Julius
பார்வை : 67

மேலே