இன்பமும் நாமும் இனி
#இன்பமும் நாமும் இனி..!
ஆதாம் ஏவாள் காதல் நமது
ஆரிய திராவிடப் பிரிவுகள் ஏது
நீதான் எனக்கு நானே உனக்கு
நேயம் கொண்ட வாழ்வில் களிப்பு..!
பூதம் போன்றே கிளம்பிய சாதி
பூக்களை அழிக்க வந்தது ஓடி
நாதமிசைத்த வீணையின்
வாழ்வு
நரம்பினை அறுக்க உறவுகள் தீர்வு..!
எனக்கென உன்னை எழுதிய இறைவன்
எதிர்த்துக் காப்பேன்
நானுன் தலைவன்
இனங்கள் பிரிக்கும்
இழிவு சனங்கள்
இவர்கை சிக்கியா
ஆவோம் பிணங்கள்..?
எதிர்க்க வியலா சூழல் என்றால்
இயன்ற வரையில் ஓடு என்றான்
மதியின் அவசியம் மாதவன் உரைத்தான்
மனதில் இருத்தித் துயரம் கடந்தோம்..!
தூரம்.. தூரம்.. தூரம் கடந்தோம்
துயரங்கள் தீண்டா தொலைவில் கிடந்தோம்
பாரம் எங்களைக் கூடா வண்ணம்
பருவம் செழிக்க வாழ்ந்தி ருந்தோம்..!
ஆரின் கண்தான் பட்டது அறியோம்
ஆடிக் களிக்க மழலை யில்லை
ஊர்வாய் மெல்ல மென்று சிரித்தது
உலகம் கண்டு நெஞ்சம் கொதித்தது..!
அலைந்தோம் திரிந்தோம்
ஆண்டவன் இல்லம்
அவனுக்குக் கருணை இல்லையே கொஞ்சம்
மலைபோல் நம்பி மருந்தும் உண்டோம்
மலட்டுப் பட்டம் எங்களைக் கொன்றும்..!
செயற்கை வழியில் குழந்தை பிறப்பாம்
தேவை இருபது லட்சம் அதற்காம்
மயக்கம் வந்தது போலே ஆனோம்
மருத்துவ செலவு இமயம்.. இமயம்..!
செயற்கைத் தரிப்பில் செய்யும் புரட்டு
செய்கின் ராறே அத்தனை உருட்டு
அயலான் மகரந் தத்தில் விதைப்பு
அதற்குத் தந்தை நானா பதைப்பு..?
ச்சீ..ச்சீ வெட்கம் கெட்ட வாழ்வு
தேவை யில்லை அடுத்தவன் பிள்ளை
சேயாய் எனக்கு
அவளே ஆனாள்
சேய்தான் அவளுக்கு நானு மானேன்..!
கருணை வைத்தது காலம் எம்மேல்
கருவும் பூத்தது குறிஞ்சிப் பூப்போல்
வரமாய்ப் பிறந்த தேவதை யோடு
வற்றா யின்பம் ஊற்றெம் மோடு..!
சாதியைக் கடக்கும் திறமை வேண்டும்
சாதித் தோமே வாழ்வை வென்றும்
மீதிப் பொறுமை மேன்மை செய்ய
மிளிரும் சொர்க்கம் யாமே உய்ய..!
#சொ.சாந்தி