உன் மௌனம்

நதிநாக்கு மீதினிலும் வறட்சி எனை
நனைக்காமல் போவதில் புரட்சி என்னவோ
விதிவீதி நடமாடும் விரக்தி எனை
விளையாடும் ஓரவிழி கத்தி அல்லவோ
*
கடலோடு அலையாக உறவாடும் மனசு
படகாகித் தடுமாற உருவாகும் தினுசு
எழுதாத கவிதைக்கு கருவான வயசு
எனையாள விழியாலே புரிவாயோ அரசு
*
என் ஒடம் தரையில் கிடக்கிறது
உன் கடல் சிறையில் இருக்கிறது
அலையாய் அடிக்கும் ஒரு காதல்
உதிரா புன்னகை நுரையில் தவிக்கிறது
*
நீ காகிதத்தில் விழாத கவிதை
நான் கண்ணீர்விட்டு அழாத குழந்தை
பிடிவாதத்திடம் பிடிவாதம் பிடிக்கும் காதல்
பிடிமானம் கொண்டு எழாத விதை
*
உன் நாக்கு பொய் சொல்வதில்லை
உன் கண்கள் மெய் சொல்வதில்லை
சொல்ல மாட்டேன் என்றாவது சொல்
சொல்லிக்கொள்ள உன் பொய்யே போதும்
*
ஒரு தண்ணீர் குடத்தின் தாகம் நான்
சிறு இடையில் அமரும் மோகம் தான்
குலுங்கும் குடம் நீரையேனும் சிந்துகிறது
குமரி உன் மௌனம் யாரையேனும் கொல்கிறது
*
சில கசல் துளிகள்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (19-Jul-24, 1:56 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : un mounam
பார்வை : 172

மேலே