இரண்டாவது குழந்தை

ஸ்ரீனிவாஸ், சரளா ஹைதராபாத்தில் வசிக்கும் ஒரு வளமான ஜோடி. இருவரும் அழகானவர்கள், சிறந்த கல்வியாளர்கள். பெரிய MNC நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். இவர்கள் தங்கள் நிர்வாகத்தின் சார்பில், அமெரிக்காவில் ஒரு வணிக மாநாட்டில் கலந்துகொண்டபோது சந்தித்தனர். அங்கு ஏற்றப்பட்ட காதல் பொறி, நாளடைவில் கொழுந்துவிட்டு எரிந்து மிகவும் பிரகாசமாக மின்னியது. ஆறு மாதங்களில் அவர்களை வாழ்க்கைத் துணைவர்களாகியது.
அவர்கள் மசூரியிலும், நைனிடாலிலும் இரண்டு வாரங்கள் தங்கி தேனிலவை சிறப்பாக கொண்டாடிய பின், ஹைதராபாத் நகரின் மையப்பகுதியில் உள்ள ஒரு ஆடம்பரமான குடியிருப்பில் குடியேறினர்.
அவர்கள் நல்ல தாம்பத்திய உறவை அனுபவித்தனர். வார இறுதி நாட்கள் வசீகரமாகவும் உற்சாகமாகவும் இருந்தன. சில சமயம் வெளியூர்களுக்குச் சென்று, புதுப்புது இடங்களை பார்த்து விட்டு, வகை வகையான உணவை உண்டு மகிழ்ந்தனர். நகரத்தில் உள்ள ஒவ்வொரு வணிக வளாகத்திற்கும் சென்று, தேவையானதை விட தேவையில்லாத பொருட்களை வாங்குவதில் பணத்தை செலவழித்தனர். வீட்டில் அருமையான வசதிகள் கொண்ட நவீன சமையலறை பாதி நாட்களுக்கு மேல், வெற்றிடமாக இருந்தது. வெளியில் பார்க்கும் பல உணவுகளை அவற்றின் வசீகரத்தின் காரணமாக சுவைத்து உண்டு மகிழ்ந்தனர், அவற்றினால் விளையும் தீமைகளை கொஞ்சமும் எண்ணிப்பார்க்காமல்.
பல ஐ-மேக்ஸ் திரையரங்குகளில் ஆங்கிலம், இந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களைப் பார்த்தனர். பல படங்களை வெறுமனே பார்த்தனர். சில படங்களை மட்டுமே விரும்பி, ரசித்து பார்த்தனர். இருவருக்குமே புத்தகம் வாசிப்பது, இசையை ரசித்து கேட்பது அல்லது வேறு மனம் லயிக்கும் பொழுதுபோக்கு எதுவுமே இல்லாததால், வீட்டில் உள்ளபோது அதிக நேரம் செல்போன் அல்லது தொலைக்காட்சி பார்ப்பதிலேயே நேரத்தை வீணடித்தனர். இந்த உல்லாசமான, கவலையற்ற, புலனுகர்ச்சி கலந்த வாழ்க்கை மூன்று வருடங்கள் நன்றாகவே நடந்தது.
அதன் பிறகு, இருவரும் சற்று வித்தியாசமாகவும் அதிருப்தியாகவும் உணர ஆரம்பித்தனர். திருமணம் ஆகி இரண்டு வருடங்களுக்கு பிறகு இருவருக்குமே ஆழ்மனதில் உதித்த ஒரு எண்ணம், மெல்ல மெல்ல பெரிய உருவம் எடுக்க ஆரம்பித்தது. காரணம், இருவருக்கும் இடையே பாலியல் திருப்திக்கு பஞ்சமில்லை என்றாலும், அவர்களால் தங்களை பெற்றோராக உயர்த்திக் கொள்ள முடியவில்லை. இத்தனைக்கும் அவர்கள் கருத்தடை சாதனங்களையோ மருந்துகளையோ உபயோகிக்கவில்லை.
இத்தகைய மன தாக்கத்தால் இருவரும் பல்வேறு மருத்துவர்களை கலந்தாலோசித்தனர். விரிவான மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு, ஸ்ரீனிவாஸின் உடல்நிலையில் உள்ள சில குறைபாடுகள் காரணமாக, சரளா கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்ற பொதுவான கருத்தை மருத்துவ ஆலோசகர்கள் தெரிவித்தனர். சரளா மனம் துவண்டாள். ஸ்ரீனிவாஸ், சரளா இந்த பிரச்சினையை அடிக்கடி எண்ணி, சிந்தித்து விவாதித்து, பிரதிபலித்தார்கள். இருவரும் பெற்றோராக மாறுவதில் ஏற்பட்டுள்ள துரதிர்ஷ்டம் குறித்து கவலை கலந்த ஏமாற்றம் அடைந்தனர்.
இருவரில், சரளாவுக்கு குழந்தை வேண்டும் என்ற ஏக்கம், ஆதங்கம் அதிகமாக இருந்தது. அக்கம்பக்கத்தினர் தங்கள் சிறு குழந்தைகளுடன் விளையாடுவதைப் பார்த்து ஏங்கினாள். 'நான் என்ன பாவம் செய்தேன்' என்று தன்னைத்தானே நொந்து கொண்டாள். கொஞ்ச நாட்களில் அவள் மிகவும் மனஅழுத்தம் அடைந்தாள்.
சரளா, ஒவ்வொரு வாரமும் அலுவலகத்திற்கு இரண்டு நாள் விடுப்பு எடுக்க துவங்கினாள். ஒரு மாதத்திற்கு பிறகு, அவளது மேலதிகாரி "உங்களுக்கு அவசியம் எனில், நீண்ட நாட்கள் விடுப்பில் செல்லலாமே" என்று அவளிடம் ஒரு நாள் கூறினார். அடுத்த நாள், ஸ்ரீநிவாஸிடம் கூட தெரிவிக்காமல் சரளா அவளது வேலையை ராஜினாமா செய்தாள்.
அதிர்ஷ்டவசமாக, அவளுடைய பெற்றோர்கள் தங்கள் தொழிலில் நல்ல பணம் சம்பாதித்து வந்ததால் அவளுக்கு பணம் கொடுத்தனர். எனவே, அந்த தம்பதியருக்கு பொருளாதார பற்றாக்குறை என்பதே இல்லாமல் இருந்தது.
சரளா சில ஆன்லைன் பணிகளை எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்தே பணி செய்ய ஆரம்பித்தாள். ஏனோ, அவளால் அந்தப் பணிகளில் கவனம் செலுத்த முடியவில்லை. ஸ்ரீனிவாஸ் தனது அதிகமான நேரத்தை அவளுக்கு வழங்கிய போதிலும் அவள் ஒதுங்கி, அமைதியற்றவளாக உணர ஆரம்பித்தாள். ஒரு முறை ஸ்ரீனிவாஸ் அவளிடம் "சரளா, நீ வேளைக்கு சென்று ஆறு மாதங்கள் ஆகிவிட்டது. மீண்டும் நீ வேலைக்குச் சென்றால் அது ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன்" என்று ஆலோசனை கூறியபோது, சரளா “சான்ஸே இல்லை. அம்மா, உங்களுக்கு எத்தனை குழந்தைகள், ஏன் இன்னும் குழந்தை பிறக்கவில்லை, எப்படி உங்களுக்கு வீட்டில் பொழுது போகிறது?' எனும் பண்பாட்டை கடந்த கேள்விகள் சக ஊழியர்கள் கேட்ட வண்ணம் இருப்பார்கள். இந்தமாதிரி சங்கடங்களை நான் எதிர்கொள்ள விரும்பவில்லை" என்று விரக்தியுடன் விளக்கம் கொடுத்தாள்.
இருவரது பெற்றோர்களும் அவ்வப்போது வந்து சில மாதங்கள் தங்கியதால் சரளாவுக்கு கொஞ்சம் மனமாற்றம் கிடைத்தது. ஆனால், இந்த மாற்றங்கள் அவளுக்கு மன அமைதியையும் மகிழ்ச்சியையும் தரவில்லை.
ஸ்ரீனிவாசன் அறிவுரையின் பேரில், தம்பதியர் ஒரு பிரபல மனநல மருத்துவரிடம் ஆலோசனைக்குச் சென்றனர். சில அமர்வுகளுக்குப் பிறகு, மனநல மருத்துவர் "உங்களுக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருப்பதாக தோன்றுகிறது. நீங்கள் ஒரு குழந்தையைத் தத்து எடுத்துக்கொண்டு வளருங்கள். உங்கள் இருவருக்குமே அது நல்ல மாற்றத்தை கொடுக்கும். குறிப்பாக, உங்கள் மனைவிக்கு குழந்தை இல்லை எனும் மன அழுத்தம் மிகவும் அதிகமாக இருக்கிறது. கால தாமதம் செய்யாமல் இதை செய்யுங்கள்" என்று பரிந்துரைத்தார்.
தம்பதியினர் உண்மையில், குழந்தையைத் தத்தெடுப்பதில் ஆர்வம் காட்டவில்லை. சரளாவே பல முறை ஸ்ரீநிவாஸிடம் " நம் இருவருக்கும் எந்த விதத்திலும் சம்மந்தம் இல்லாத ஒரு குழந்தையை நாம் எப்படி அன்புடனும் பாசத்துடனும் வளர்க்க முடியும் " என்று கூறி ஆதங்கம் கொள்வாள். அப்படி இருந்தும், மன உளைச்சல் மற்றும் மனநலம் உடல்நலம் குன்ற ஆரம்பித்ததால், சரளா இந்த ஆலோசனையை ஏற்றுக்கொண்டாள். ஸ்ரீநிவாஸுக்கும் இந்த ஆலோசனையை ஏற்றுக்கொள்வதை தவிர வேறு வழி தெரியவில்லை.
இருவரும் மூன்று குழந்தைகள் காப்பகத்திற்கு சென்று அவர்களுக்கு பிடித்த குழந்தையை தேடினார்கள். இறுதியில், மூன்று வயது பெண் குழந்தை ‘சாவித்ரி’யை, அவளது அழகான முகத்திற்காக விருப்பப்பட்டு, அவளையே தத்தெடுக்க முடிவு செய்தனர். தேவையான சட்டப்பூர்வ நடைமுறைகளை முடித்து, அவளை வீட்டிற்கு அழைத்து வர கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆனது.
அடுத்த ஆறு மாதங்களுக்குள், இருவரும் சாவித்திரியுடன் நல்ல உறவை வளர்த்துக் கொண்டனர். முதலில் சாவித்திரி அவர்களுடன் சரியாக பழகவில்லை. ஒவ்வொரு நாளும் இருவரும் அவளிடம் மிக அன்பாக பழகியத்தின் விளைவாக, சாவித்ரி தனது புதிய பெற்றோரை விரும்பத்தொடங்கினாள். ஒவ்வொரு நாளும் சரளா சாவித்ரியை கொஞ்சினாள், அவளுடன் விளையாடினாள், தனது அதிகமான நேரத்தை அவளுடன் செலவழித்தாள். சாவித்திரிதான் தங்களின் சிறிய உலகம் என்ற அளவுக்கு இருவரது மன நிலையும் மாறிக்கொண்டு வந்தது. அவளை கவனித்து, உணவளித்து, அவளுடன் விளையாடி, அவளை வெளியே அழைத்துச் செல்ல இருவருமே நீண்ட நேரம் செலவிட்டார்கள். தந்தை மற்றும் தாயுடன் இருப்பதில் சாவித்ரி மிகவும் பூரித்து போனாள். இந்த அன்பும் அக்கறையும் நிறைந்த சூழல் ஒரு வருடத்திற்கு மேல் தொடர்ந்தது.
பின்பு ஒரு நாள், சரளா தனது வயிற்றில் ஒருவித அசௌகரியத்தை உணர்ந்தாள். ஏதோ வயிற்று பிரச்சினை, சரியாகி விடும் என்று நினைத்தாள். ஆயினும், அவள் உள்மனது அவள் ஒரு மருத்துவரை சந்திக்க வேண்டும் என்று உணர்த்தியது. மேலும், மூன்று நாட்களுக்கு மேல் இந்த புதிய அறிகுறிகள் தொடர்ந்ததால், அவள் மருத்துவ பரிசோதனைக்கு சென்றாள்.
அவளை பரிசோதனை செய்த மருத்துவர் "வாழ்த்துக்கள். நீங்கள் தாயகப்போகிறீர்கள்." என்றபோது, சரளாவால் நம்பவே முடியவில்லை. அது கனவு இல்லை என்பதை அறிய அவளுக்கு சில நேரம் பிடித்தது. அதனால், அவள் இன்ப அதிர்ச்சி அடைந்தாள். எதிர்பாராத, ஆனால், ஆச்சரியமான இந்த அறிய செய்தியை கேட்ட ஸ்ரீநிவாஸ், மகிழ்ச்சியில் வாயடைத்துப் போனான். அன்றைய தினம் அந்த தம்பதியினர் மீண்டும் ஒரு முறை தேனிலவில் அனுபவித்ததுபோல் அந்த இரவை அனுபவித்தனர்.
அந்தத் தம்பதிகள் சாவித்திரியை விரும்பி அவளுடன் நேரத்தைக் கழித்தாலும், சரளா கருவுற்ற பிறகு , அவர்களின் அணுகுமுறையில் நுட்பமான மாற்றம் ஏற்பட துவங்கியது. சாவித்திரி அப்போது மழலையர் பள்ளியில் சேர்க்கப்பட்டு, காலை ஒன்பது முதல் பன்னிரண்டு மணிவரை வாரத்தில் ஐந்து நாட்கள் பள்ளி சென்று வந்தாள்.
பிரசவத்திற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு, சரளா தனது பெற்றோரின் வீட்டிற்குச் சென்றபோது, சாவித்ரியின் அம்மா அவளிடம் " சரளாவையும் கூட்டிக்கொண்டு வா" என்று சொன்னதை சரளா அவ்வளவு பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. விளைவு, சாவித்திரி வீட்டிலேயே அவள் விடப்பட்டாள். சாவித்திரியை கவனித்துக் கொள்ள ஸ்ரீனிவாஸின் பெற்றோர் அழைக்கப்பட்டனர். ஐந்து வயதைத் தாண்டிய சாவித்ரிக்கு, இந்த செயல்கள் இனம்புரியாத, சொல்லத்தெரியாத மனக்கசப்பை உண்டாக்கியது.
தனக்குள் வளரும் குழந்தையின் பாதுகாப்பான, ஆரோக்கியமான வளர்ச்சிக்காக சரளா மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டாள். உரிய காலத்தில் அவள், ஒரு ஒளிரும் தாயானாள். இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பாக்கியம் கிடைத்து. குழந்தைக்கு ‘ஸ்ரவன்’ என்று பெயர் சூட்டப்பட்டது. அவர்களின் வளர்ப்பு மகள் சாவித்திரிக்கு ஆறு வயது முடிந்து ஏழாவது துவங்கியது.
சரளா, குட்டி ஸ்ரவனுடன் வீடு திரும்பியதும், சாவித்திரி அவர்களைப் பார்த்து பூரித்து மகிழ்ந்தாள். தன் குடும்பத்தில், ஒரு புதிய நபரின் வருகையைக் கண்டு அவள் துள்ளிக் குதித்து நடனமாடினாள். விரைவிலேயே அவள், தனது அழகான இளைய சகோதரனுக்கு அன்பையும் பாசத்தையும் கொடுக்க ஆரம்பித்தாள்.
ஆரம்ப நாட்களில் தம்பதியினர், இரு குழந்தைகளையும் ஒரே மாதிரியாக கவனித்து வந்தனர். ஆனால், சில மாதங்கள் கழிந்த பின், இவர்களது கவனிப்பில் சிறிது சிறிதாக மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தன. ஸ்ரீனிவாஸும் சரளாவும் ஸ்ரவனை மிகவும் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டபோது, சாவித்திரியின் மீதான அக்கறையும் அன்பும் மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது. எந்த நேரத்திலும், ஸ்ரவனுக்கு அதிக கவனம் செலுத்தினார்கள். ஆறு மாதங்களுக்குள், சிறுமி சாவித்ரி தனது மேல் பெற்றோர்களின் அக்கறையும் அன்பும் அதிக அளவில் குறைந்துவிட்டது என்பதை நன்றாக உணர்ந்தாள்.
ஏழு வயதை நெருங்கும் சாவித்ரியின் மென்மையான இதயம் இந்த பாகுபாடுகளை கவனித்து உணர்ந்தாலும் அவளது ஏமாற்றத்தையும் சோகத்தையும் அந்த மென்மையான சிறுமிக்கு யாருடனும் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. சாவித்திரியால் புரிந்து கொள்ள முடிந்ததெல்லாம், ஸ்ரவன் தான், அவளுடைய பெற்றோரின் முதன்மையான முன்னுரிமை என்பது மட்டுமே.
சாவித்ரியின் மனநிலை நாளுக்கு நாள் மாறத் தொடங்கியது. ஸ்ரவனின் முதல் பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நிகழ்வில் ஸ்ரீனிவாஸ் மற்றும் சரளா சாவித்திரியை நன்றாக கவனித்தார்கள். அதன் பிறகு, அக்கறை மற்றும் அன்பையும் பாசத்தையும் அவர்கள் ஊற்றிய போது, சாவித்திரிக்கு கிடைத்த பாகம் மிகவும், மிகவும் குறைவே. துரதிருஷ்டவசமாக ஸ்ரீனிவாசும் சரளாவும், அவர்கள் சாவித்திரியை இரண்டாம் தரமாக நடத்துகிறோம் என்பதை கவனிக்கத் தவறிவிட்டனர்.
சாவித்திரிக்கு இரண்டாம் வகுப்பு முடிந்து, கோடை விடுமுறை துவங்கியது. பொம்மைகள், உடைகள் வாங்குவது மற்றும் நேரத்தைச் செலவிடுவது முதல், அந்த தம்பதியினர் சாவித்திரிக்கும் ஸ்ரவனுக்கும் இடையே பாகுபாடு காட்டினார்கள். பல முறை, தம்பதியர் வெளியில் செல்லும் போதெல்லாம், சாவித்திரியை வீட்டில் விட்டுவிட்டு ஸ்வரனை மட்டும் அழைத்துச் சென்றனர்.
ஸ்ரவனுடன் அவள் விளையாடி மகிழ்ந்தாலும், அந்த அப்பாவி இதயத்தில் பெற்றோரின் நடத்தையில் உள்ள வித்தியாசத்தை நினைத்து நினைத்து வருத்தம் அடையாமல் இருக்கமுடியவில்லை. அவளை அறியாமலேயே முகம் வாடினாள். சில நேரங்களில் அவள் அழுதாள், ஆனால் தனிமையில். இளவயது என்றாலும் அவளிடம் ஒரு முதிர்ச்சி இருந்தது. இருப்பினும் அவள் ஒரு சிறுமிதான். அவளால் என்ன செய்ய முடியும்?
ஒரு நாள், சாவித்திரியின் நலம் விசாரிப்பதற்காக, முன்னர் அவள் வளர்ந்து வந்த அனாதை இல்லத்தைச் சேர்ந்த இரண்டு மூத்த உறுப்பினர்கள் வீட்டிற்கு வந்தனர். சாவித்திரி நலமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாகவும், ஸ்வரனை போலவே தாங்கள் அவளையும் கவனித்துக்கொள்வதாகவும் தம்பதியினர் தெரிவித்தனர். சாவித்திரி அப்போது எதுவும் பேசவில்லை. அனாதை இல்ல உறுப்பினர்கள் பேசிமுடித்து கிளம்புகையில், சாவித்திரி அவர்கள் பெற்றோரிடம் " நான் ஒருமுறை இந்த அனாதை இல்லத்திற்குச் செல்ல விரும்புகிறேன்" என்று சொன்னாள். பெற்றோர் அனுமதித்தால், சாவித்திரியை அனாதை இல்லத்திற்கு அழைத்துச் சென்று, அன்று மாலையிலே மீண்டும் வீட்டில் அவளை விட்டுவிடுவதாக அந்த உறுப்பினர்கள் ஸ்ரீனிவாஸிடம் கூறினர். ஒரு நாள் என்பதால், தம்பதியினர் அதற்கு ஒப்புக்கொண்டனர். சாவித்திரி, உள்ளே சென்று ஸ்ரவனை முத்தமிட்டாள். சரளாவும் ஸ்ரீநிவாஸும் அவளை முத்தமிட்டபோது, அவளும் பதிலுக்கு அவர்களுக்கு முத்தம் கொடுத்தாள்.
அன்று மாலை சாவித்திரி வீடு திரும்பவில்லை. அனாதை இல்லத்திலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது ஸ்ரீநிவாஸுக்கு. சாவித்திரி அனாதை இல்லத்தில் உள்ள குழந்தைகளுடன் இரண்டு நாட்கள் செலவிட விரும்புவதாகவும், அதன் பிறகு அவளை வீட்டில் விட்டுவிடுவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த செய்தி கேட்டு சரளாவும் ஸ்ரீநிவாஸும் சிறிது ஆச்சரியம் அடைந்தாலும், சரி மூன்று நாட்கள் தானே என்று விட்டுவிட்டனர். மூன்று நாட்கள் கடந்தன.
சரளா அனாதை இல்லத்திற்கு போன் செய்து, "சாவித்ரியை எப்போது வீட்டிற்கு கூடி வருகிறீர்கள்" என்று விசாரித்தாள். அனாதை இல்லத்திலிருந்து பேசிய செயலாளர் "சாவித்ரி, இங்குள்ள குழந்தைகளுடன் மிகவும் பிரியமாக அன்பாக இருக்கிறாள். நீங்கள் அனுமதி தந்தால், இன்னும் சில நாட்கள் அவளை இங்கு வைத்திருந்து பின்னர் அனுப்பிவிடுகிறோம்" என்றார். சரளா, தொலைபேசியை துண்டித்துவிட்டு, அன்று மாலையே ஸ்ரீநிவாஸுடன் அநாதை ஆஸ்ரமம் சென்றாள்.
செயலாளரிடம் சென்று "ஒரு நாள், மூன்று நாட்கள் என்று சொல்லிவிட்டு இப்போது ஏன் அவளை வீட்டிற்கு அனுப்பிவைக்காமல் இருக்கிறீர்கள்? சாவித்ரியை உதிரி உடைகள் கூட இல்லாமல் அனுப்பிவிட்டேன். இப்போதே அவளை எங்களுடன் அனுப்பிவையுங்கள் "என்று கொஞ்சம் கடினமாகவே தெரிவித்தாள். செயலாளர் அமைதியாக அங்குள்ள பணியாளரிடம் "போய், சாவித்ரியை கூட்டிக்கொண்டு வா" என்றார். சிறிது நேரத்தில் சாவித்திரி வந்தாள். சரளா அவளை அணைத்து முத்தம் கொடுத்து "செல்லமே, எங்களை விட்டு எப்படி நீ இவ்வளவு நாள் தனியாக இருக்கிறாய்?" என்று கேட்டாள்.
சாவித்திரி அமைதியாக பதிலளித்தாள் “அம்மா, இரண்டு வருடங்களாக உங்கள் அன்பையும் பாசத்தையும் கொடுத்ததற்கு நன்றி. உங்கள் இருவரையும் நான் ஒருபோதும் மறக்கமாட்டேன். தற்போது நான் இங்கு தங்குவது எனக்கு திருப்தி அளிக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். நான் இங்கே நன்றாகவே நடத்தப்படுகிறேன்; நான் இங்கே என் நண்பர்களுடன் விளையாடுகிறேன். விடுமுறை முடிந்து என்னை மீண்டும் பள்ளிக்கூடத்திற்கு படிக்கச் அனுப்புவதாக இங்கே உறுதியளித்துள்ளார்கள்."
சரளா, மிகவும் வருத்தத்துடன், “சாவித்ரி செல்லம், நீங்கள் எங்கள் முதல் குழந்தை. உன்னை பார்க்கவும், புன்னகைக்கவும், அவனை நீ பார்த்து உற்சாகப்படுத்தவும் குட்டி ‘ஸ்ரவன்’ அங்கும் இங்கும் உனக்காக பார்த்துக்கொண்டே இருக்கிறான். தயவு செய்து உன் மனதில் எதையும் வைத்துக் கொள்ளாதே. உன்னை கொஞ்சம் கவனிக்காமல் இருந்தோம் என்பதற்கு நாங்கள் இருவரும் மிகவும் வருந்துகிறோம். இப்போதிலிருந்து உன்னை என் வயிற்றில் பிறந்த மகள் போல பார்த்துக்கொள்வேன். உடனே புறப்பட்டு வா எங்களுடன்" என்றாள்.
சாவித்திரி அவர்களிடம் கடைசி முறை பேசினாள் “அம்மா, என்னைத் திரும்ப அழைத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை மறந்து விடுங்கள். நான் உங்களுடன் திரும்ப எனக்கு விருப்பமில்லை. தயவுசெய்து இனிமேல் நீங்கள் இங்கு வரவேண்டாம். நீங்கள் ஸ்ரவனுடன் மகிழ்ச்சியாக இருங்கள்".
ஸ்ரீனிவாஸ் சரளா வாழ்க்கையில் ஸ்ரவன் இருந்தான். அவர்கள் வாழ்க்கையில் பூத்த இருமலர்களில், ஒரு மலர் வாடி, கருகி, வெம்பி மறைந்து போனதை அவர்கள் வாழ்நாளில் மறக்கமுடியுமா? அவர்கள் அந்தச் சிறிய பெண்ணிடம் காட்டிய பாரபட்சமான நடவடிக்கைகளை மறுக்க முடியுமா? இரண்டு ஆண்டுகள் சொந்த குழந்தையைப்போல கொஞ்சிக்குலாவிவிட்டு, சூழ்நிலை மாறியவுடன் முதலில் வந்த குழந்தையை தூரத்தில் வைத்து நடத்தி, அதன் மூலம் அக்குழந்தையை பிரிந்த அவர்களது ஈனமான செயலை, அவர்களாலேயே மன்னிக்கமுடியுமா?

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (26-Jul-24, 3:26 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 86

சிறந்த கவிதைகள்

மேலே