இகழ்தல் இலமே

கடும் கோபத்தில்
வானத்தையும் பூமியையும்
புரட்டிப் போட நினைக்கிறார்கள்
வானத்தையும் பூமியையும்
புரிந்து கொண்டாலே
தீர்ந்து விடுகிறது பிரச்சினைகள்

தான் மட்டுமே எல்லாம்
என காட்டிக் கொள்கிறார்கள்
எல்லை இல்லாத வானம் கூட
கொஞ்சத்தை தான் காட்டுகிறது

யாரையும் தனக்கு கீழேயே
வைத்திருக்க ஆசைப்படுகிறார்கள்
நீங்கள் அன்பைப் பொழியும்
வானமாக இருந்தால்
கீழே இருப்பதில்
பூமிக்கு பிரச்சினை இல்லை

தன்னைத் தவிர
மற்றவரை எல்லாம்
முட்டாள்களாக பார்க்கிறார்கள்
மருத்துவமனையில்
பைத்தியக்காரன் ஒருவன்
தன்னைத் தவிர
மற்றவரை எல்லாம்
பைத்தியம் என்பது போல

நமக்கு மேலும் இருக்கிறார்கள்
கீழும் இருக்கிறார்கள்
சுழலும் போது
மாறித் தான் ஆக வேண்டும்
பூமி ஒரு உருண்டை தானே

- கி.கவியரசன்

எழுதியவர் : கி.கவியரசன் (2-Sep-24, 1:55 pm)
சேர்த்தது : கி கவியரசன்
பார்வை : 40

மேலே