நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் - 2

பாக்குவைத்து பரிசம்போட்டு
பருவமங்கை கரம்பிடித்து

பள்ளிகொள்ள வருவேனென்று
பலமுறை சொல்லிச்சென்றாரே!

பச்சைவாழை பந்தலிட்டு
பந்திசோறு ஆக்கிவைத்து

பார்வையது பூத்திருக்க
பலகதைகள் வந்துசொன்னாரே!

தட்சணையாய் சொன்னபணம்
தாம்பூலம்ஏறி நின்றால்தான்

தாலிகட்ட முடியுமென்று
தங்கமகன் தீர்க்கம்கொண்டாரே!

"ஸ்ரீதேவி" நீயென்று
சிரித்துசிரித்து பேசியவர்

சீதனங்கள் தந்தால்தான்
சிறக்கும் வாழ்வதுஎன்றாரே!

கடனாக கேட்டப்பணம்
கண்ணாம்பூச்சி ஆடியதால்

கைபிசைந்து தகப்பன்நிற்க
கல்யாணம் நிறுத்திச்சென்றாரே!

மணவாளன் கரம்பிடித்து
மருவீடு செல்வேனென்ற

மகராணி நினைப்பெல்லாம்
மண்ணாகி போனதே!

எழுதியவர் : நா. தியாகராஜன் ஈஞ்சம்பாக்கம், சென்னை (3-Sep-24, 5:16 am)
சேர்த்தது : TPRakshitha
பார்வை : 55

புதிய படைப்புகள்

மேலே