என் அறம் எதுவெனில் -2

"ஈதல் அறம்" என்றாள்
மூதுரையின் மூதாட்டி

ஈன்றவரை இன்முகத்தோடு
ஏந்தலே என் அறமென்பேன்

ஊன்றுகோல் துணைகொண்ட
ஊமைமொழி பெற்றோர் தவித்திருக்க

ஊருக்கு சோறிடுவதால் - எந்தன்
ஊழ்வினை என்ன தீர்ந்திடுமா?

அள்ளியள்ளி அடுத்தவருக்கு - நான்
அளித்தாலும் அறமென்று ஆகிடுமா?

செய்ந்நன்றி கொன்ற மகற்கு
உய்வில்லை - செழுமை அறம் அதுவன்றோ?

சேர்முலையில் பால்சொறிந்து - என்னை
செதுக்கியவள் தாய் தானே!

நேர்வழியில் கால்பதிக்க - எனக்கு
நிறுத்துக்குறி இட்டவனும் தகப்பன்தானே!

தள்ளாத வயதினிலே
தாய், தந்தை பேணுதலே
தமயன்நான் கொண்ட
தலைமை அறம் என்றேன்

தமிழ்பால் உண்ட சங்கமூதாட்டியே - என்
தத்துவம் தவறென்று சொல்லவும் துணிவாயோ?

எழுதியவர் : நா. தியாகராஜன் ஈஞ்சம்பாக்கம், சென்னை (4-Sep-24, 4:46 pm)
சேர்த்தது : TPRakshitha
பார்வை : 29

மேலே