இன்று சர்வதேச உணவு தினம்
இன்று உலகில் 28 கோடி மக்கள் பட்டினி
உலகம் இயற்கை சக்தியினால் இயங்குகிறது
நமது உடல் உணவு உண்டு உயிர் வாழ்கிறது
கல்வியின்றி பொருளின்றி ஒருவர் வாழலாம்
உணவின்றி எந்த உயிரேனும் வாழமுடியுமா?
செல்வந்தர்கள் பசியின் கொடுமை அறியார்
எண்ணற்ற ஏழைகள் உணவையே அறியார்
பொன் பொருளின்றி நாடுகள் இங்கில்லை
பசியே இல்லாத நாடுகளும் உலகிலில்லை!
உணவுக்காக உணவு ஆரோக்கியம் தராது
உடல்நலம் காத்திடும் உணவுபோல வராது
போஷாக்கு தாராவிடில் அது உணவாகாது
கொழுப்பு மட்டுமே இருப்பின் நலம் தராது
இயற்கைச் சார்ந்து இயங்குவது விவசாயம்
அளவுக்கதிகம் உழுதால் நிலத்திற்கு காயம்
செயற்கை மருந்தினால் செயற்கை ஊக்கம்
அளவற்ற தரமற்ற உரம் பயிரையே தாக்கும்
கலப்பை பிடித்தவன் டிராக்டரில் உழுதாலும்
வானம் பொய்த்தால் விளைச்சல் பொய்க்கும்
நீர்ப்பாசனம் வளமெனில் பயிரும் தழைக்கும்
அளவுகடந்த மழை, பயிர் எப்படி பிழைக்கும்?
எல்லோரும் எல்லாமும் பெறுதல் மிகவும் சிறப்பு
சிலரே யாவையும் கொள்ளுதல் நீதிக்கு எதிர்ப்பு
சுயநலம் பேராசைகளுக்கு வைப்போம் நெருப்பு
அப்போதுதானே அனைவர்க்கும் உணவு இருப்பு
வீடு வெளிகளில் உணவை விரயம் செய்யாமல்
வாடுகின்ற வறியவர்க்கு அன்புடன் இடுவோம்
திடமான ஊட்டம் நிறைந்த உணவு உண்போம்
உணவற்ற உயிர்கள் பசியாற பிரார்த்திப்போம்
தனியொருவனுக்கு உணவு இல்லை என்றால்
ஜகத்தினை அழிப்போம் என்றார் பாரதியார்
ஐக்கியநாடுகள் இதைச் செயல்படுத்தட்டும்
அதை பாரதம் செய்யாவிட்டால் வேறு யார்?