தீ
தீ
__________________________________ருத்ரா
உன் வயது விளிம்பில்
காதலுக்கு அர்த்தம் சொல்ல
வானவில்லும்
பட்டாம்பூச்சியும் போதும்.
காதல் எனும் சாதல் பற்றி
சிதையில் வெந்து வெந்து
எழுந்திருக்க
ஒரு கவிதை வேண்டுமே.
எழுதினான்.
இதயத்தின் ஆழத்துள் மூழ்கி
சொற்களின் கருப்பொருள்
நுழைந்து கவிதை எழுதினான்.
அனுப்பினான்.
அவளுக்கு கிடைத்தது.
ஆனால் அவளுக்கு வெறும்
காகிதமாகத்தான் அது தெரிந்தது.
ஆழம் தெரியவில்லை.
துடிப்பும் உணரவில்லை.
ஏதோ எழுத்துக்கள்
கம்பளிப்பூச்சிகளாய் ஊர்ந்தன.
அவளும் படித்தவள் தானே.
ஆனால் காதலை
அவன்
ஆசைத்தீயில் கருகிச் சாகும்
சாதலாக அல்லவா
எழுதியிருந்தான்.
அந்தத்தீயில் கருகிச்சாம்பலான
அந்த ரோஜாவை
அவள் பார்க்க முடியவில்லை.
அவளுக்குத் தெரிந்ததெல்லாம்
சிரிப்பு தான்.
அவனை அந்த தீக்குளியில்
தள்ளியதும் அவள்
சிரிப்பு தான்.
அது அவனுக்கு
தேன்.
ஆனால் அதுவே அவனுக்கு
இனிக்கும் தீ ஆனதால்
எழுத்துக்கள் எல்லாம் தீக்கொழுந்துகளாகின.
அந்த அக்கினியின் அதிர்வு எண்களில்
அவள் இன்னும் யாழ் மீட்டவில்லையே.
இப்போதும் அவளுக்கு தெரிந்தது
சிரிப்பு தான்.
அவள் சிரித்துக்கொண்டாள்.
அவள் சிரித்துக்கொண்டே இருந்தாள்.
_______________________________________________