காதலும் காமமும்
ஒரே மெட்டுக்கு நான் எழுதிய வேறு வேறு பாடல் வரிகள்
பல்லவி
விழியில், மனதில், உயிரில்
யாவும் நீ தானடி - இங்கே
இரவின் மடியில், காமன் பிடியில்
நான் தானடி
பார்த்து ரசித்த அழகை அள்ளி
நான் பருகவா
முத்த மழையில் முழுதாய் உன்னை
நான் நனைக்கவா
உன் பார்வை போதை - கண்டேன்
சொர்க்கம் செல்ல பாதை
அடக்கி வைத்த ஆவல் - இனி
தொடரும் அத்து மீறல்
இரவுதான்
வண்ணமாய்
மாறி போகுதே . . . .
(விழியில்)
சரணம்
இதுவரை தோன்றாத
உணர்வுகள் தான்
உன் விரல் பட்டாலே
துளிர் விடுதே
இதுவரை காணாத
புது மயக்கம்
உன்னிடம் புதிதாக
முளைக்கிறதே
உன் அழகே போதும் - இங்கே
என் பசியும் தீரும்
உன் இதழ்கள் தீண்ட
பேராசைகள் கூடும்
உன் தேகம் யாவும்
என் விரலும் கடந்து போகும்
தவணை முறையில் முத்தம்
தொடரும் நித்தம் நித்தம்
கனவு தான்
நிஜமென
என்று மாறுமோ ?
(விழியில்)
சரணம் 1
இலக்கண பிழை இல்லா
புதுக்கவிதை
படித்திட நுழைந்தாலே
பள்ளி அறை
மூன்றாம் பால் நிறைந்த
புது உலகை
சேர்ந்தே ரசித்திட தான்
அவள் வருகை
முத்தங்கள் கொண்டே - இங்கே
யுத்தங்கள் தோன்றும்
சத்தங்கள் இன்றி- முனங்கல்
சங்கீதம் நீளும்
ஆடைகள் கூட - இனி
பாரங்கள் ஆகும்
அச்சம் மடம் நாணம்
யாவும் விடுப்பினில் ஓடும்
காமனின்
கோவிலில்
நித்தம் பூஜை தான்
Ver ௦௨
பல்லவி:
காதலோடு காதலோடு
உன் பார்வை தான் - இங்கே
ஆவலோடு ஆவலோடு
என் சாலை தான்
ஆசையோடு ஆசையோடு
நம் நாட்கள் தான்
பேராசையாலே நீளம் கூடும்
நம் பாதை தான்
உன் பார்வை போதும் - இங்கே
என் ஜீவன் வாழும்
உன் நிழலில் நானும் - என்றும்
இளைப்பாற வேணும்
ஆதலால்
காதலால்
நீயும் கூடவா ...
சரணம்
இதுவரை முகவரி தான்
தனி தனியாய்
இனி என் முகவரியாய்
உன் விழி தான்
இதுவரை ஆவல் தான்
விடுமுறையாய்
இனி நம் கூடல் தான்
தொடர் கதையாய்
விண்ணோடு நாமும் - சேர்ந்து
கடக்கின்ற நேரம்
விண்மீன்கள் எல்லாம் - மெல்ல
தீண்டிதான் பார்க்கும்
நிலோவோடு நீயும் - கொஞ்சி
சிரித்து பேசும் அழகை
சுழலும் பூமி சற்றே - நின்று
பார்த்தேன் தான் ரசிக்க
மேகமே
மெத்தைதான்
நாமும் துயிலவே...
Ver 03
பல்லவி:
காதல் மழையை நீயும் பொழிய
நான் நனைகிறேன்
இரு விழியின் வழியே நீயும் நுழைய
நான் ரசிக்கிறேன்
மனதில் நீயும் குடிசை போட்டு
குடியேறினாய்
என் உதிரம் யாவும் சேர்ந்து நீயும்
பாய்ந்தோடினாய்
தன்னாலே கால்கள். - ஏனோ
உன் பின்னே அலையும்
உன்னாலே யாவும்
பேரழகாய் மாறி போகும்
கவிதையாய்
நீயடி
படித்து ரசிக்கிறேன்
சரணம் :
கயல் உன்னை சேராமல்
எழில் இல்லையே
காதல்தான் இங்கே தான்
பெரும் தொல்லையே
கயல் விளையாடாத
தரிசெனவே - உன்னை
காணா நிமிடங்கள்
வரண்டிடுமே
உன் விரலை நானும் - பிடித்து
நடக்கின்ற நேரம்
தாய் அன்பு வீசும் - பாசம்
உன்னிடத்தில் தோன்றும்
உன் பார்வை போதும் - என்றும்
என் ஆவல் தீரும்
என் அறைகள் தோறும் - சுகமாய்
உன் வாசம் நிறையும்
வாசமாய்
உன் வாசம் தான்
சந்தோஷம்தான்
ந.சத்யா