ப்ரியப்பட்ட டேஷ் - 09
ப்ரியப்பட்ட டேஷ் - 09 (டைரி 2004)
பற்றிக்கொள்ள தாமதித்துப்போன
உன் கரங்களை இழந்துவிட்டதாய்த்தான்
இதுவரை தவித்திருந்தேன்.
ஒரு நீல இரவில்
படிக்கல்களைக் கடந்து
இதேப் பிழையானவனிடம்
மீண்டும் உன் கைக்கோர்க்கிறாய்.
எத்தனைமுறைதான் மன்னிப்பாய் ம் ?
உன்னிடம் ஒன்றைச் சொல்கிறேன்,
அழகிய நிலவை
உன் பக்கத்தில் துணை இருத்தி
அதன் சாட்சியாக
ஒரு சத்தியம் செய்கிறேன்,
நிறைவேற்றியேத் தீரவேண்டுமான
உன் வாக்குறுதிகளை
என்கைகளிடம் நீ அளிக்கிறபோது,
என் சத்திய சந்தங்களை
சரிசெய்ய போதுமான உறுதியோடுதான் மிச்சமிருக்கிறேன்.
கடலின் அலைகளை அவதானித்தல்,
ஒரு கலவியில்
உன்னோடு என்னை ஈடுபடுத்திக் கொள்ளுதல்,
இரகசியமாய்
இதயத்தில் பூட்டிவைத்த
ஒருவரிடம்
உணர்வைப் பகிர்ந்துகொள்ளுதல்,
அல்லது
நீதான்
என் வருங்கால இலட்சியமென்னும்
மனமிருத்தலை மறந்துவிடுதல்,
என
இப்படித்தான் வரும்போக்குகளாக
காலம் என்னை உன்னிடம்
அறிமுகம்
நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.
உண்மை
அகால மரணத்தைவிட
கொடியது.
துன்பம் அல்லது கடுமையான வருத்தத்தின் வலி
சரியான நேரத்தில் வெளிப்படாமல்போனால்,
ஒப்புக்கொள்கிறேன்.
நான் எப்பொழுதும்
உன்னை இழந்துவிடுவேன் என்று.
அரிதாக இருந்த வாய்ப்புகளைத் தவறவிட்டதற்காக
ஒரு சிட்டிகை வருந்திய எனக்கான நேரமிது.
அவை மீண்டும் நிகழாது என்பதை அறியும் அளவுக்கு
இனி என் சூழலை
மாற்றி அமைத்துக்கொள்கிறேன்.
ஆனால் நீமட்டும்,
உன்னைத் திடும்பிப் பார்க்கும் வாய்ப்பினை
இன்னொருமுறை எனக்குக் கொடுப்பாயா ம் ?
பைராகி