மழையில் நனைந்த வெயில்

தண்ணீர் கரைந்து
மேகமானது
மேகம் கரைந்து
மழையானது...

வானம் கருக்க
வனங்கள் இருண்டது
மாலை வேளையில்
மழையும் பெய்ததால்
வெயிலும் நனைந்தது....

நுரைகள் மோதி
கரைகள் கரைந்தது
கரையில் மோதி
நுரைகளும் கரைந்தது....

மரங்கள் நனைய
மலர்கள் சிரித்தது
சிரித்த மலர்களை பார்த்து
சிலிர்த்து கொண்டது தென்றல் காற்று....

பறவைகளின்
சிறகுகள் போர்வையாக
நின்றே தூங்கியது
பகல் வேளையிலும்....

மழை நின்றது
இடி சத்தம் கூட ஓய்ந்தது
ஆனாலும் நிற்காமல் தொடர்ந்தது
சில தவளைகளின் சத்தம்...

மேக மழை முடிய
மர கிளைகள்
மழை பெய்ய தொடங்கியது
சொட்டு சொட்டாக....

தலையில் விழுந்த
மழை நீர்
உருண்டோடி
துடைத்து விட்டது
விவசாயியின் கண்ணீரை....

கையிரண்டில்
காளை மாடுகள்
கலப்பையோடு
விதையாக்கபட்டது
வறுமையிலும் விர்க்கபடாத
விதை நெல்....

மழையால் ஊரே
நிறம் மாறிப்போனது
பச்சை நிறமே
போர்வையானது....

குளிர் காற்று
குடிசையில்
கும்மாளம் போட
அர்த்தமற்று போனது
மின் விசிறி காற்று....

மழையால் மகிழ்ச்சி
மண்ணுக்கும்
மனிதனுக்கும்.....

மழையே நீ
இன்னும் சில நாள்
இங்கே தங்கி போனால்
சொல்லாமல் போய்விடும்
தண்ணீர் பஞ்சம்....

அலையா விருந்தாடியாய்
நீயே வந்தாய்
நாங்கள் அழைக்கும் போதும்
அடிக்கடி வந்துவிட்டு போ...

எழுதியவர் : பாலமுதன் ஆ (10-Nov-11, 5:09 pm)
பார்வை : 326

மேலே