அடைமழை......
அடைமழை பெய்யுது.
நனையாம இருக்க குடை தூக்க முடியல
புயல் காத்து வீசுதே
நான் என்ன செய்ய?!
நனைஞ்சா கூட பரவாயில்ல
முடிஞ்ச அளவு நடந்து பாத்தேன்
முழங்கால் அளவு தண்ணியில
பள்ளம் மேடு தெரியலயே
நான் என்ன செய்ய?!
ஒதுங்கி நிக்க
பள்ளிக்கூடம் கூட
பக்கத்துல இல்ல
விழுந்தாலும் பரவாயில்ல
வீராப்பா நான் நடந்தேன்..
சாக போற வயசுல
கிழவனுக்கு ஏன் இந்த வேல
என்ன பாக்குறவங்க
கேட்கலாம்,
அதான்
சாக போற வயசுன்னு சொல்லிட்டியளே
இருந்தா என்ன
செத்தா என்ன
அட இருந்தாலும் நான் நடந்தேன்...
இந்த வழியா போனா
என் மகனோட பங்களா வரும்..
பால்கனில நின்னு
பேர புள்ளைங்க
மழையோட விளையாடுறத
தூர நின்னாவது பாத்துரனும்,
அதனால நான் நடக்குறேன்..
இன்னக்கி ஞாயித்து கிழம
கொஞ்ச நேரம் வெளிய போயிட்டு வரசொல்லி
இடைவேள விட்டாக
நான் இருக்குற
முதியோர் இல்லத்துல....
~~தாகு