பெண்ணில் எது அழகு?


ஏழு நிறங்களுமில்லை
ஏழு நிறங்களில் ஒன்றுமில்லை
மறையாத வானவில் காண்கின்றேன்,
புருவம் வில்பாய்ச்சி இழுக்கும்போது.

கருமை ஒளிமூலம் கண்டிருக்கிறீரோ?
விழிக்கரு குறுக்கிலும் நெடுக்கிலும் நகரும்போதும்
அதை விழிஇமை தடுத்தும் விடுத்தும் காக்கும்போதும்.

கூந்தல் வகிடின் பாதையில்
நாளும் நடந்திட துடிக்கிறேன்.
மல்லிகை வாசத்தின் தேசத்தில்.

உன்னுடற்பாற்கடலின் வெளிப்படும் அமுதல்லவா
நெற்றியின் வியர்வைத் துளிகள்.
சிந்தப்பட்டனவோ நிலத்தில்
பார்! இறவாமல் இயங்குகிறது பூமி.

மாலை இளஞ்சூரியனின் வண்ணம் உதட்டில்
முத்தமிட துடிக்கிறது கருங்கடல் மனம்,
தொடுவான நிஜம் போலவே.

பருத்திக்கு வருத்தமில்லை
இறந்தும் வாழ்கிறது
உன் தேகத்தின் உடையாய்.
வருத்தம் எனக்குத்தான்
உன்மாதொருபாகனாய் மாறிடும்
தருணம் அறியாமல்.

வாய் உதிர் சங்கீத குரல்நாண்
ஒரு பொன்னிறச் சங்கில்.
மங்கி தெரியும் உண்மை முத்துமாலைகள்.

உண்மையில் இருக்கிறதா இல்லையா
தெரிந்திட துடிக்கிறேன்.
அதனால் மெல்லிடை மறைக்கும் உன்
உடைக்கும் எச்சரிக்கை விடுக்கிறேன்.

அழகு சொல் துவங்குவது 'அ'னாவில்
அழகு துவங்குவது உன்னில்
ஓ! தமிழ் துவங்கியது உன்னிலிருந்துதானா?

எத்தனை எத்தனை அழகுகள் பெண்ணிடம்
எண்ணிலடக்குமா கணிதம்
சொல்லில் விலக்குமா தமிழ்.

அத்துனை அழகிலும் சிறந்தது எது?
நொடிக்கொருதரம் மனம் தொடுக்கும் வினாஇது.

தந்தை சொன்னார்
சொன்னது அனைத்தும் அழகுதான்
சிறந்தவை கேட்பின்!

பூமலர்ந்ததாய் சொல்வார்கள்
பருவம் வந்தவளை,
பின்னாளில் பறிக்கப்படப்போவதால்
என்னவோ.

பார்! நீரே இல்லையோ நிலவுப்பெண்ணிடம்
காலம்காலமாய் கண்ணீரை வாரியிரைத்ததால்.

சூரியன் ஏனோ ஆண்பாலாய் கொள்ளப்படுகிறது
அனைத்து கோள்களையும் பெற்றெடுத்தும்.

ஆண் மட்டும்தானே ஆண்
மற்றவையாவும் பெண்ணேயல்லவா,
கல் உள்பட, தனைஉடைத்திநும்
அழகோர் சிற்பம் ஈனுதலில் .

முதலில் பிறந்தது ஆணா பெண்ணா?
தெரியாத உண்மைதான் இது.
இருப்பினும்,
அத்துனையும் அழகுதான் பெண்ணில்
சிறந்தது கேட்பின்!

மனிதப் பயணம் தொடங்குவது
துளையில், வலி மட்டும் பெண் பொறுக்கையில்.

வெண்மை நிறத்தில் ரத்தம் கசிந்திடும்
அவள் தனங்களில்.

நோயுண்டு பார்த்தால் அறிவோம்
கால் அமுக்கும் அவள்
உள்ளங்கை அழகை.

காது கொடுத்து கேட்டால் தெரியும்
அவள் காதோர நரைகள் சொல்லும்
வாழ்வின் அனைத்து நிலைகளை.

கேட்டுக்கொண்டே இருந்த தாத்தா சொன்னார்,

ஒவ்வொரு அணுவும் பெண்ணிடம் அழகடா!
ஆனாலும்,
உன் தள்ளாத வயதில்
நீ முடியாமல் இருக்கையில்
உன் மூத்திரத்தை அள்ளுபவளுக்கு
எது அழகென்று
நீ எண்ணுகிறாயோ
அதுவே சிறந்தது என்று.

சொன்னதும்
சுவற்றில் சாய்ந்து
இரும்புருகி கண்ணீர் ஆவதுபோல்
தாரை தாரையாய் கண்ணீர்விட்டு அழுதார்,
தன இறந்த மனைவியின் நினைவினூடே.

செந்தில் குமார்



எழுதியவர் : செந்தில் குமார் (21-Nov-11, 5:05 pm)
பார்வை : 959

மேலே